26 November 2013

ஆருஷியை கொலை செய்தது பெற்றோர்தான் : இன்று தண்டனை அறிவிப்பு

ஆருஷியை கொலை செய்தது பெற்றோர்தான் : 
இன்று தண்டனை அறிவிப்பு



காஜியாபாத்: 

           நொய்டா மாணவி ஆருஷி கொலைவழக்கில், அவரது பெற்றோர் குற்றவாளிகள் என காஜியாபாத் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. அவர்களுக்கான தண்டனை இன்று அறிவிக்கப்படுகிறது. டெல்லி அருகே நொய்டாவை சேர்ந்த 14 வயது சிறுமி ஆருஷி கடந்த 2008ம் ஆண்டு மே 15ம் தேதி இரவு கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டார். இது குறித்து அவரது தந்தையும், பிரபல பல் மருத்துவருமான ராஜேஷ் தல்வார் போலீசில் புகார் செய்தார். வீட்டு வேலைக்காரர் ஹேம்ராஜ் இந்தக் கொலையை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். மறுநாள் வீட்டு மாடியில் ஹேம்ராஜ் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.

இதற்கு முன் பணியாற்றிய வேலைக்காரர்கள் மீது ராஜேஷ் தல்வாரும் அவரது மனைவி நூபுர் தல்வாரும் குற்றம் சுமத்தினர். ஆருஷி பெற்றோர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. ஆருஷி, ஹேம்ராஜ் இடையே இருந்த தவறான உறவு காரணமாக இருவரையும் டாக்டர் தம்பதியினர் கவுரவ கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் அவர்கள் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டனர்.


இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு டாக்டர் தம்பதிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது. அது எதிர்பார்த்த பலனை அளிக்கவில்லை. தடயங்கள் அழிக்கப்பட்டதால் குற்றத்தை நிரூபிப்பதற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. குற்றச் சாட்டில் இருந்து முன்னாள் வேலைக்காரர்களை விடுவித்த சிபிஐ, இந்த வழக்கை முடித்துக் கொள்வதாக கடந்த 2010ம் ஆண்டு அறிவித்தது.

சிபிஐ தாக்கல் செய்த அறிக்கையிலிருந்து, ஆருஷி பெற்றோர்தான் குற்றவாளிகள் என்றும், அவர்கள் ஆதாரங்களை அழித்துவிட்டதாகவும் காஜியாபாத் நீதிமன்றம் கருதி விசாரணையை தொடர்ந்து நடத்தும்படி கூறியது. இதையடுத்து அவர்கள் மீது கொலை மற்றும் ஆதாரங்களை அழித்த வழக்கு பதிவு செய்து சிபிஐ மீண்டும் விசாரணை நடத்தியது. இதை எதிர்த்து அலகாபாத் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தில் தல்வார் தம்பதி தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 5 ஆண்டுகளுக்கு மேலாக காஜியாபாத் நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கில் இறுதி கட்ட விசாரணை முடிந்து நீதிபதி லால் நேற்று தீர்ப்பளித்தார்.


இரட்டை கொலையில் ஈடுபட்டு, ஆதாரங்களை அழித்த தல்வார் தம்பதி குற்றவாளிகள் என நீதிபதி அறிவித்தார். போலீசில் தவறான எப்.ஐ.ஆர் பதிவு செய்த காரணத்துக்காவும் இந்திய தண்டனை சட்டத்தின் 203வது பிரிவின்படி ராஜேஷ் தல்வார் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார்.  இவர்களின் தண்டனை மீதான விவாதம் காஜிபாத் நீதிமன்றத்தில் இன்று நடக்கிறது. அதன்பின் தண்டனை அறிவிக்கப்படவுள்ளது.

இந்த தீர்ப்பை கேட்டதும் தல்வார் தம்பதியினர் கண் கலங்கி கண்ணீர் சிந்தினர். அதன்பின் அவர்கள் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர். அவர்கள் சார்பில் அளிக்கப்பட்ட அறிக்கையில், ‘‘செய்யாத குற்றத்துக்காக நாங்கள் தண்டிக்கப்பட்டுள்ளது மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. நீதிக்காக தொடர்ந்து போராடுவோம்‘‘ என்றனர். தல்வார் தம்பதியின் வக்கீல் சத்யகெது சிங் கூறுகையில், ‘‘சட்டப்படி தீர்ப்பு தவறானது. இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வோம்‘‘ என்றார்.

ஆருஷி கொலை வழக்கில் இதுவரை...



2008, மே.16: நொய்டாவில் உள்ள வீட்டில் ஆருஷி கழுத்தறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

மே.17: ஆருஷி வீட்டு மாடியிலிருந்து வேலைக்காரர் ஹேம்ராஜ் உடல் கண்டெடுக்கப்பட்டது.

மே.19: தல்வார் வீட்டு முன்னாள் வேலைக்காரர் விஷ்ணு சர்மா சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்.

மே.21: டெல்லி போலீசார் விசாரணையை தொடங்கினர்.

மே.22: ஆருஷி பெற்றோரிடம் சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர்.

மே.23: இரட்டை கொலை வழக்கில் ராஜேஷ் தல்வார் கைது செய்யப்பட்டார்.

ஜூன் 1: ஆருஷி கொலை வழக்கை சிபிஐ விசாரணையை தொடங்கியது.

ஜூன் 20: ராஜேஷ் தல்வாரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது.

ஜூன் 25: நூபுர் தல்வாரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது.

ஜூலை 12: ராஜேஷ் தல்வார் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

டிச.29: வேலைக்காரர்களை விடுவித்த சிபிஐ, தல்வார் தம்பதி மீது குற்றம் சுமத்தி வழக்கை முடித்துக் கொள்வதாக அறிவித்தது.

2011, ஜன.25: தல்வார் தம்பதி மீது கொலை வழக்கு, ஆதாரங்களை அழித்த வழக்கு ஆகியவற்றை பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்த காஜியாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மார்ச் 18: தல்வார் தம்பதியின் மேல் முறையீட்டு மனுவை அலகாபாத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

2012, ஜன.6: தல்வார் தம்பதியின் மனுவை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.

2013 அக்.10: இறுதி கட்ட விசாரணை தொடங்கியது.

நவ.25: தல்வார் தம்பதி குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டது.

0 Responses to “ஆருஷியை கொலை செய்தது பெற்றோர்தான் : இன்று தண்டனை அறிவிப்பு”

Post a Comment

Viewers

Flag Counter
All Rights Reserved Ramnad2Day | 7Tech Template by S.S.KarT