26 December 2013

சாதனைகளை முறியடித்து வரும் 'தூம்-3' வசூல் ரூ.313 கோடி

சாதனைகளை முறியடித்து வரும் 'தூம்-3' வசூல் ரூ.313 கோடி




நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்துள்ள, இந்தி நடிகர் ஆமிர்கானின் 'தூம்-3' உள்நாட்டில் மட்டுமில்லாமல் வெளிநாடுகளிலும் வசூலை வாரிக் குவித்துக் கொண்டிருக்கின்றது.

இதுவரை 100 கோடி ரூபாய் வசூலைத் தாண்டியுள்ள படங்களாக '3 இடியட்ஸ்', 'ஏக் தா டைகர்', 'சென்னை எக்ஸ்பிரஸ்' மற்றும் 'கிரிஷ்-3' குறிப்பிடப்பட்டுள்ளன. இவற்றுள் 'கிரிஷ்-3' திரையிடப்பட்ட நான்காவது நாளில் 100 கோடியைத் தொட்டது. ஆனால் 'தூம்-3'யோ திரையிடப்பட்ட மூன்றாவது நாளிலேயே நூறு கோடியைத் தாண்டியுள்ளது.

தயாரிப்பு செலவு ரூ.250 கோடி என்று கணக்கீடுகள் காட்டப்பட்டிருக்க திரையிடப்பட்ட ஒரு வாரத்திற்குள்ளேயே ரூ.313 கோடி வசூலாகியுள்ளது இந்தப் படம் எவ்வளவு தூரம் பொதுமக்களைச் சென்று சேர்ந்துள்ளது என்பதைத் தெரிவிக்கின்றது.


பாகிஸ்தானில் சமீபத்தில் இந்தியப் படங்களுக்கு சென்சார் சான்றிதழ் அளிக்கக்கூடாது என்ற உத்தரவுகளைத் தாண்டி இந்தப் படம் வெளியானது. அங்கு பல மல்டிபிளக்ஸ் திரையரங்குகளிலும் தொடர்ச்சியாக ஐந்து காட்சிகள் ஓடிக்கொண்டிருப்பது படத்தின் தலைப்புக்கேற்ற அதன் ஆரவாரமான வெற்றியைக் குறிப்பிடுகின்றது. கராச்சியில் மட்டும் 20 மில்லியன் வசூல் செய்துள்ள இப்படம் சென்ற மாதம் அங்கு திரையிடப்பட்ட 'வார்' படத்தின் சாதனையையும் முறியடித்துள்ளது என்று கூறப்படுகின்றது.

வார மத்தியில் வந்த கிறிஸ்துமஸ் விடுமுறை நாளிலும் 23.75 கோடி ரூபாய் வசூலைக் குவித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நடிகர் ஹிருத்திக் ரோஷனின் சமீபத்திய வெற்றியை தற்போது ஆமிர்கான் முறியடித்துள்ள நிலையில் இவரது வெற்றியை மற்றொரு நட்சத்திரம் முறியடிக்க முயற்சிப்பதன் மூலம் இந்தித் திரையுலகில் ஆரோக்கியமான போட்டிகளும், வெற்றிகளும் ஏற்படக்கூடும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கலாம்.

No comments:

Post a Comment