9 October 2013

விதிமுறைகள் மீறும் மதுபான கூடங்கள் மீது நடவடிக்கை: மாநில வாணிப கழகம் அறிவிப்பு

விதிமுறைகள் மீறும் மதுபான கூடங்கள் மீது நடவடிக்கை
மாநில வாணிப கழகம் அறிவிப்பு


சென்னை, அக்.9:-

மதுபான கடைகளின் அருகில் செயல்படும் மதுபானகூடங்கள் (பார்) விதிமீறலில் ஈடுபட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில வாணிப கழகம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு மாநில வாணிப கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

டாஸ்மாக் சில்லறை விற்பனை மதுபான கடைகளின் பணி நேரம் 2009-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி முதல் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை இயங்கி வருகிறது. மதுக்கடைகளுடன் இணைந்த மதுக்கூடம் மேற்கண்ட நேரங்களிலேயே நடத்தப்பட வேண்டும்.

ஆனால், மதுக்கூடங்களின் உரிமதாரர்கள் இதன் விதிமுறைகளை மீறி மதுக்கூடங்கள் நடத்துவதாக தகவல்கள் வருகின்றன. அவற்றை ஒழுங்குமுறைப்படுத்தி அரசு விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுமே மதுக்கூடம் நடத்த வேண்டும். இதற்காக அனைத்து முதுநிலை மண்டல மேலாளர்கள், மாவட்ட மேலாளர்கள் சிலவழிமுறைகளை கையாள வேண்டும்.

குறிப்பாக மதுபான சில்லறை விற்பனைக்கடை காலை 10 மணிக்கு திறந்து இரவு 10 மணிக்கு மூடப்பட வேண்டும். இவ்விதி முறைக்கு மாறாக மதுக்கடையை காலை 10 மணிக்கு பின்னர் தாமதமாக திறந்திடவும், இரவு 10 மணிக்கு முன்னதாக மூடிடவும் கூறி கடைப்பணியாளர்களை மதுக்கூட உரிமையாளர்கள் கட்டாயப்படுத்துவது விதிமுறை மீறலாகும்.

இடைப்பட்ட நேரத்தில் மதுபானங்களை மதுக்கூடத்தில் விற்பனை செய்வது, வெளிமாநில சரக்குகளை வைத்து விற்பனை செய்வது கூடாது. மதுபான சில்லறை விற்பனை கடைகளின் செயல்பாடுகளில் தலையிடுவது,

இதை கேட்கும் கடைப்பணியாளர்களிடம் தகராறு செய்வது மற்றும் விதிமுறைகளை மீறி செயல்படும் மதுக்கூட உரிமையாளர்களை அடையாளம் கண்டுபிடித்து சரியான விசாரணை செய்து அவசியப்பட்டால் சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர், எஸ்.பி, முதுநிலை மண்டல மேலாளர்கள் மற்றும் மாவட்ட மேலாளர்கள் நேரில் சந்தித்து சம்மந்தப்பட்ட விதிமுறைகளை மீறி மதுக்கூடம் நடத்தும் மதுக்கூட உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

தேவைப்படும் இனங்களில் சட்ட விதிமுறைகளை பின்பற்றி அவர்களது மதுக்கூட உரிமங்களை ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

0 Responses to “விதிமுறைகள் மீறும் மதுபான கூடங்கள் மீது நடவடிக்கை: மாநில வாணிப கழகம் அறிவிப்பு”

Post a Comment

Viewers

Flag Counter
All Rights Reserved Ramnad2Day | 7Tech Template by S.S.KarT