18 December 2013

டெல்லி மேல்சபையில், 5 மணி நேர விவாதத்துக்கு பிறகு லோக்பால் மசோதா நிறைவேறியது

டெல்லி மேல்சபையில், 5 மணி நேர விவாதத்துக்கு பிறகு லோக்பால் மசோதா நிறைவேறியது பா.ஜனதா, அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கட்சிகள் ஆதரவு 



புதுடெல்லி:

                 ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதா, பாராளுமன்ற மக்களவையில் கடந்த 2011ம் ஆண்டில் நிறைவேற்றப்பட்டது.

மேல்சபையில் விவாதம்

அப்போது டெல்லி மேல்சபையில் நள்ளிரவு வரை விவாதம் நடைபெற்றும் கடும் எதிர்ப்பு காரணமாக இந்த மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை. அதைத் தொடர்ந்து தேர்வு குழுவின் பரிசீலனைக்கு மசோதா அனுப்பிவைக்கப்பட்டது. தேர்வு குழு வழங்கிய 22 திருத்தங்களில் மூன்றை தவிர மற்ற திருத்தங்கள் அனைத்தையும் மத்திய அரசு ஏற்றுக்கொண்டது.திருத்தப்பட்ட லோக்பால் மற்றும் லோக் அயுக்தா சட்ட மசோதா (2011), மேல்சபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடைபெற்றது. மசோதாவை தாக்கல் செய்து பேசிய மத்திய சட்ட மந்திரி கபில் சிபல், லோக்பால் மசோதாவை நிறைவேற்றுவதற்கு கிடைத்த வரலாற்று சிறப்புமிக்க வாய்ப்பு இது என்று குறிப்பிட்டார்.

நிறைவேறியது

விவாதத்தில் பங்கேற்ற சமாஜ்வாடி கட்சி தவிர அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கட்சிகளுமே ஒரு சில யோசனைகளை தெரிவித்தாலும் மசோதாவுக்கு ஆதரவு அளித்தன. 5 மணி நேர விவாதத்திற்கு பிறகு பதில் அளித்து மந்திரி கபில் சிபல் பேசியபின் குரல் ஓட்டெடுப்பு மூலம் லோக்பால் மசோதா மேல்சபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.திருத்தப்பட்ட லோக்பால் மசோதா மீண்டும் இன்று (புதன்கிழமை) பாராளுமன்ற மக்களவையில் விவாதத்துக்கு வந்து நிறைவேற்றப்படுகிறது. அதன்பிறகு ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டு லோக்பால் மசோதா சட்டமாக நிறைவேற்றப்படும்.


விசாரணை வரம்புக்குள் பிரதமர்

ஊழலுக்கு எதிரான இந்த லோக்பால் சட்ட மசோதா, சில பாதுகாப்பு அம்சங்களுடன் பிரதமரையும் அதன் விசாரணை அதிகார வரம்புக்குள் கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே மேல்சபையில் இந்த மசோதா நிறைவேறாமல் போனதற்கு முக்கிய காரணம், மாநில அரசுகள் லோக் அயுக்தாவை உருவாக்குவது கட்டாயம் என்ற பிரிவுக்கு தெரிவிக்கப்பட்ட கடும் எதிர்ப்புதான்.தற்போது மாநில அரசுகள் லோக் அயுக்தாவை உருவாக்குவது சட்டபூர்வம் என்ற விதிமுறை தளர்த்தப்பட்டுவிட்டது. ஊழல் குற்றம் சாட்டப்பட்ட அதிகாரியிடம் நோட்டீசு அனுப்பாமல் சி.பி.ஐ. அல்லது போலீசார் திடீர் சோதனை நடத்துவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்ற பா.ஜனதாவின் முக்கிய திருத்தத்தை அரசு ஏற்றுக்கொண்டது.குறிப்பிட்ட ஒரு வழக்கை விசாரிப்பதற்காக லோக்பால் அமைப்பு நியமிக்கும் சி.பி.ஐ. அதிகாரியை மாறுதல் செய்யக்கூடாது என்ற திருத்தமும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட அதிகாரி, அவர் மீதான விசாரணை தொடங்குவதற்கு முன்பாக தனது நிலை குறித்து விளக்கம் அளிக்க அனுமதிக்கக்கூடாது என்ற திருத்தம் ஏற்கப்படவில்லை.

பலம் வாய்ந்த மசோதா

தொடக்கத்தில் மசோதாவை தாக்கல் செய்து பேசிய மத்திய சட்ட மந்திரி கபில் சிபல், கூறியதாவது:பிரதமரையும் இந்த சட்ட வரம்புக்குள் கொண்டு வர இருப்பதால், தற்போது இது பலம் வாய்ந்த மசோதாவாக மாறி உள்ளது. ஊழல் புகார்களை விசாரிப்பதற்கான 8 உறுப்பினர் லோக்பால் அமைப்பை நியமிப்பதற்கான தேர்வுக்குழுவில் பிரதமர், மக்களவை சபாநாயகர், மக்களவை எதிர்க்கட்சி தலைவர், சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி மற்றும் பிரபல நீதித்துறை நிபுணர் ஒருவர் இடம்பெறுவார்கள்.

