14 October 2013

தோல்வியுடன் துவக்கியது இந்தியா ஆஸி அசத்தல் ஆரம்பம் : பின்ச் பெய்லி அபாரம்

தோல்வியுடன் துவக்கியது இந்தியா 
 ஆஸி அசத்தல் ஆரம்பம் : பின்ச் பெய்லி அபாரம்


புனே:
 

       ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை, இந்திய அணி தோல்வியுடன் துவக்கியது. நேற்று நடந்த முதல் ஒருநாள் போட்டியில் 72 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அபாரமாக ஆடிய ஆஸ்திரேலியாவின் ஆரோன் பின்ச், ஜார்ஜ் பெய்லி வெற்றிக்கு வித்திட்டனர். இந்தியா சார்பில் கோஹ்லி மட்டும் அரைசதம் அடித்து ஆறுதல் தந்தார்.

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, ஏழு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி புனேயில் நேற்று நடந்தது. "டாஸ்' வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஜார்ஜ் பெய்லி, "பேட்டிங்' தேர்வு செய்தார்.

பின்ச் அபாரம்:

ஆஸ்திரேலிய அணிக்கு பிலிப் ஹியுஸ், ஆரோன் பின்ச் ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. புவனேஷ்வர் வீசிய 7வது ஓவரில் தொடர்ச்சியாக ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்த பின்ச், இஷாந்த் பந்தில் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரி விளாசினார். அஷ்வின் பந்தை சிக்சருக்கு பறக்கவிட்ட பின்ச், கோஹ்லி பந்தை பவுண்டரிக்கு விரட்டி, அரைசதத்தை பதிவு செய்தார். முதல் விக்கெட்டுக்கு 110 ரன்கள் சேர்த்த போது, ரவிந்திர ஜடேஜா "சுழலில்' ஹியுஸ் (47) சிக்கினார். அடுத்து வந்த ஷேன் வாட்சன் (2), யுவராஜ் சிங்கிடம் சரணடைந்தார். பொறுப்பாக ஆடிய பின்ச் 79 பந்தில் 72 ரன்கள் (3 சிக்சர், 8 பவுண்டரி) எடுத்து அவுட்டானார்.

பெய்லி அசத்தல்:

ஆடம் வோக்ஸ் (7) "ரன்-அவுட்' ஆனார். பின் இணைந்த கேப்டன் ஜார்ஜ் பெய்லி, மேக்ஸ்வெல் ஜோடி பொறுப்பாக ஆடியது. இந்திய பந்துவீச்சை எளிதாக சமாளித்த பெய்லி, அரைசதம் அடித்தார். அஷ்வின் பந்தை சிக்சருக்கு அனுப்பிய மேக்ஸ்வெல், வினய் குமார் வீசிய 38வது ஓவரில் இரண்டு சிக்சர் விளாசினார். ஐந்தாவது விக்கெட்டுக்கு 42 ரன்கள் சேர்த்த போது, மேக்ஸ்வெல் (31) அவுட்டானார். பிராட் ஹாடின் (10) நிலைக்கவில்லை. அபாரமாக ஆடிய பெய்லி, 82 பந்தில் 85 ரன்கள் (10 பவுண்டரி) எடுத்து வெளியேறினார்.

வினய் குமார் வீசிய 48வது ஓவரில் அடுத்தடுத்து இரண்டு சிக்சர் விளாசிய ஜேம்ஸ் பால்க்னர் (27) ஓரளவு கைகொடுத்தார். ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 304 ரன்கள் எடுத்தது. மிட்சல் ஜான்சன் (9), மெக்கே (11) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் யுவராஜ் சிங், அஷ்வின் தலா 2, வினய் குமார், இஷாந்த் சர்மா, ரவிந்திர ஜடேஜா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

விராத் அரைசதம்:

சவாலான இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு ஷிகர் தவான் (7) ஏமாற்றினார். பால்க்னர் வீசிய 9வது ஓவரில் மூன்று பவுண்டரி அடித்த ரோகித் சர்மா (42), வாட்சன் பந்தில் வெளியேறினார். பின் இணைந்த விராத் கோஹ்லி, சுரேஷ் ரெய்னா ஜோடி நிதானமாக ஆடியது. மூன்றாவது விக்கெட்டுக்கு 71 ரன்கள் சேர்த்த போது, பால்க்னர் பந்தில் ரெய்னா (39) அவுட்டானார். சிக்சர் அடித்து ரன் கணக்கை துவக்கிய யுவராஜ் சிங் (7), மிட்சல் ஜான்சன் "வேகத்தில்' பெவிலியன் திரும்பினார். மறுமுனையில் பொறுப்பாக ஆடிய விராத் கோஹ்லி, அரைசதம் அடித்தார். வோக்ஸ் பந்தில் தொடர்ச்சியாக இரண்டு பவுண்டரி விளாசிய கோஹ்லி (61), வாட்சனிடம் சரணடைந்தார்.

தோனி ஏமாற்றம்:

அடுத்து வந்த ரவிந்திர ஜடேஜா (11), பால்க்னர் பந்தில் அவுட்டானார். மெக்கே "வேகத்தில்' கேப்டன் தோனி (19), அஷ்வின் (5) நடையை கட்டினர். வினய் குமார் (11), புவனேஷ்வர் குமார் (18) ஏமாற்றினர். இந்திய அணி 49.4 ஓவரில் 232 ரன்களுக்கு "ஆல்-அவுட்டாகி', தோல்வி அடைந்தது. இஷாந்த் (1) அவுட்டாகாமல் இருந்தார். ஆஸ்திரேலியா சார்பில் பால்க்னர் 3, மெக்கே, வாட்சன் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

இந்த வெற்றியின்மூலம் ஆஸ்திரேலிய அணி 1-0 என தொடரின் முன்னிலை வகிக்கிறது. ஆட்டநாயகன் விருது ஆஸ்திரேலிய கேப்டன் ஜார்ஜ் பெய்லிக்கு வழங்கப்பட்டது. இரண்டாவது போட்டி வரும் அக்., 16ம் தேதி ஜெய்ப்பூரில் நடக்கிறது.



0 Responses to “தோல்வியுடன் துவக்கியது இந்தியா ஆஸி அசத்தல் ஆரம்பம் : பின்ச் பெய்லி அபாரம்”

Post a Comment

Viewers

Flag Counter
All Rights Reserved Ramnad2Day | 7Tech Template by S.S.KarT