27 February 2017

இராமநாதபுரம் மாவட்டத்தில் ONGC நிறுவனம் ஹைட்ரோகார்பன் எடுக்க திட்டமிட்டுள்ள 22 இடங்களின் பட்டியல்.!

இராமநாதபுரம் மாவட்டத்தில் ONGC நிறுவனம் ஹைட்ரோகார்பன் எடுக்க திட்டமிட்டுள்ள 22 இடங்களின் பட்டியல்.!இராமநாதபுரம் மாவட்டத்தில் #ONGC நிறுவனம் #ஹைட்ரோகார்பன் எடுக்க திட்டமிட்டுள்ள 22 இடங்களின் பட்டியல்.!

1. திருப்புல்லாணி (SN 236)
2. பெரியபட்டிணம் (SN 26)
3. ரெகுநாதபுரம் (SN 61/1C)
4. பனைக்குளம் (SN 81/1D)
5. களரி (SN 6)
6. புள்ளந்தை (SN 3)
7. களரி (SN 335/2B) 
8. புத்தேந்தல் (SN 208/1B)
9. திருப்புல்லாணி (SN 24)
10. உத்திரகோசமங்கை (SN 121/122)
11. அச்சடிபிரம்பு (SN 125)
12. பட்டணம்காத்தான் (SN 375)
13. பட்டணம்காத்தான் (SN 150)
14. பழங்குளம் (SN 103/104)
15. சித்தார்கோட்டை (SN 180/1A5)
16. தேவிபட்டினம் (SN 333)
17. பெருவயல் (SN 414)
18. அத்தியூத்து (SN 221/222)
19. ஆற்றங்கரை (SN 113/2B)
20. கீழ் நாகாச்சி (SN 127/6A2)
21. பிரப்பன்வலசை (SN 107/2A)
22. சாத்தக்கோன்வலசை (SN 150/2B).

#SN - சர்வே எண்.
வரிசை எண் - ஹைட்ரோ கார்பன் கிணறுகளுக்கான எண்.

ஒருங்கிணைவோம் தாய் மண்ணை காப்போம்!! 

27 February 2017 by Unknown · 0

27 December 2013

2-வது டெஸ்ட் கிரிக்கெட்: முதல் இன்னிங்சில் இந்தியா 334 ரன்களில் சுருண்டது

2-வது டெஸ்ட் கிரிக்கெட்: 
முதல் இன்னிங்சில் இந்தியா 334 ரன்களில் சுருண்டது


டர்பன், டிச. 27:

                இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டர்பனில் நேற்று தொடங்கியது. முதலில் களமிறங்கிய இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்திருந்த நிலையில், போதிய வெளிச்சம் இல்லாததால் முதல் நாள் ஆட்டம் சீக்கிரமே முடித்துக் கொள்ளப்பட்டது. அப்போது, முரளி விஜய் 91 ரன்களுடனும், புஜாரா 58 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இன்று இரண்டாவது நாள் ஆட்டத்திற்கு வீரர்கள் தயார் நிலையில் இருந்தனர். முரளிவிஜய் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மழை பெய்ததால் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. மேகமூட்டம் இருந்ததால் போதிய வெளிச்சமும் இல்லை. ஆனால் ஏராளமான ரசிகர்கள் குடை பிடித்தபடி போட்டியைக் காண காத்திருந்தனர்.

வானிலை சீராக இல்லாததால் முன்கூட்டியே அதாவது உள்ளூர் நேரப்படி 11.30 மணிக்கு உணவு இடைவேளை அறிவிக்கப்பட்டது. பின்னர் மழை சற்று குறைய ஆரம்பித்து வெளிச்சம் வரத் தொடங்கியது. எனவே, உணவு இடைவேளைக்குப் பிறகு போட்டி தொடங்கியது. இன்று குறைந்தது 75 ஓவர்கள் பந்து வீசுவதற்காக ஆட்ட நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

முரளி விஜயும், புஜாராவும் களமிறங்கினர். இந்த விக்கெட்டுகளை விரைவில் கைப்பற்றும் முயற்சியில் மோர்கல், ஸ்டெயின் இருவரும் ஆக்ரோஷமாக பந்து வீசினர். விக்கெட்டுகளை காப்பாற்ற இருவரும் நிதானமாக ஆடினர்.  ஆனால், அணியின் ஸ்கோர் 198 ஆக இருந்தபோது, புஜாரா விக்கெட்டை இழந்தார். அவர் 132 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 70 ரன்கள் எடுத்தார்.

