24 November 2013

கோஹ்லி, டோனி விளாசல் வீண்: போராடி வென்றது வெஸ்ட் இண்டீஸ்

கோஹ்லி, டோனி விளாசல் வீண்: போராடி வென்றது வெஸ்ட் இண்டீஸ்



விசாகப்பட்டினம்: 

           இந்திய அணியுடனான 2வது ஒருநாள் போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் போராடி வென்றது.இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டித் தொடரில் விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் 0-2 என்ற கணக்கில் படுதோல்வி அடைந்தது. அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறுகிறது. கொச்சியில் நடந்த முதல் போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்றது. இந்தியா 1- 0 என முன்னிலை வகிக்க, 2வது போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று பகல்/ இரவு ஆட்டமாக நடந்தது.

டாசில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்துவீசியது. இந்திய அணி தொடக்க வீரர்களாக ரோகித், தவான் களமிறங்கினர். ரோகித் 12 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். தவான் - கோஹ்லி ஜோடி 2வது விக்கெட்டுக்கு 48 ரன் சேர்த்தது. தவான் 35 ரன் எடுத்து வெளியேறினார்.இதைத் தொடர்ந்து கோஹ்லியுடன் யுவராஜ் இணைந்தார். சிறப்பாக விளையாடிய கோஹ்லி அரை சதம் அடிக்க, யுவராஜ் 28 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து கோஹ்லி & ரெய்னா ஜோடி 4வது விக்கெட்டுக்கு 65 ரன் சேர்த்தது. 

ரெய்னா 23 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினார். கோஹ்லி 99 ரன் எடுத்த நிலையில் (100 பந்து, 9 பவுண்டரி), ராம்பால் வீசிய பவுன்சரில் தேவையில்லாமல் சிக்சர் அடிக்க ஆசைப்பட்டு ஹோல்டரிடம் கேட்ச் கொடுத்து சதம் அடிக்கு வாய்ப்பை வீணடித்தார். கடைசி கட்டத்தில் ஜடேஜா 10, அஷ்வின் 19 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். அதிரடியாக விளையாடிய கேப்டன் டோனி அரை சதம் அடித்தார்.

இந்தியா 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 288 ரன் குவித்தது. டோனி 51 ரன் (40 பந்து, 3 பவுண்டரி, 4 சிக்சர்), புவனேஷ்வர் ஒரு ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

அடுத்து 289 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களமிறங்கியது. சார்லஸ் 12, சாமுவேல்ஸ் 8 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். பாவெல் - டேரன் பிராவோ ஜோடி 3வது விக்கெட்டுக்கு பொறுப்புடன் விளையாடி ரன் சேர்த்தது. டேரன் பிராவோ 50, பாவெல் 59 ரன் எடுத்து அஷ்வின் சுழலில் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, இந்திய அணி கை ஓங்கியது. கேப்டன் வேய்ன் பிராவோ 18 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். இந்த நிலையில் சிம்மன்ஸ் - சம்மி ஜோடி 6வது விக்கெட்டுக்கு 82 ரன் சேர்த்தது. சிம்மன்ஸ் 62 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.

 புவனேஷ்வர் வீசிய 48வது ஓவரில் 16 ரன் கிடைக்க, வெற்றி வெஸ்ட் இண்டீஸ் பக்கம் திரும்பியது. ஷமி வீசிய அடுத்த ஓவரில் ஹோல்டர் (7), நரைன் (0) வெளியேற ஆட்டம் பரபரப்பானது. எனினும், சம்மி பதற்றமின்றி விளையாடி வெற்றியை வசப்படுத்தினார்.

வெஸ்ட் இண்டீஸ் 49.3 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 289 ரன் எடுத்தது. சம்மி 63 ரன் (45 பந்து, 4 பவுண்டரி, 4 சிக்சர்), பெருமாள் (0) ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய வீரர்கள் பல கேட்ச் வாய்ப்புகளை கோட்டைவிட்டது தோல்விக்கு காரணமாக அமைந்தது.இரு அணிகளும் 1-1 என சமநிலை வகிக்க, கடைசி போட்டி நாளை மறுநாள் கான்பூரில் நடைபெறுகிறது.

0 Responses to “கோஹ்லி, டோனி விளாசல் வீண்: போராடி வென்றது வெஸ்ட் இண்டீஸ்”

Post a Comment

Viewers

Flag Counter
All Rights Reserved Ramnad2Day | 7Tech Template by S.S.KarT