சிபாரிசுகள் ஏற்பு
எனவே லோக்பால் அமைப்பு வெளிப்படை தன்மை கொண்டதாக இருக்கும். இந்த மசோதா தொடர்பாக, காங்கிரஸ் தலைவர் சத்யவரத் சதுர்வேதி தலைமையில் அமைக்கப்பட்ட தேர்வுக்குழுவின் பெரும்பான்மையான சிபாரிசுகளை மத்திய அரசு ஏற்றுக்கொண்டு உள்ளது.இவ்வாறு கபில் சிபல் கூறினார்.மத்திய பணியாளர் நல ராஜாங்க மந்திரி வி.நாராயணசாமிதான் இந்த மசோதாவை தாக்கல் செய்வதாக இருந்தது. ஆனால், அவருடைய மனைவிக்கு ஏற்பட்ட உடல் நலக்குறைவு காரணமாக சட்ட மந்திரி கபில் சிபல் மசோதாவை தாக்கல் செய்து பேசினார்.

அருண்ஜெட்லி

மேல்சபை எதிர்க்கட்சி தலைவர் அருண்ஜெட்லி விவாதத்தை தொடங்கி வைத்துப் பேசுகையில், கடந்த 46 ஆண்டுகளுக்கு மேலாக இந்த பிரச்சினையில் விவாதம் நடைபெற்று வருவதால் லோக்பால் அமைப்பை உருவாக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாக குறிப்பிட்டார்.லோக்பால் அமைப்புக்கு மத அடிப்படையில் உறுப்பினர்களை நியமிக்க இட ஒதுக்கீடு வழங்குவது, விசாரணை தொடங்குவதற்கு முன்பாக அதிகாரிகளுக்கு நோட்டீசு அனுப்புவது உள்ளிட்ட சில பிரிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த அருண் ஜெட்லி மொத்தத்தில் மசோதாவை பா.ஜனதா ஆதரிப்பதாக தெரிவித்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு

சீதாராம் யச்சூரி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு) பேசும்போது கார்பரேட் நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்குவதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும், கார்பரேட் நிறுவனங்களுக்கு எதிரான ஊழல் புகார்களையும் லோக்பால் அமைப்பு விவாதிக்க வேண்டும் என்றும் வற்புறுத்தினார்.பகுஜன் சமாஜ், திரிணாமுல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதாதளம், பிஜு ஜனதா தளம் தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சி  உறுப்பினர்களும், நியமன உறுப்பினரான ஏ.எஸ்.கங்குலி ஆகியோர் ஒரு சில யோசனைகளை தெரிவித்தாலும் மொத்தத்தில் மசோதாவை வரவேற்று ஆதரவு தெரிவித்தனர்.

அ.தி.மு.க - தி.மு.க.

லோக்பால் விசாரணை வரம்புக்குள் பிரதமர் மற்றும் முதல்மந்திரிகளை சேர்ப்பதற்கு அ.தி.மு.க. உறுப்பினர் வி.மைத்ரேயன் எதிர்ப்பு தெரிவித்தார்.மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்த தி.மு.க. உறுப்பினர் கே.பி.ராமலிங்கம், பிரதமர், முதல்மந்திரிகளையும் விசாரணை வரம்புக்குள் சேர்க்க வேண்டும் என்றும், அதே நேரத்தில் தவறாக அதன் அதிகாரத்தை பயன்படுத்தக்கூடாது என்றும் வலியுறுத்தினார். மத நிறுவனங்களும் லோக்பால் மசோதா வரம்புக்குள் சேர்க்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.


பிரதமரை சேர்க்க எதிர்ப்பு


இந்த மசோதாவின் வரம்புக்குள் பிரதமரை சேர்ப்பதற்கு காங்கிரஸ் உறுப்பினர் எம்.எஸ்.கில் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இந்தியாவின் 130 கோடி மக்களுக்கு மிக மிக முக்கியத்துவம் வாய்ந்த சிறப்பு பிரதிநிதி அவர் என்று கில் குறிப்பிட்டார்.இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் அச்சுதன், கார்பரேட் நிறுவனங்களுக்கு அரசு உதவி செய்வதாக குற்றம் சாட்டினார்.

சமாஜ்வாடி வெளிநடப்பு

முன்னதாக லோக்பால் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சமாஜ்வாடி கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசிய அந்த கட்சியின் உறுப்பினர் ராம்கோபால் யாதவ், இந்த சட்டத்தின்படி, பிரதமர், மந்திரிகள், எம்.பி.க்கள் என அனைவருமே போலீஸ் சூப்பிரண்டு, துணை சூப்பிரண்டுகள் அந்தஸ்துள்ள அதிகாரிகள் முன்னிலையில் வாக்குமூலம் பதிவு செய்ய வேண்டியது இருக்கும் என்றார்.ஒரு மந்திரி அல்லது அதிகாரி எந்த ஒரு ஆவணத்தில் கையெழுத்து போடுவதற்கும் அச்சப்படும் சூழ்நிலை உருவாகும் என்றும் அவர் எச்சரித்தார்.

0 Responses to “டெல்லி மேல்சபையில், 5 மணி நேர விவாதத்துக்கு பிறகு லோக்பால் மசோதா நிறைவேறியது ”

Post a Comment

Viewers

Flag Counter
All Rights Reserved Ramnad2Day | 7Tech Template by S.S.KarT