மறுமுனையில் சதத்தை நோக்கி பயணித்த முரளி விஜய், 97 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரது விக்கெட்டை ஸ்டெயின் கைப்பற்றினார். அடுத்து களமிறங்கிய ரோகித் சர்மா டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். அதன்பின்னர் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 46 ரன்கள் சேர்த்த கோலியை மோர்கல் வெளியேற்றினார். டோனி 24 ரன்களில் விக்கெட்டை இழந்ததையடுத்து மற்ற விக்கெட்டுகளும் விறுவிறுவென சரிந்தன.

இதனால் இந்திய அணி 334 ரன்களில் ஆல் அவுட் ஆனது. ரகானே 51 ரன்களுடன் களத்தில் இருந்தார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் 30 ஓவர்கள் வீசிய ஸ்டெயின் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மோர்கல் 3 விக்கெட்டுகளும், டுமினி ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

இதையடுத்து தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சை ஆடி வருகிறது. 

27 December 2013 by Unknown · 0

தி.மு.க.வில் இணைந்தார் டி.ராஜேந்தர்: கருணாநிதி வரவேற்பு

தி.மு.க.வில் இணைந்தார் டி.ராஜேந்தர்: கருணாநிதி வரவேற்பு


சென்னை,டிச. 27:

         தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்று லட்சிய தி.மு.க. என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கி செயல்பட்டவர் நடிகர் டி.ராஜேந்தர். அவர் இன்று திமுக தலைவர் கருணாநிதியை சென்னை கோபாலபுரத்தில் உள்ள அவரது வீட்டில் சந்தித்து பேசினார். அப்போது மக்களவைத் தேர்தல் பற்றி இருவரும் ஆலோசனை நடத்தினர். பின்னர் கருணாநிதியின் அழைப்பை ஏற்று ராஜேந்தர் தி.மு.க.வில் இணைந்தார்.

இதுதொடர்பாக தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-


அன்புத் தம்பி டி ராஜேந்தர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்து, கழகத்தின் வளர்ச்சிக்கான பிரச்சாரப் பணியிலே தீவிரமாக ஈடுபட்டு, பின்னர் ஒரு சில தவிர்க்க முடியாத காரணங்களால், கழகத்திலிருந்து விலக வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அது குறித்து நானும் அப்போது அறிக்கை வெளியிட்டிருந்தேன். அவரும் விளக்கமளித்திருந்தார்.

இப்போது திராவிட முன்னேற்றக் கழகத்தின் பிரச்சாரப் பகுதியை மேலும் வலிமைப்படுத்தும் எண்ணத்தோடு, என் அன்பு அழைப்பினையேற்று, என் விருப்பப்படி மீண்டும் கழகத்தில் அவர் இணைந்துள்ளதை வரவேற்கிறேன். தொண்டர்களும் வரவேற்பார்கள் என்று நம்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

by Unknown · 0

மனைவி 2-மாத பெண் குழந்தை கிணற்றில் வீசி கொடூர கொலை 2–ம் திருமணத்திற்கு ஆசை வாலிபர் வெறிச்செயல்

மனைவி 2-மாத பெண் குழந்தை கிணற்றில் வீசி கொடூர கொலை
 2–ம் திருமணத்திற்கு ஆசை: வாலிபர் வெறிச்செயல் 


