17 May 2013

பூலான்தேவி வாழ்க்கை வரலாறு - 1 (வாழ்க்கையை சீரழித்தவர்களை பழிவாங்க கொள்ளைக்காரியாக )

வாழ்க்கையை சீரழித்தவர்களை பழிவாங்க; கொள்ளைக்காரியாக மாறிய பூலான்தேவி


 

பிறப்பு :  ஆகஸ்டு 10, 1963
                   கோர்கா கா பர்வா, உத்தரப் பிரதேசம், இந்தியா

இறப்பு :  ஜூலை 25 2001      - புது தில்லி,இந்தியா

பணி    : கொள்ளை (பேண்டிட் குயின்),அரசியல்வாதி

வாழ்க்கைத் துணை :  உம்மத் சிங்

பூலான் தேவி (ஆகஸ்டு 10, 1963- ஜூலை 25, 2001), கொள்ளையரசி அல்லது பேண்டிட் குயின் என்று பலராலும் அழைக்கப்படும் இந்தியாவின் பிரபலக் கொள்ளைக்காரியும் பின்னாளில் அரசியல்வாதியுமாக இவர் அறியப்படுகிறார்.

உத்தரபிரதேச மாநிலத்தில் சாம்பல் பள்ளத்தாக்கு பகுதி கொள்ளையர்களின் கூடாரமாக விளங்கியது. பலரது தலைமையில் கொள்ளை கோஷ்டிகள் இயங்கி வந்தன. இவற்றில் சில கொள்ளைக்கும்பல்கள் பெண்ணை தலைவியாக கொண்டு செயல்பட்டன.

இதுபோன்று சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு அதிபயங்கர கொள்ளைக்காரியாக விளங்கியவள்தான் பூலான்தேவி. அவளது வாழ்க்கை வரலாறு பாண்டிட் குயின் என்ற பெயரில் சினிமாப்படமாக வெளிவந்தது. அந்த திரைக்காவியம் பெரும் சர்ச்சையை கிளப்பினாலும் பூலான்தேவியைப் பற்றிய விவரங்கள் ஓரளவு வெளி உலகுக்கு தெரியவந்தது. பிறவியிலேயே பூலான்தேவி கொள்ளைக்காரி அல்ல. கொள்ளைக்காரியாக ஆக்கப்பட்டாள்.

பூலான்தேவி உத்தரபிரதேச மாநிலத்தில் ஜலான் மாவட்டத்தில் இருக்கும் ஜோர்கி கபர்வா என்ற கிராமத்தில் பிறந்தாள். மல்லாஸ் எனப்படும் மிகவும் தாழ்த்தப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவள். தந்தை பெயர் தேவிதீன்; தாயார் பெயர் மூலா. இவர்கள் மிகவும் ஏழைகள். படகோட்டி பிழைத்து வந்தார்கள்.

4 சகோதரிகள். ஒரு தம்பி உண்டு. பாலிய விவாகம் (சிறு வயதில் திருமணம்) என்பது அங்கு சர்வசாதா ரணமான விஷயம். வயதுக்கு வரும் முன்பே (அதாவது 11 வயதில்) பூலான் தேவிக்கு திருமணம் நடந்தது. கணவன் பெயர் புட்டிலால். பூலான்தேவியை விட 20 வயதுக்கு மூத்தவன். ஏற்கனவே 2 பெண்களை திருமணம் செய்தவன்.

திருமணம் ஆன பெண், வயது வரும் வரை பெற்றோர் கண்காணிப்பில் இருப்பது வழக்கம். அதன்படியே முதலில் பூலான்தேவி தாய் வீட்டில் இருந்தாள். ஆனால் கணவனோ அவளை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றுவிட்டான்.

அவளை பலாத்காரம் செய்தான். இப்படி பல முறை தொல்லைகளுக்கு ஆளானாள். முடிவில் பெற்றோர் வீட்டில் குடிபுகுந்தாள். இதனால் பூலான்தேவியை கைவிட்டு புட்டிலால் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டான்.

