25 November 2013

அருப்புக்கோட்டை அருகே கண்மாயில் மூழ்கி 5 மாணவிகள் சாவு

அருப்புக்கோட்டை அருகே கண்மாயில் மூழ்கி 5 மாணவிகள் சாவு



திருச்சுழி: 

        அருப்புக்கோட்டை அருகே கண்மாயில் குளிக்கச் சென்ற 5 சிறுமிகள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவரை ஒருவர் காப்பாற்றச் சென்று 5 சிறுமிகளும் பலியான சம்பவத்தால் கிராமமே சோகத்தில் உள்ளது.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே உள்ள ராஜகோபாலபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட போத்தம்பட்டியை சேர்ந்தவர்கள் சங்கீதா (16), கவிப்பிரியா (14). அதே பகுதியை சேர்ந்தவர்கள் முருகன் மகள்கள் மாதரசி (13), ரம்யா (9), கோபால்ராஜ் மகள் கலைச்செல்வி என்ற காமாட்சி (14), சண்முகராஜ் மகள் பொன்மணி (15), ராமசாமி மகள் ரம்யா (14). இவர்கள் அனைவரும் இங்குள்ள அரசு பள்ளியில் படித்து வந்தனர். விடுமுறை நாளான நேற்று காலை 10 மணிக்கு இவர்கள் ஏழு பேரும் குளிப்பதற்காக இங்குள்ள கண்மாய்க்கு சென்றனர்.

தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் இந்தக் கண்மாயில் தூர்வாரும் பணி சமீபத்தில் நடந்திருந்தது. இதனால், கண்மாய் ஆழமாக உள்ளது. மேலும், சமீபத்தில் பெய்த மழையால் கண்மாய் பாதியளவு நிரம்பியுள்ளது. ஏழு சிறுமிகளும் கண்மாயில் இறங்கிக் குளித்துக் கொண்டிருந்தனர். இவர்களில் சங்கீதாவும், கவிப்பிரியாவும் கண்மாய் ஓரமாக குளித்தனர். மற்ற ஐந்து சிறுமிகளும் ஆழமான பகுதிக்குச் சென்றனர்.எதிர்பாராதவிதமாக ரம்யா, காமாட்சி இருவரும் அதிக ஆழமுள்ள பகுதிக்குச் சென்று சேறும், சகதியுமாக இருந்த இடத்தில் சிக்கிக் கொண்டனர். அங்கிருந்து வெளியேறி வர முடியாமல் அவர்கள் கூச்சல் போட்டனர்.

இவர்களை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்ட மாதரசி, பொன்மணி மற்றொரு ரம்யா ஆகியோரும் சேற்றில் சிக்கிக் கொண்டனர். ஐந்து பேரும் அங்கிருந்து தப்பி வர முடியாமல் சேற்றில் சிக்கி ஒருவர் பின் ஒருவராக மூழ்கத் தொடங்கினர். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த கவிப்பிரியா, சங்கீதா இருவரும் கரையேறி ஊருக்குள் ஓடிச் சென்று நடந்த விபரம் குறித்து தெரிவித்தனர்.உடனே கிராம மக்கள் திரண்டு கண்மாய்க்கு ஓடி வந்தனர். 

அருப்புக்கோட்டை தீயணைப்புத்துறை, போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு படையினர் வருவதற்குள் கிராம மக்கள் இறங்கி சிறுமிகளை மீட்க முயற்சி செய்தனர்.

அதற்குள் சிறுமிகள் 5 பேரும் மூச்சுத் திணறி, பரிதாபமாக இறந்து விட்டனர். அவர்களின் இறந்த உடல்களையே நீண்ட போராட்டத்துக்குப் பின் மீட்க முடிந்தது. 5 சிறுமிகளின் உடல்களும் கண்மாய் கரையிலேயே கிடத்தி வைக்கப்பட்டன. சுற்றிலும் திரண்டு நின்று உறவினர்கள் கதறி அழுததால், அப்பகுதியே சோகமயமாக காட்சி அளித்தது.சிறுமிகளின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. 

சம்பவம் குறித்து பரளச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஒரே நேரத்தில் 5 சிறுமிகள் தண்ணீரில் மூழ்கி இறந்த சம்பவம் கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

0 Responses to “அருப்புக்கோட்டை அருகே கண்மாயில் மூழ்கி 5 மாணவிகள் சாவு”

Post a Comment

Viewers

Flag Counter
All Rights Reserved Ramnad2Day | 7Tech Template by S.S.KarT