 தர்மபுரி அருகே 2–ம் திருமணத்திற்கு ஆசைப்பட்டு மனைவி மற்றும் 2 மாத பெண் குழந்தையை கிணற்றில் வீசி வாலிபர் கொடூரமாக கொலை செய்தார். இதுதொடர்பாக போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:–

துர்நாற்றம்


தர்மபுரி வெண்ணாம்பட்டி வ.உ.சி. நகரில் பாழடைந்த சுமார் 30 அடி ஆழ கிணறு உள்ளது. இந்த கிணற்றில் இருந்து நேற்று முன்தினம் இரவு கடும் துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து பொதுமக்கள் தர்மபுரி டவுன் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கிணற்றில் பார்த்தபோது ஒரு பெண்ணின் உடல் அழுகிய நிலையில் கிடந்தது தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து போலீசார் கிணற்றில் இறங்கி பெண்ணின் பிணத்தை மீட்டனர். 25 வயது மதிக்கத்தக்க அந்த பெண்ணின் உடல் அருகில் துணியால் சுற்றப்பட்ட பை ஒன்று கிடந்தது. அதனையும் போலீசார் கைப்பற்றி மேலே கொண்டு வந்து பார்த்தனர். அதில் பிறந்து 2 மாதமே ஆன பெண் சிசு அழுகிய நிலையில் இருப்பது தெரியவந்தது. மேலும் அந்த பையில் இறந்து கிடந்த சிசு ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் பிறந்ததற்கான அடையாளம் கிடைத்தது.

காதல் திருமணம்

அதைத்தொடர்ந்து போலீசார், பெண் மற்றும் சிசுவின் உடல்களை தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது கிணற்றில் அழுகிய நிலையில் கிடந்த பெண் ஓசூர் ஜீவா நகரை சேர்ந்த செல்வம்– மாதம்மாள் தம்பதிகளின் மகள் ஜோதி(வயது21) என்பதும், அந்த பெண் சிசு அவருக்கு பிறந்தது தான் என்பதும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் அந்த பெண்ணின் கணவரிடம் விசாரணை நடத்தினர். இதில், திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:–

              செல்வம்– மாதம்மாள் தம்பதிகளின் 3–வது மகள் ஜோதி. இவர் தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி படித்து வந்துள்ளார். அப்போது சோகத்தூரை சேர்ந்த ஜீவா(24) என்பவருக்கும், ஜோதிக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்துள்ளனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டு தனிக்குடித்தனம் நடத்தி வந்தனர். இதில் ஜோதி கர்ப்பம் அடைந்தார்.

அடித்து கிணற்றில் வீச்சு

இதனால் ஜோதி ஓசூரில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு பிரசவத்திற்கு சென்றார். கடந்த 2 மாதத்திற்கு முன்பு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. பின்னர் ஜோதியும் குழந்தையும் பெற்றோர் வீட்டில் இருந்து வந்தனர். மனைவி மற்றும் குழந்தையை பார்க்க ஜீவா மாமனார் வீட்டுக்கு சென்றார். அங்கு அவர்களிடம் தனக்கு பெற்றோர் வேறு பெண் பார்த்து திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். அதனை தடுக்க எனது மனைவி மற்றும் குழந்தையை தன்னுடன் அனுப்பி வைக்கும்படி கேட்டுள்ளார்.

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் ஜோதி மற்றும் குழந்தையை ஜீவாவுடன் அவர்கள் தர்மபுரிக்கு அனுப்பி வைத்தனர். 2 பேரையும் மோட்டார் சைக்கிளில் ஊருக்கு அழைத்து வரும் வழியில் தர்மபுரி வெண்ணாம்பட்டி வ.உ.சி. நகரில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வண்டியை நிறுத்தி ஜோதியிடம் ஜீவா தகராறு செய்துள்ளார். அப்போது ஜீவா, ஜோதியை தாக்கியதில் அவர் மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து அருகில் உள்ள பாழடைந்த கிணற்றில் ஜோதியை தூக்கி வீசியுள்ளார். பின்னர் 2 மாத பெண் குழந்தையை துணியால் சுற்றி பையில் வைத்து கிணற்றில் வீசியுள்ளார். இதில் 2 பேரும் இறந்து இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

