10 October 2013

5 மாதத்திற்கு பின் ஆசிரியர் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்

5 மாதத்திற்கு பின் ஆசிரியர் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்



மன்னார்குடி : நாகை மாவட்டம் வேதாரண்யத்தை சேர்ந்தவர் தனசேகரன்(39). இவரது மனைவி சுமதி(35). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மன்னார்குடி அடுத்த நாகராஜன் கோட்டகத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தனசேகரனும், அதே பகுதியில் உள்ள சாத்தனூர் உதவி பெறும் பள்ளியில் சுமதியும் ஆசிரியர் வேலை செய்து வந்தனர்.

இதற்காக அவர்கள் மன்னார்குடி அருகே உள்ள லட்சுமாங்குடி அடுத்த மரக்கடையில் வீடு கட்டி தங்கியிருந்தனர். கணவன், மனைவிக்கு ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக சுமதி தனது குழந்தைகளை அழைத்துக்கொண்டு வேதாரண்யத்தில் உள்ள தனது தாய்வீட்டிற்கு கடந்த மே மாதம் சென்றுவிட்டார். 

இந்நிலையில் மரக்கடை வீட்டில் தனியாக வசித்த தனசேகரன் கடந்த மே 14ம்தேதி வீட்டில் இறந்து கிடந்தார். கூத்தாநல்லூர் போலீசார் உடலை கைப்பற்றி வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். பிரேத பரிசோதனை அறிக்கையில் தனசேகரன் தற்கொலை செய்து கொண்டார் என்று தெரிவித்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் தாய் வீட்டில் வசித்த வந்த சுமதி ஒருமுறை குளத்தில் விழுந்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை குடும்பத்தினர் காப்பாற்றினர். தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து கேட்டபோது சுமதி, தனக்கும், தான் வேலை பார்க்கும் பள்ளியில் ஆசிரியராக இருக்கும் குன்னியூரை சேர்ந்த ராஜன்(42) என்பவருக்கும் தொடர்பு இருந்ததாகவும், அவருடன் சேர்ந்து கணவருக்கு விஷ ஊசி போட்டு கொன்றுவிட்டதாகவும், மனசாட்சி உருத்தியதால் தற்கொலைக்கு முயன்றதாக கூறியுள்ளார்.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், ராஜனுடன் சுமதி பேசுவதை தடுக்க, அவரை பள்ளிக்கு அனுப்பாமல் உறவினர் ஒருவர் வீட்டில் தங்க வைத்தனர். இதையடுத்து, சுமதியை பல்வேறு இடங்களில் ராஜன் தேடியுள்ளார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் தொலைக்காட்சி ஒன்று நடத்திய நிகழ்ச்சியில் சுமதி நடந்த விவரங்களை வெளிப்படையாக கூறினார். அந்த நிகழ்ச்சியின்போதே, தொலைபேசியில் ராஜனை சுமதி தொடர்பு கொண்டார்.

அப்போது ராஜன் பேசியது: இத்தனை நாட்களாக உன்னை எங்கு தேடியும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இங்கு யாருக்கும் உன் மீது சந்தேகம் வராதபடி செய்துள்ளேன். அதற்கு நண்பர் ஒருவர் உதவிகரமாக உள்ளார். போலீசாரோ அல்லது உனது உறவினர்களோ எப்படி விசாரித்தாலும் எனக்கு ஒன்றும் தெரியாது என்றே பதில் சொல்ல வேண்டும். என்னோடு நீ சேர்ந்து வாழவேண்டும் என்றால் தற்போது நடந்து வரும் பிரச்னைகளை பொறுத்துக் கொண்டு இரு. காலம் கனிந்தவுடன் ஒன்று சேர்வோம் என்றார்.

இந்நிலையில், இந்த தற்கொலை வழக்கு, கொலை வழக்காக மாற்றப்படுமா என கூத்தாநல்லூர் போலீசில் கேட்டபோது, ஏற்கனவே தற்கொலை வழக்கு தொடர்பாக சுமதிக்கு சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. தற்போது மறுபடியும் சம்மன் அனுப்ப உள்ளோம். அவர் ஆஜராகி, கொலை செய்ததாக கூறினால், அதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்போம் என்றனர்.

0 Responses to “5 மாதத்திற்கு பின் ஆசிரியர் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்”

Post a Comment

Viewers

Flag Counter
All Rights Reserved Ramnad2Day | 7Tech Template by S.S.KarT