சிறிது காலம் பெற்றோர் வீட்டில் மகிழ்ச்சியாக இருந்த பூலான்தேவிக்கு அங்கும் நிம்மதி பறிபோனது. பூலான்தேவியின் உறவினரான (மாமா) மையாதீன் என்பவன் பல வழிகளிலும் தொல்லை கொடுத்து வந்தான். ஒருநாள் அந்த கிராமத்தின் பணக்கார வகுப்பினர் பூலான் தேவியின் கற்பை அவளது பெற்றோர்கள் எதிரிலேயே சூறையாடினார்கள்.

வாழ்க்கையில் வெறுப்படைந்த பூலான் தேவி தனது சகோதரிகளுடன் ஊரைவிட்டே ஓடினாள். அவளுடைய பெற்றோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆனாலும் மாமன், பழி தீர்க்கும் படலத்தை கைவிடவில்லை. கொள்ளைக்காரர்களுடன் பூலான்தேவிக்கு தொடர்பு இருப்பதாக கிராம மக்களை தூண்டிவிட்டு புகார் செய்தான். இதனால் போலீஸ் பிடியில் பூலான்தேவி சிக்கினாள்.

சட்டம், நீதியை பாதுகாக்க வேண்டிய போலீசார் அங்கும் பூலான்தேவியிடம் நெறிமுறை தவறி நடந்தனர். கற்புக்கு மீண்டும் களங்கம் விளைவித்தனர். இப்படி பூலான்தேவியின் இளம் வயதில் வறுமை, பசி, பட்டினி, பலாத்காரம், போலீஸ் அடக்கு முறை போன்றவை மீண்டும் மீண்டும் தலைதூக்கின. எனவே இவற்றையெல்லாம் எதிர்த்து போராடவேண்டும் என்ற துணிச்சலை உள்ளத்தில் சவாலாக ஏற்றாள்.

பூலான்தேவி மீதான வழக்கு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. 15 வயதில் கொடூர தாக்குதல்களுக்கு அவள் ஆளாகி இருப்பதை உணர்ந்த நீதிபதி கருணை காட்டி அவளை விடுவிக்க உத்தரவிட்டார். ஓராண்டு உருண்டோடியது. திடீரென்று ஒருநாள் பாபு குஜார்சிங் என்ற கொள்ளைக்காரன் பூலான்தேவியை கடத்திச்சென்றான். அந்த கொள்ளைக் கும்பலில் இருந்தபோதுதான் பூலான்தேவி குதிரை ஏற்றம் மற்றும் துப்பாக்கியால் குறி தவறாமல் சுடும் பயிற்சியை பெற்றாள்.

அந்த கொள்ளை கும்பலில் இருந்த விக்ரம்மல்லா என்பவன் அவளுக்கு மிகவும் பாதுகாப்பாக இருந்தான். அவர்களுக்குள் காதல் மலர்ந்தது. கொள்ளை கும்பல் தலைவன் பாபு குஜர்சிங் கொல்லப்பட்டான். விக்ரம் கொள்ளைக்கூட்டத்துக்கு தலைவனாகி பூலான்தேவியை திருமணம் செய்தான்.

இந்த சந்தர்ப்பத்தில் பூலான்தேவி தன்னுடைய முதல் கணவன் புட்டிலாலை சந்தித்து பிரம்பால் அவனை அடித்து தனது ஆத்திரத்தை தீர்த்துக்கொண்டாள். இதன் பிறகே பூலான்தேவி முழு அளவில் கொள்ளைக்காரியாக மாறினாள். விக்ரம்மல்லா உதவியோடு தனக்கு தீங்கு செய்தவர்களை ஒருவர் பின் ஒருவராக தீர்த்து கட்டினாள். ஆனாலும் அவளுடைய ஆத்திரம் தணியவில்லை.

இந்த நிலையில் 1980_ம் ஆண்டு ஆகஸ்டு 13_ந்தேதி கொள்ளை கோஷ்டிகளுக்குள் மோதல் ஏற்பட்டது. இதில் விக்ரம் மல்லா கொல்லப்பட்டான். இதனால் பூலான்தேவி மீண்டும் தனிமைப்படுத்தப்பட்டாள். தாகூர் வகுப்பைச் சேர்ந்த சிலர் பூலான்தேவியை சிறை பிடித்து சென்றனர். அவளது கற்பை சூறையாடினார்கள். பிறகு கிராமவாசிகள் உதவியுடன் காட்டுக்குள் தப்பித்துச் சென்றாள், பூலான்தேவி.

