9 October 2013

பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: மரிய ஷரபோவா திடீர் விலகல்

பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: மரிய ஷரபோவா திடீர் விலகல்


இஸ்தான்புல், அக். 9-


உலக தரவரிசையில் முதல் 8 இடங்களை வகிக்கும் வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்கும் டபிள்யூ.டி.ஏ. பெண்கள் சாம்பியன்ஷிப் டென்னிஸ் போட்டி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.

இதன்படி இந்த ஆண்டுக்கான மொத்தம் ரூ.37 கோடி பரிசுத்தொகை கொண்ட 43–வது பெண்கள் சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடர் வருகிற 22–ந்தேதி முதல் 27–ந்தேதி வரை துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடைபெற உள்ளது.

இந்த போட்டியில் விளையாட தரவரிசையில் 3–வது இடம் வகிக்கும் ரஷிய புயல் மரிய ஷரபோவா தகுதி பெற்றிருந்தார். இந்த நிலையில் அவர் இந்த போட்டியில் இருந்து திடீரென விலகியுள்ளார். தோள்பட்டை காயத்தால் அவதிப்பட்டு வருவதால், இந்த போட்டியில் தன்னால் பங்கேற்க இயலாது என்று 26 வயதான ஷரபோவா தெரிவித்துள்ளார்.

இதனால் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார். காயத்தில் சிக்கியதால் அவர் கடந்த ஆகஸ்டு மாதம் நடந்த சின்சினாட்டி ஓபனுக்கு பிறகு எந்த போட்டியிலும் ஆடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஷரபோவாவின் விலகல் மூலம் செக்குடியரசின் பெட்ரா கிவிடோவா, இத்தாலியின் சாரா எர்ரானி, செர்பியாவின் ஜெலினா ஜான்கோவிச் ஆகியோர் கவுரவ மிக்க பெண்கள் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

நம்பர் ஒன் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா), விக்டோரியா அஸரென்கா (பெலாரஸ்), அக்னீஸ்கா ராட்வன்ஸ்கா (போலந்து), லீ நா (சீனா) ஆகியோர் இந்த போட்டியில் களம் காணும் வாய்ப்பை ஏற்கனவே உறுதி செய்து விட்டனர். இன்னும் ஒரு இடம் மட்டுமே பாக்கி உள்ளது. அனேகமாக ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பருக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.

0 Responses to “பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: மரிய ஷரபோவா திடீர் விலகல்”

Post a Comment

Viewers

Flag Counter
All Rights Reserved Ramnad2Day | 7Tech Template by S.S.KarT