19 October 2013

போலீஸ் வீடியோ எடுத்ததால் பரபரப்பு வீரப்பன் சமாதியில் மனைவி, மகள் அஞ்சலி

போலீஸ் வீடியோ எடுத்ததால் பரபரப்பு வீரப்பன் சமாதியில் 
மனைவி, மகள் அஞ்சலி



மேட்டூர்: 

             சந்தன கடத்தல் வீரப்பனின் 9ம் ஆண்டு நினைவுநாளான நேற்று மேட்டூர் அருகே உள்ள சமாதிக்கு அவரது மனைவி முத்துலட்சுமி, இளைய மகள் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். அப்போது, அவர்களை போலீசார் படம்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சந்தன கடத்தல் வீரப்பனின் 9வது நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி மேட்டூர் மூலக்கரை காவிரி கரையோரத்தில் உள்ள சமாதியில் அஞ்சலி செலுத்த அவரது மனைவி முத்துலட்சுமி ஏற்பாடு செய்திருந்தார். இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர்., பல்வேறு வாசகங்கள் அடங்கிய பேனர்களும் ஆங்காங்கே கட்டப்பட்டிருந்தன. சுவரொட்டிகளும் பல இடங்களில் காணப்பட்டன. வீரப்பன் மனைவி முத்துலட்சுமி, அவரது இளைய மகள் பிரபாவதி ஆகியோர் பூஜை செய்து வழிபட்டனர்.

 அப்போது, அங்கு கூடியிருந்தவர்கள் வாழ்த்தி கோஷமிட்டதோடு, வீரப்பன் லட்சியத்தை நிறைவேற்றுவோம் என உறுதி ஏற்றுக்கொண்டனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது.வீரப்பன் நினைவு தினத்தையொட்டி அவரது சமாதிக்கு அருகில் அதிரடிப்படையினர், கியூ பிரிவு போலீசார், தனிப்பிரிவு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், கூட்டத்திற்கு வந்தவர்களை வீடியோவில் பதிவு செய்து கொண்டனர். புகைப்படமும் எடுத்துக்கொண்டனர். அஞ்சலி செலுத்த வந்த முத்துலெட்சுமி கூறும்போது, ஆண்டுதோறும் அனுமதிபெற்று நினைவுநாள் நிகழ்ச்சியை நடத்தி வந்தோம். இந்த ஆண்டு சுவரொட்டிகள் ஒட்ட கொளத்தூர் போலீசாரும், மேட்டூர் டிஎஸ்பியும் அனுமதிக்கவில்லை. இதற்கு  கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்,’’ என்றார்.


0 Responses to “போலீஸ் வீடியோ எடுத்ததால் பரபரப்பு வீரப்பன் சமாதியில் மனைவி, மகள் அஞ்சலி”

Post a Comment

Viewers

Flag Counter
All Rights Reserved Ramnad2Day | 7Tech Template by S.S.KarT