கணவர் கைது

மேலும் ஜீவா 2–வது திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டுள்ளார். இதற்கு தனது முதல் மனைவி ஜோதி தடையாக இருப்பாள் என்பதற்காக அவரையும், அந்த பெண் குழந்தையையும் கொன்று விட்டால் வேறு திருமணம் செய்து கொள்ளலாம் என்று திட்டமிட்டு இந்த கொலைகளை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிந்து ஜீவாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெண் மற்றும் 2 மாத குழந்தையை கணவனே கிணற்றில் வீசி கொன்ற சம்பவம் தர்மபுரி பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

by Unknown · 0

வித்தியாசமான தோற்றத்தில் சரத்குமார் நடிக்கும் ‘ஏய்,’ 2–ம் பாகம்

வித்தியாசமான தோற்றத்தில் சரத்குமார் நடிக்கும் ‘ஏய்,’ 2–ம் பாகம் 


வெங்கடேஷ் டைரக்க்ஷனில் சரத்குமார்- நமீதா நடிப்பில் சூப்பர் ஹிட்டான திரைப்படம் ஏய். இதில் ஒருபுறம் நமீதா கவர்ச்சியில் கலக்கி இருந்தாலும் மற்றொரு புறம் வடிவேலு காமெடியில் அசத்தி இருப்பார். இவர்களுக்கு இணையாக சரத்குமாரின் ஆக்க்ஷனும் படத்தில் இடம் பெற்றிருக்கும். படத்துக்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருந்தார்.

 ஏய் படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. அதற்கான ஸ்க்ரிப்டை தயார் செய்யும் பணியில் இறங்கியுள்ளார் இயக்குநர் ஏ வெங்கடேஷ். இந்தக் கதையில் சரத்குமார் நான்கு வேடங்களில் நடிப்பார் என்று முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.


இந்த படத்தில், சரத்குமார் மிக வித்தியாசமான தோற்றத்தில் வருகிறார். இதற்காக, ஹாலிவுட் மேக்கப்மேன் ஒருவர் வரவழைக்கப்படுகிறார். ‘ஏய்’ படத்தில் இடம்பெற்ற மற்ற நட்சத்திரங்களையும் ‘ஏய்–2’ படத்தில் கொண்டு வருவது பற்றி விவாதம் நடந்து வருகிறது!

ஏய் முதல் பாகத்தில் நடித்த நமீதா, வடிவேலு ஆகியோரை அதன் இரண்டாம் பாகத்திலும் நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளனர். மேலும் இரண்டு கதாநாயகிகளும் இந்தப் படத்தில் நடிக்கவிருக்கிறார்கள்.

by Unknown · 0

26 December 2013

சாதனைகளை முறியடித்து வரும் 'தூம்-3' வசூல் ரூ.313 கோடி

சாதனைகளை முறியடித்து வரும் 'தூம்-3' வசூல் ரூ.313 கோடி
நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்துள்ள, இந்தி நடிகர் ஆமிர்கானின் 'தூம்-3' உள்நாட்டில் மட்டுமில்லாமல் வெளிநாடுகளிலும் வசூலை வாரிக் குவித்துக் கொண்டிருக்கின்றது.

இதுவரை 100 கோடி ரூபாய் வசூலைத் தாண்டியுள்ள படங்களாக '3 இடியட்ஸ்', 'ஏக் தா டைகர்', 'சென்னை எக்ஸ்பிரஸ்' மற்றும் 'கிரிஷ்-3' குறிப்பிடப்பட்டுள்ளன. இவற்றுள் 'கிரிஷ்-3' திரையிடப்பட்ட நான்காவது நாளில் 100 கோடியைத் தொட்டது. ஆனால் 'தூம்-3'யோ திரையிடப்பட்ட மூன்றாவது நாளிலேயே நூறு கோடியைத் தாண்டியுள்ளது.

