20 December 2013

கூட்டணி பற்றி முடிவு செய்ய ஜெயலலிதாவுக்கு அதிகாரம்; அ.தி.மு.க. பொதுக்குழுவில் தீர்மானம்

40 தொகுதியிலும் வெற்றி பெற இலக்கு:
 கூட்டணி பற்றி முடிவு செய்ய ஜெயலலிதாவுக்கு அதிகாரம்; 
அ.தி.மு.க. பொதுக்குழுவில் தீர்மானம்



சென்னை:

பாராளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெற இருக்கிறது.

இந்த தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் தங்களை தயார் படுத்தி வருகின்றன.

அ.தி.மு.க. செயற்குழு

இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலசில் நேற்று மாலை 3 மணிக்கு நடந்தது.

கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்–அமைச்சருமான ஜெயலலிதா மாலை 3.05 மணிக்கு வந்தார். அவரை, அ.தி.மு.க. அவைத்தலைவர் இ.மதுசூதனன், பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம், தலைமை நிலைய செயலாளர் பழனிப்பன் உள்பட மாநில நிர்வாகிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

அதனைத்தொடர்ந்து, முதலில் செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு அ.தி.மு.க. அவைத்தலைவர் இ.மதுசூதனன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளரும், முதல்–அமைச்சருமான ஜெயலலிதா முன்னிலை வகித்தார். கூட்டத்தில், அமைப்பு செயலாளர்கள் பொன்னையன், விசாலாட்சி நெடுஞ்செழியன், சுலோசனா சம்பத், எம்.ஜி.ஆர். மன்ற தலைவர் பி.எச்.பாண்டியன் உள்பட சுமார் 250 செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

பொதுக்குழு

அதைத்தொடர்ந்து, அருகில் உள்ள அரங்கத்தில் அ.தி.மு.க. பொதுக்குழு தொடங்கியது. இந்த கூட்டத்துக்கும் அவைத்தலைவர் இ.மதுசூதனன் தலைமை தாங்கினார். முதல்–அமைச்சர் ஜெயலலிதா முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில், அமைப்பு செயலாளர்கள் பொன்னையன், விசாலாட்சி நெடுஞ்செழியன், சுலோசனா சம்பத், இலக்கிய அணி செயலாளர் பா.வளர்மதி, தலைமை நிலைய செயலாளர் பழனியப்பன், அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், எம்.ஜி.ஆர். மன்ற தலைவர் பி.எச்.பாண்டியன், மருத்துவ அணி மாநில தலைவர் வேணுகோபால் உள்பட 2,750 பேர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில், மொத்தம் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஜெயலலிதாவுக்கு அதிகாரம்

முக்கியமாக பாராளுமன்ற தேர்தல் கூட்டணி பற்றி முடிவு செய்ய ஜெயலலிதாவுக்கு அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தில் கூறப்பட்டு இருந்ததாவது:–

விரைவில் நடைபெற உள்ள பாராளுமன்ற மக்களவை பொதுதேர்தல் இந்திய நாட்டு வரலாற்றில் மிக இன்றியமையாத தேர்தலாக அமையும். ஊழல், பணவீக்கம், விலைவாசி உயர்வு, கறுப்பு பணம் பதுக்கல் போன்றவற்றால் இந்திய பொருளாதாரம் சீர்குலைந்து, ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்திருக்கிறது. இந்த நிலையில், இந்திய பொருளாதாரத்தை சீர்படுத்தி, மக்களை இன்னல்களில் இருந்து காக்கவேண்டிய பொறுப்பு அடுத்து அமைய இருக்கும் மத்திய அரசுக்கு இருக்கிறது.

குடும்ப அரசியல், கார்ப்பரேட் தெரு முதலாளிகளின் பிடியில் ஆட்சி, வழிநடத்த ஆளின்றி திணறும் நிர்வாகம், அனைத்து முனைகளில் இருந்தும் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல், அண்டைய நாடுகளின் மிரட்டல் ஆகியவை மத்திய அரசை சூழ்ந்திருக்கும் அபாயங்கள் ஆகும். இந்த சூழ்நிலையில், பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. முழு வெற்றிபெற்றால் மட்டுமே தேசத்தின் வளர்ச்சியையும், பாதுகாப்பையும் உறுதி செய்ய முடியும். எனவே, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு உட்பட்ட 40 பாராளுமன்ற தொகுதிகளிலும் அ.தி.மு.க. தனித்து நின்று வெற்றிபெற வேண்டும் என்பதே நமது இலக்கு.

இருப்பினும், கூட்டணி வியூகங்களை அமைக்கவும், தேர்தல் குறித்து அனைத்து முடிவுகளை எடுக்கவும், அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்–அமைச்சருமான ஜெயலலிதாவுக்கு இந்த பொதுக்குழு முழு அதிகாரத்தை வழங்குகிறது.

இவ்வாறு அந்த தீர்மானத்தில் கூறப்பட்டு இருந்தது.

மண்டேலா

மறைந்த தென்ஆப்பிரிக்கா அதிபர் நெல்சன் மண்டேலா, மாலை முரசு அதிபர் ராமச்சந்திர ஆதித்தன், முன்னாள் செஞ்சிலுவை சங்கத்தலைவர் சரோஜினி வரதப்பன் உள்பட மொத்தம் 196 பேரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தும், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட மற்ற தீர்மானங்கள் விவரம் வருமாறு:–

*கழக பொதுச்செயலாளரும், தமிழகத்தின் முதல்–அமைச்சருமான ஜெயலலிதாவுக்கு வரும் பிப்ரவரி மாதம் 24–ந்தேதி பிறந்தநாள் ஆகும். 66–வது பிறந்தநாள் காண இருக்கும் ஜெயலலிதா பல்லாண்டு வாழ்க என்றும், அவரது திருப்பணியால் பாரதமும் வாழ்க என்றும் மகிழ்ச்சியோடு அவருக்கு இந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை இந்த பொதுக்குழு தெரிவித்துக்கொள்கிறது.

