29 August 2013
காற்றாலை மின்உற்பத்தி அடியோடு சரிவு: மீண்டும் மின்தடை வருமோ?
Do you like this story?
காற்றாலை மின்உற்பத்தி அடியோடு சரிவு: மீண்டும் மின்தடை வருமோ?
சென்னை, ஆக.29:
தூத்துக்குடியில் அனல்மின்நிலைய உற்பத்தி பாதிக்கப்பட்டதுடன், காற்றாலை மின்உற்பத்தியும் அடியோடு சரிந்து உள்ளதால், தமிழ்நாட்டில் மீண்டும் மின்தடை ஏற்படுமோ? என்று பொதுமக்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது. இதுகுறித்து மின்சார வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-
தமிழகத்துக்கு தேவைப்படும் மின்சாரம் அனல்மின் நிலையம், புனல் மின்நிலையம், காற்றாலைகள், டீசல் மின்சார உற்பத்தி நிலையம் மற்றும் மத்திய தொகுப்பிலிருந்தும் மின்சாரம் பெறப்பட்டு மின்நுகர்வோர்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. சராசரியாக ஒரு நாளைக்கு 12 ஆயிரம் மெகாவாட் வரை மின்சாரம் தமிழ்நாட்டுக்கு தேவைப்படுகிறது.
தேவையான மின்சாரம் மேற்கண்ட வழிகளில் போதுமானதாக கிடைக்கவில்லை. அத்துடன் மாநிலம் முழுவதும் புதிய குடியிருப்புகள் ஆண்டுக்கு சராசரியாக 10 சதவீதம் அதிகரிப்பு மற்றும் புதிய தொழில்கள் தொடங்குவதற்கான பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலமாக கடந்த பத்தாண்டுகளில் 4,499 மெகாவாட் மின்சார தேவை அதிகரித்துள்ளது.
இதனால் புதிய மின் திட்டங்களை செயல்படுத்துவதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு ஆகிய 3 மாதங்களும் காற்று வீசும் சீசன் என்பதால், இந்த மாதங்களில் காற்றாலைகள் மூலம் அதிகபட்சமாக 4 ஆயிரம் மெகாவாட் வரை மின்சாரம் கிடைப்பது வழக்கம்.
ஆனால், இந்த ஆண்டு காற்று சீசன் தொடங்குவதற்கு முன்பாகவே காற்று அதிகம் வீசியதால் மே மாதமே காற்றாலைகள் மூலம் மின்சாரம் எதிர்பார்த்த அளவு கிடைத்து வந்தது. தற்போது காற்று சீசன் இறுதி கட்டமாக இருப்பதால் காற்று அதிகம் இருப்பது வழக்கம். ஆனால் கால நிலை மாறி இருப்பதால் காற்று சீசன் அடியோடு குறைந்து மின் உற்பத்தியும் அடியோடு சரிந்துள்ளது.
காற்றின் வேகம் வினாடிக்கு 2 மீட்டர் அளவுக்கு குறைந்ததால், காற்றாலைகள் மூலம் நேற்று காலை 7.50 மணிக்கு 254 மெகாவாட் மின்சாரம் மட்டுமே கிடைத்துள்ளது. காற்றாலைகளும் கைவிரித்து வரும் நிலையில், தூத்துக்குடியில் உள்ள அனல்மின்நிலையத்தில் நேற்று காலை 5.30 மணி அளவில் பாய்லரில் பஞ்சர் ஏற்பட்டு 220 மெகாவாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டது.
அதை சீரமைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். அதேபோன்று மேட்டூரிலும் அடிக்கடி மின்உற்பத்தி பாதிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்திற்கு தேவையான மின்சாரத்தில் அனல் மின்நிலையங்கள் மூலம் 2,408 மெகாவாட், புனல் மின் நிலையங்கள் மூலம் 1,189 மெகாவாட், எரிவாயு மின்நிலையங்கள் மூலம் 322 மெகாவாட், தனியார் மின் நிறுவனங்கள் மூலம் 1093 மெகாவாட் பெறப்படுகிறது.
மத்திய அரசின் தேசிய அனல்மின் கழகம், தேசிய அணுமின்கழகம், நெய்வேலி அனல் மின்நிலையம், தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் உள்ள மின்நிலையங்கள் மூலமாக 3,045 மெகாவாட் மின்சாரம் பெறப்படுகிறது. ஆகமொத்தம் 9,245 மெகாவாட் மின்சாரம் பெறப்படுகிறது.
காற்று வீசும் காலமும் ஓரிரு நாட்களில் முடிவடைய இருப்பதால் நிலைமை மேலும் மோசமடையும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது தென்மேற்கு பருவ மழை முடிவடைந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து விட்டதால் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சாதனங்கள் குறிப்பாக ஏசி உள்ளிட்ட அனைத்து வகையான மின்சாதனங்கள் பயன்பாடும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மின்தேவை கணிசமாக அதிகரித்திருக்கும் நிலையில் அதற்கு ஏற்ப மின்உற்பத்தி இல்லாததால் தமிழகத்தில் சென்னை நீங்கலாக மற்ற மாவட்டங்களில் மீண்டும் மின்தடை வருமோ? என்ற அச்சம் பொதுமக்களை போல மின்சார வாரிய அதிகாரிகளுக்கும் இருக்கத்தான் செய்கிறது.
தென்மேற்கு பருவ மழைக்கும், வடகிழக்கு பருவமழைக்கும் இடைப்பட்ட இரண்டு முதல் மூன்று வாரத்திற்கு மின்சார நிலைமையை சமாளிக்க அதாவது செப்டம்பர் கடைசி வாரத்திலிருந்து அக்டோபர் முதல் இரண்டு வாரங்களுக்கு தேவையான மின்சாரத்தை சமாளிக்க போர்க்கால நடவடிக்கையை தமிழ்நாடு மின்சாரவாரியம் எடுத்து வருகிறது.
மின்பற்றாக்குறைக்கு மத்திய தொகுப்பிலிருந்து பெறப்படும் மின்சாரத்தின் அளவு குறைவு உட்பட பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் தமிழகத்தில் தனிநபர் மின்நுகர்வு 8 சதவிதத்திலிருந்து 9 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதேபோல் தமிழகத்தில் வழக்கமாக அதிகபட்சமாக மின் நுகர்வு நேரம் மாலை 6 மணியிலிருந்து இரவு 8.30 மணி வரை இருந்தது.
தற்போது அந்த நேரம் மாற்றப்பட்டு இரவு 11 மணிக்கு மேல் அதிகம் மின்நுகர்வு செய்யப்படுகிறது. இந்த நேரத்தில் 2,500 மெகாவாட் வரை மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு மின்வாரிய அதிகாரிகள் கூறினார்கள்.
This post was written by: S.S.KarT
S.S.KarT Manuel is a professional blogger, web designer and front end web developer. Follow him on Twitter
Subscribe to:
Post Comments (Atom)

0 Responses to “காற்றாலை மின்உற்பத்தி அடியோடு சரிவு: மீண்டும் மின்தடை வருமோ?”
Post a Comment