தயாரிப்பு செலவு ரூ.250 கோடி என்று கணக்கீடுகள் காட்டப்பட்டிருக்க திரையிடப்பட்ட ஒரு வாரத்திற்குள்ளேயே ரூ.313 கோடி வசூலாகியுள்ளது இந்தப் படம் எவ்வளவு தூரம் பொதுமக்களைச் சென்று சேர்ந்துள்ளது என்பதைத் தெரிவிக்கின்றது.


பாகிஸ்தானில் சமீபத்தில் இந்தியப் படங்களுக்கு சென்சார் சான்றிதழ் அளிக்கக்கூடாது என்ற உத்தரவுகளைத் தாண்டி இந்தப் படம் வெளியானது. அங்கு பல மல்டிபிளக்ஸ் திரையரங்குகளிலும் தொடர்ச்சியாக ஐந்து காட்சிகள் ஓடிக்கொண்டிருப்பது படத்தின் தலைப்புக்கேற்ற அதன் ஆரவாரமான வெற்றியைக் குறிப்பிடுகின்றது. கராச்சியில் மட்டும் 20 மில்லியன் வசூல் செய்துள்ள இப்படம் சென்ற மாதம் அங்கு திரையிடப்பட்ட 'வார்' படத்தின் சாதனையையும் முறியடித்துள்ளது என்று கூறப்படுகின்றது.

வார மத்தியில் வந்த கிறிஸ்துமஸ் விடுமுறை நாளிலும் 23.75 கோடி ரூபாய் வசூலைக் குவித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நடிகர் ஹிருத்திக் ரோஷனின் சமீபத்திய வெற்றியை தற்போது ஆமிர்கான் முறியடித்துள்ள நிலையில் இவரது வெற்றியை மற்றொரு நட்சத்திரம் முறியடிக்க முயற்சிப்பதன் மூலம் இந்தித் திரையுலகில் ஆரோக்கியமான போட்டிகளும், வெற்றிகளும் ஏற்படக்கூடும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கலாம்.

26 December 2013 by Unknown · 0

உச்சிப்புளி அருகே ரெயில் முன் பாய்ந்து 2 குழந்தைகளுடன் பெண் தற்கொலை

உச்சிப்புளி அருகே ரெயில் முன் பாய்ந்து 
2 குழந்தைகளுடன் பெண் தற்கொலை
இராமநாதபுரம், டிச. 26:

                   மதுரையில் இருந்து இராமேசுவரத்திற்கு தினமும் பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் இன்று காலை 6.20 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட்டது.

காலை 9 மணி அளவில் இராமநாதபுரம் மாவட்டம் வாலாந்தரவை நிலையத்திற்கு ரெயில் வந்தது. அங்கு பயணிகள் இறங்கியதும், உச்சிப்புளி நோக்கி ரெயில் புறப்பட்டது.

இந்த ரெயில் உச்சிப்புளி கடற்படை விமான நிலையம் அருகே சென்றபோது, 3 மற்றும் 2 வயது குழந்தைகளுடன் வந்த 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், திடீரென ரெயில் முன் பாய்ந்துள்ளார்.

இதில் ரெயிலில் அடிபட்ட 3 பேரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இதுகுறித்து ரெயிலில் பயணம் செய்த கார்டு, உச்சிப்புளி ரெயில்வே அதிகாரிக்கு தகவல் கொடுத்தார்.

அதன் பேரில் ரெயில்வே போலீசார் சம்பவ இடம் விரைந்தனர். 2 குழந்தைகளுடன் தற்கொலை செய்த பெண் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

by Unknown · 0

போதி தர்மருக்கு காஞ்சியில் நினைவிடம்: சீனாவில் இருந்து சிலை வருகிறது

போதி தர்மருக்கு காஞ்சியில் நினைவிடம்: 
சீனாவில் இருந்து சிலை வருகிறதுசென்னை, டிச.26:


              தமிழகத்திலுள்ள காஞ்சிபுரத்தில் பிறந்த போதி தர்மர், சுமார் 1500 வருடங்களுக்கு முன் இந்தியாவை விட்டு தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு சுற்றுப்பணயம் செய்து இறுதியாக சீனா சென்றார்.