முதல்–அமைச்சரின் வேண்டுகோளை ஏற்று, அ.தி.மு.க. வேட்பாளரை மகத்தான வெற்றிபெற செய்த ஏற்காடு தொகுதி மக்களுக்கு இந்த பொதுக்குழு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.

*மத்திய ஆட்சி பொறுப்பில் தொடர்ந்து பல ஆண்டுகள் பங்கேற்றப்போதும், எந்த ஒரு நற்செயலையும் செய்யாமல், உலக தமிழர்களின் உள்ளமெல்லாம் வேதனைக்கொள்ளும் வகையில் துரோகம் இழைத்த கருணாநிதியை வரும் பாராளுமன்ற பொதுத்தேர்தலில் முற்றிலுமாக புறக்கணிக்க வேண்டும் என்று இந்த பொதுக்குழு தமிழக மக்களை வேண்டி கேட்டுக்கொள்கிறது.

மத்திய அரசு கண்டனம்

*இலங்கையில் நடைபெற்ற காமன்வெல்த் உச்சி மாநாட்டினை இந்தியா புறக்கணிக்க வேண்டுமென்று தமிழக மக்களின் உணர்வுகளை பிரதிபலித்த தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் தீர்மானங்களை அலட்சியப்படுத்தி கொழும்பில் நடைபெற்ற காமன்வெல்த் உச்சி மாநாட்டில் இந்திய அரசு சார்பில் வெளிவிவாகரத்துறை மந்திரியை பங்கேற்க செய்த மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசை இந்த பொதுக்குழு வன்மையாக கண்டிக்கிறது.

*இலங்கை கடற்படை அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கும் மத்திய அரசின் மாபாதக செயலுக்கு இந்த பொதுக்குழு தனது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்வதோடு, உடனடியாக இந்த திட்டத்தை ரத்து செய்யவேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.

*இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பல தமிழக மீனவர்களை விடுவிக்கவும், அவர்களின் மீன்பிடி படகுகளை திரும்ப பெற்றுத்தரவும் உறுதியான நடவடிக்கையை எடுக்காமல் மவுனம் சாதித்துக்கொண்டிருக்கும் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு இந்த பொதுக்குழு கண்டனம் தெரிவித்துள்ளது.

*மாநில அரசுகளின் உரிமையை பறிக்கின்ற வகுப்புவாத வன்முறை தடுப்பு சட்டத்தினை கொண்டுவர முயற்சிக்கும் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு கண்டனம் தெரிவிப்பதுடன், தமிழகத்தில் தீவிரவாதத்தை ஒடுக்குவதில் வெற்றிக்கண்ட முதல்–அமைச்சர் ஜெயலலி£தாவுக்கு பாராட்டுதலை தெரிவித்து கொள்கிறோம்.

சிறப்பு நிதி கேட்டு...

*தமிழகத்தின் முதல்–அமைச்சராக மூன்றாவது முறையாக பொறுப்பேற்றவுடன், முந்தைய தி.மு.க. ஆட்சியில் ஏற்பட்ட நிர்வாக சீர்கேடு காரணமாக பெரும் கடன் சுமையில் தத்தளித்த தமிழகத்துக்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு கேட்டு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்ததோடு, இரண்டு முறை பிரதமரை நேரில் சந்தித்து முதல்–அமைச்சர் ஜெயலலிதா கோரிக்கை மனுக்களை அளித்தார். ஆனால், எந்தவொரு கோரிக்கைக்கும் இதுவரை மத்திய அரசிடம் இருந்து சாதகமான நடவடிக்கை இல்லை. தமிழக மக்களின் நலனுக்கான கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காமல், தொடர்ந்து தமிழக மக்களை வஞ்சித்துவரும் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசை இந்த பொதுக்குழு வன்மையாக கண்டிக்கிறது.

இந்தியாவை வழி நடத்திச்செல்ல...

*தேசிய சிந்தனையும், தேசப்பக்தியும், நீண்ட அரசியல் அனுபவமும், பன்மொழி ஆற்றலும், ஆளுமை திறன்கொண்ட முதல்–அமைச்சர் ஜெயலலிதா, இந்திய தேசத்தை வழிநடத்த தகுதி படைத்தவர் ஆவார். உலக பெரும் ஜனநாயக நாடான இந்திய நாட்டை, வல்லரசு நாடாக மாற்றுவதற்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஒருவரால் மட்டுமே முடியும். எனவே, பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க.வை மகத்தான வெற்றிபெற செய்து முதல்–அமைச்சர் ஜெயலலிதாவை இந்திய தேசத்தை வழிநடத்தி செல்லத்தக்க சூழ்நிலையை உருவாக்க பொதுக்குழு சபதம் ஏற்கிறது.

மேற்கண்டவை உள்பட 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

0 Responses to “ கூட்டணி பற்றி முடிவு செய்ய ஜெயலலிதாவுக்கு அதிகாரம்; அ.தி.மு.க. பொதுக்குழுவில் தீர்மானம்”

Post a Comment

Viewers

Flag Counter
All Rights Reserved Ramnad2Day | 7Tech Template by S.S.KarT