விக்ரம் மல்லாவை கொன்றவர்களை பழிக்குப்பழி வாங்க துடித்த பூலான்தேவி, மான்சிங் என்ற கொள்ளைக்காரனுடன் இணைந்து ஒரு புதிய கொள்ளைக் கூட்டத்தை உருவாக்கினாள். 1981_ம் ஆண்டு பிப்ரவரி 14_ந்தேதி வடக்கு டெல்லி அருகேயுள்ள பிக்மாய் என்ற கிராமத்துக்கு தனது கொள்ளை கோஷ்டியுடன் சென்றாள். விக்ரம் மல்லாவை கொன்றவர்களுக்கு அந்த கிராமவாசிகள் தஞ்சம் அளித்தனர் என்று குற்றம் சாட்டினாள்.

அந்த கிராம மக்கள் “எங்களுக்கு எதுவுமே தெரியாது” என்று எவ்வளவோ கெஞ்சியும் பூலான்தேவி அந்த கிராமவாசிகளை வரிசையில் நிற்க வைத்தாள். குருவியை சுடுவதுபோல் சுட்டாள். அதில் 22 பேர் துடிதுடித்து செத்தார்கள். 8 பேர் கை_கால்களை இழந்தார்கள்.

இந்த கொலை சம்பவம் இந்தியா முழுவதையும் உலுக்கியது. பூலான்தேவியை பற்றிய செய்தி நாடு முழுவதும் பரவியது. அது மட்டுமல்ல உத்தரபிரதேச அரசியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது. உத்தரபிரதேச முதல் மந்திரியாக இருந்த வி.பி.சிங் 1982_ல் பதவியை ராஜினாமா செய்தார்.

உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம் ஆகிய இரு மாநில போலீஸ் படைகளும் உஷார் படுத்தப்பட்டன. காடுகளில் புகுந்து பூலான்தேவியை வேட்டையாடினார்கள். ஆனாலும் அவள் சிக்கவில்லை.

பூலான்தேவியை உயிருடனோ, பிணமாகவோ கொண்டு வந்தால் ரூ.2 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. போலீஸ் கண்ணில் படாமல் திரிந்த பூலான்தேவி அப்போதும் தனது எதிரிகளை தீர்த்துக்கட்டியபடியே இருந்தாள்.

நேபாளத்துக்கு அவள் தப்பி ஓடிவிட்டதாக பேசப்பட்டது. ஆனாலும் கொஞ்ச நாளிலேயே அவள் உ.பி.க்குள் திரும்பினாள். 1982_ம் ஆண்டு டிசம்பரில் ஜலான் மாவட்டத்தை சேர்ந்த 3 மிராசுதாரர்களை கடத்திச்சென்றாள். இதுவே அவள் கடைசியாக அரங்கேற்றிய தாக்குதலாகும்.

பூலான்தேவி மீது கொலை, கடத்தல், கொள்ளை, சூறையாடல் என்று 48 பெரிய குற்ற வழக்குகள் பதிவாகி இருந்தன. வடமாநிலங்களையே குலைநடுங்க வைத்த பூலான் தேவி குள்ளமான பெண் ஆவாள். அவளது உயரம் 4 அடி 10 அங்குலம் மட்டுமே.

ஆனால் அவளது தோற்றம் கம்பீரமாக இருந்து வந்திருக்கிறது. குதிரை மீது ஏறி அவள் வலம் வந்தால் அந்த சுற்று வட்டாரமே நடுங்கும். கிராமவாசிகள் மண்டியிட்டு வணக்கம் செலுத்துவார்கள். காக்கி நிற உடையில் நெற்றியை சுற்றி சிவப்பு நிற ரிப்பனை கட்டியிருப்பது அவளுடைய தனி முத்திரையாகும்.

எப்போதும் தோளில் துப்பாக்கி தொங்கிக் கொண்டிருக்கும். துப்பாக்கி தோட்டா (குண்டுகள்) “பெல்ட்” உடம்பை சுற்றி காட்சி தரும்.

0 Responses to “பூலான்தேவி வாழ்க்கை வரலாறு - 1 (வாழ்க்கையை சீரழித்தவர்களை பழிவாங்க கொள்ளைக்காரியாக )”

Post a Comment

Viewers

Flag Counter
All Rights Reserved Ramnad2Day | 7Tech Template by S.S.KarT