20 July 2013
‘மரியான்’ : திரை விமர்சனம்
Do you like this story?
‘மரியான்’ திரை விமர்சனம்
கடலும் கடல் சார்ந்த பகுதியுமான நீரோடி எனும் மீனவ கிராமத்தை சார்ந்த இளைஞன் ஹீரோ ‘மரியான்’ எனும் தனுஷ்! மீன்பிடி படகுடனோ, படகில்லாமலோ(!) ஒரு முறை கடலுக்குள் சென்றார் என்றால், ஆழ் கடலுக்குள் அனாயாசமாக மூழ்சி, முங்கி, மூச்சடக்கி, கைவசமிருக்கும் ஈட்டியால் ‘கொம்பன்’ சுறா ‘வம்பன்’ திமிங்கிலத்(சும்மா ஒரு ரைமிங்கிற்கு...)தை எல்லாம் குத்தி கொண்டு வந்து கரையில் காசாக்குகிறார்.
அந்த காசில் குடி, குடியென மொடாக்குடியனாக திரியும் ’மரியான்’ தனுஷை, பனிமலர் எனும் பார்வதி, ஒரு தலையாக உருகி உருகி காதலிக்கிறார். ஒரு கட்டத்தில் ‘பனி’ பார்வதி மீது மரியானுக்கும் காதல் உண்டாகிறது. அப்புறம்? அப்புறமென்ன...?! காதலுக்கு சுற்றமும் நடப்பும் தான் எதிர்ப்பு என்று நீங்கள் கருதினால் அதுதான் இல்லை... சூடான் தீவிரவாதிகள் தான் எதிர்ப்பு.
தமிழக மீனவ கிராமமான நீரோடிக்கு ஆப்ரிக்க நாடான சூடானில் இருந்து தீவிரவாதிகள் எப்படி வந்தனர்? என்று நீங்கள் குழப்பிக் கொள்ள வேண்டாம்! ‘‘மரியான்’’ கதையே சூடானில் தான் ஆ ‘ரம்பம்’ ஆகும்! ஒரே மூச்சில் கொம்பன் சுறாவையெல்லாம் கரைக்கு கொண்டு வந்து போட்டு காசு பார்க்கும் தனுஷ், காதலியின் உறவுபட்ட கடனுக்காக, நம் நாட்டை விட பல மடங்கு பின்தங்கிய சூடானுக்கு பஞ்சம் பிழைக்க போகிறார். (கைவசம் மீன்பிடி தொழில் இருக்கும் மீனவர்கள் பெரும்பாலும் பஞ்சம் பிழைக்க பக்கத்து மீனவ கிராமத்திற்கு கூட போகமாட்டார்கள்... என்பதும், அதுவும் சிங்கிள் ஆளாக ஒரே முக்கு மூழ்கில் சுறா, திமிங்கிலத்தையெல்லாம் வேட்டையாடும் ‘மரியான்’, கொஞ்சம் வஞ்சிரம், 4-சுறா, 2-திமிங்கிலங்களை பிடித்தாலே எப்பேற்பட்ட கடனையும் அடைக்கலாமே?! என்ற லாஜிக் எல்லாம் இயக்குனர் பரத்பாலா பார்க்கவில்லை.. எனவே ரசிக பெருமக்களே நீங்களும் பார்க்கக்கூடாது. ஹீ.ஹீ...)
இரண்டு வருட கான்ட்ராக்ட்டில் சூடானுக்கு போகும் அவர், அங்கு உள்ளூர் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு கசையடி, காயடியெல்லாம்பட்டு, கஷ்டப்பட்டு காதலிக்காக ஊர் திரும்பினாரா...?! இல்லையா என்பது மீதிக்கதை! யப்பாடி!!