அங்கு அவர் சீன பாரம்பரிய வரலாற்றில் புத்தரால் தோற்றுவிக்கப்பட்ட சான் புத்த மதத்தின் முதல் தலைவராகவும், மகாயண புத்த மதத்தின் 28வது தலைவராகவும் செயல்பட்டு வந்துள்ளார். கி.பி 6-ம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணமாக வந்த சீனத் துறவியும், சுற்றுப்பயணியுமான யீ ஜங் எழுதியுள்ள குறிப்புகளில் "தாமு" தென்னிந்திய நகரமான காங்-சியிருந்து சீனாவுக்கு வந்தபோது அவர் போதி தர்மர் என்று அழைக்கப்பட்டதாகவும், அவர் அங்கு மகாயண புத்த மதத்தை பரப்பியதாகவும் கூறியுள்ளார்.

சீனாவின் ஹெனன் மாகாணத்திலுள்ள புகழ்பெற்ற ஷோலின் கோயிலில் "குங்பூ" என்ற தற்காப்பு கலையை அவர் பயிற்றுவித்து வந்ததாகவும் ஜங் மேலும் குறிப்பிட்டுள்ளார். தமிழ் மண்ணிலிருந்து சென்ற இத்துறவி தனது போதனைகளின் மூலம் சீன, ஜப்பான் மற்றும் தென் கிழக்கு ஆசிய நாட்டு மக்களின் வாழ்க்கை மற்றும் கலாச்சாரத்தில் பெரும் மாற்றத்தை கொண்டுவந்தார்.

இந்நிலையில் சீனத்துறவியும், ஷோலின் கோயிலின் நிர்வாக இயக்குனருமான ஷி யான் லின் தலைமையில் ஒரு குழு சில தினங்களுக்கு முன் காஞ்சி நகருக்கு வந்தது. அப்போது சீனா மற்றும் ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவர்கள் அளிக்கும் நிதியுதவியின் மூலம் போதி தர்மருக்கு நினைவிடம் அமைக்க முயன்று வரும் சென்னையை சேர்ந்த பண்டைய கல்வி ஆய்வு நிறுவனத்தின் இயக்குனரான ஜான் சாமுவேலுடன் ஷி யான் லின் ஆலோசனை நடத்தினார்.

2 ஏக்கர் பரப்பளவில் கட்டப்படும் இத்திட்டம் முடிவடைந்தால் உலகத்தரம் வாய்ந்த புத்த மத தத்துவ மையமாக இது உருவெடுக்கும் என ஜான் சாமுவேல் தெரிவித்துள்ளார். இந்த நினைவிடத்தில் சீனாவின் சோங்ஷான் மலையில் 9 வருடங்கள் தியானம் செய்த போதி தர்மருக்கு அந்த மலையிலிருந்து செதுக்கப்பட்ட அவரது திருவுருவ சிலையை நிறுவப்போவதாக லின் தெரிவித்துள்ளார். ஜப்பானிலிந்து இங்கு வந்து இத்திட்டத்தில் இணைந்து பணியாற்றி வரும் டோக்கியோ பல்கலைக்கழக விரிவுரையாளர் ட்சுட்டோம்பு காம்பே தலைமையிலான குழுவினர் ஜப்பானில் வடிவமைக்கப்பட்ட நினைவு தூண் ஒன்றை இங்கு நிறுவ உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஷோலின் கோயிலில் போதி தர்மர் பயிற்றுவித்த சீன தற்காப்புக் கலை, குங்பூ மற்றும் தியான வகுப்புகள் இம்மையத்தில் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

by Unknown · 0

Viewers

Flag Counter
All Rights Reserved Ramnad2Day | 7Tech Template by S.S.KarT