21 October 2013

தென் மாவட்டங்கள் கடும் பாதிப்பு தமிழகத்தில் மழை நீடிக்கும்

தென் மாவட்டங்கள் கடும் பாதிப்பு தமிழகத்தில் மழை நீடிக்கும்


சென்னை : 

                ‘தென்வங்க கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகம், புதுச்சேரியில் 4 நாட்கள் மழை நீடிக்கும்‘ என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரையும், வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் வரையும் பெய்யும். ஆனால், இந்த ஆண்டு ஜூன் முதல் வாரத்திலேயே தென்மேற்கு பருவமழை தொடங்கியது. தமிழ்நாடு மேற்கு தொடர்ச்சி மலைக்கு கிழக்கு பகுதியில் உள்ளதால் மழை மறைவு பகுதியாக உள்ளது.

இருந்தாலும் தென்மேற்கு பருவமழை காலத் தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஓட்டி உள்ள கன்னியாகுமரி, நெல்லை, தேனி, கோவை, நீலகிரி மாவட்டத்தில் நல்ல மழை பெய்தது. பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளிலும் தென்மேற்கு பருவமழை பெய்தது. தென்மேற்கு பருவமழை செப்டம்பர் மாதம் வரை தான் பெய்யும்.  ஆனால், இந்த ஆண்டு அக்டோபர் மாதம் வரை நீடிக்கிறது. இந்த நிலையில், வடகிழக்கு பருவமழைக்கான அறிகுறிகளும் தென்பட்டு வருகின்றன.

இதற்கு ஏற்ப இலங்கைக்கு அருகே இந்திய பெருங்கடலின் மேலே  வளிமண்டல மேல் அடுக் கில் உருவான சுழற்சியால் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், தேனி, திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை, நாகை, தஞ்சை, கோவை, நீலகிரி, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழை பெய்துள்ளது. இதே போல, தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.

இதற்கிடையே வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதால் தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் கூறியதாவது: தென்வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இந்த தாழ்வு பகுதி வரும் நாட்களில் மேலும் வலுவடைய வாய்ப்புள்ளது. இதனால் அடுத்த 4 நாட்க ளுக்கு தமிழகம்,

புதுச் சேரியில் மழை பெய்யும். சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அடுத்த 24 மணி நேரத்தில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்புள்ளது. தென்மேற்கு பருவமழை முடிவுறும் தருவாயில் உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் திண்டிவனம், மதுரை விமான நிலையத்தில் 9 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. பாபநாசம், தஞ்சாவூரில் 8 செ.மீ, பரங்கிப்பேட்டை, நத்தம், அறந்தாங்கி, முத்துப்பேட்டை, 7 செ.மீ, ஓகேனக்கல், மதுரை தெற்கு, பூந்தமல்லியில் 6. செ.மீ மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிலையில் காற்றழுத்த தாழ்வு நிலை வலுத்தால், மீண்டும் ஒரு புயல் சின்னம் உருவாவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. சென்னையை பொறுத்தவரை நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை நகரின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. இதனால், தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்கியது.

அதே போல் சென்னையின் புறநகர் பகுதியில் பரவலாக நல்ல மழை பெய்தது. தொடர்ந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதால் வெப்பம் தணிந்து, குளிர்ச்சியான சீதோஷண நிலை காணப்பட்டது.

திற்பரப்பு அருவியில் வெள்ளம்

* கடலூர் மாவட்டத்தில் நேற்று சராசரியாக 11.30 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

* கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டத்தில் தொடர்ந்து 2வது நாளாக மழை பெய்தது.

* தர்மபுரி மாவட்டத்தில், ஒகேனக்கல் உட்பட பல இடங்களில்   விடியவிடிய மழை கொட்டியது. நீர் நிலைகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. 

* குமரி கோதையாற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் திற்பரப்பு அருவியிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியதால்  பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

* மதுரை மாவட்டத்தில், கடந்த நான்கு நாட்களாக மழை பெய்து வருகிறது.  நிலையூர் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டது.

* சோழவந்தான் கிராமங்களிலும் மழை நீர் ஆறாக ஓடியது.

* ஊட்டியில்  மழையுடன் கடும் குளிர் காணப்பட்டதால், சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைவாக காணப்பட்டது.

* நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக பகல் மற்றும் இரவு நேரங்களில் கனமழை பெய்து வந்தது.

* கோவை நகரில் நேற்று முன்தினம் நள்ளிரவு பலத்த மழை பெய்தது. இதனால், சாலையில்  வெள்ளம் தேங்கி நின்றது.

* பொள்ளாச்சி பகுதியில் கனமழை பெய்தது. சுவர் இடிந்து விழுந்து கணவன் , மனைவி படுகாயம் அடைந்தனர்.

0 Responses to “தென் மாவட்டங்கள் கடும் பாதிப்பு தமிழகத்தில் மழை நீடிக்கும்”

Post a Comment

Viewers

Flag Counter
All Rights Reserved Ramnad2Day | 7Tech Template by S.S.KarT