மரியானாக தனுஷ், இஷ்டப்பட்டு கஷ்டப்பட்டிருக்கிறார். நஷ்டப்படாமலும் இருக்க வாழ்த்துவோம்! தனுஷ் கலைதாகம் எடுத்து இது மாதிரி படங்கள் செய்தாலும், அவ்வப்போது உங்களை வளர்த்துவிட்ட அண்ணன் செல்வராகவனின் படங்களிலும் தலை காட்டி தங்களுக்குரிய ரசிகர்களை தக்க வைத்து கொள்ள வேண்டுமென்பது நம் தாழ்மையான வேண்டுகோள்!
பனிமலராக ‘பூ’ பார்வதி மரியானை உருகி உருகி காதலிக்கிறார். நம்மையும் உருக வைக்கிறார் என்ன ஒரே குறை, சோக சீன்களிலும் கூட அன்றலர்ந்த மலராக பளிச்சென வந்து தனுஷை பிடித்து இழுத்து வைத்து டூயட் பாடுவது கொஞ்சம் அல்ல...ரொம்பவே ஓவர்டா சாமி! இதற்கெல்லாம் காரணம், பார்வதி அல்ல, இயக்குநர் பரத்பாலா என்பதால் அம்மணியை மறப்போம், மன்னிப்போம்!!
இப்பொழுது இயக்குநர் பரத்பாலாவிடம் வருவோம்!! ‘‘சாதனை பண்றவனுக்கு பொம்பளை வாசனை பட்டுகிட்டே இருக்கணும்,‘கற’ டயலாக் சூப்பர்! அடிக்கடி உம்மூலம் புள்ளை பெத்துக்கணும், புள்ளை பெத்துக்கணும்... என நாயகி, நாயகரை டார்ச்சர் செய்வது, தனுஷிடம் பார்வதி எதிர்பார்ப்பது காதலையா? காமத்தையா.?! எனும் குழப்பத்தை ஏற்படுத்துகிறது! அதேமாதிரி தனுஷ், ‘நான் கடல் ராஜா’ என கர்ஜிப்பது எல்லாம்கூட படத்தை கடலுக்குள் தியேட்டர்கள் அமைத்து அங்கு கடல்வாழ் ஜீவராசிகள் ரசிகர்களாக அமர்ந்து படம் பார்த்திருந்தால் அவைகள் ஒரு வேளை ரசித்திருக்கலாம்! நமக்கு சலிப்பே தட்டுகிறது!
முன்பெல்லாம் திரைப்படங்களில் கதைக்கு தேவையில்லாத கேரக்டர்களை பாம்பு கடித்தது, பல்லி கடித்தது என்று தீர்த்துக்கட்டுவார்கள். பரத்பாலா ஒருபடி மேலே போய், ஒரு கட்டத்தில் தன் கதைக்கு தேவையில்லாமல் போன மீனவர்களான அப்புக்குட்டி உள்ளிட்ட இருவரை, இலங்கை கடற்படை சுட்டுவிட்டதென, சென்சிடிவ் மேட்டரை சென்டிமென்ட்டாக்கியிருப்பதும், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுடன் சேர்ந்துகொண்டு கிடைக்கும் கேப்பில் எல்லாம் தாங்கள் முன்பு போட்ட ‘வந்தே மாதரம்’ ட்யூனுக்கு புதிய வார்த்தைகளை போட்டு மீண்டும் ‘நெஞ்சே எழு...’ உள்ளிட்ட பாடல்களை எழுப்பியிருப்பதும், அந்தப் பாடல்கள் சோகசீனில் கூட ‘டூயட்’ ராகம் போடுவதும் ‘மரியானை‘ மறத்துப்போக வைக்கின்றன என்றால் மிகையல்ல.
ஆக மொத்தத்தில் ‘மரியான்’ பார்க்கப்போனா கைவசம் தேவை ஒரு ‘சாரிடான்!’
This post was written by: S.S.KarT
S.S.KarT Manuel is a professional blogger, web designer and front end web developer. Follow him on Twitter
Subscribe to:
Post Comments (Atom)
0 Responses to “ ‘மரியான்’ : திரை விமர்சனம்”
Post a Comment