24 December 2013

பாம்பன் பாலத்தில் நின்றது ரெயில்: அபாய சங்கிலியை இழுத்ததாக 9 பேரிடம் போலீசார் விசாரணை

பாம்பன் பாலத்தில் நின்றது ரெயில்
 அபாய சங்கிலியை இழுத்ததாக 9 பேரிடம் போலீசார் விசாரணை


இராமநாதபுரம், டிச. 24:

                 இராமேசுவரம்–கன்னியாகுமரி இடையே பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வசதிக்காக வாரத்தில் 3 நாட்கள் ரெயில் இயக்கப் பட்டு வருகிறது. ‘சூப்பர் பாஸ்ட்’ எக்ஸ்பிரஸ்’ ஆக இயக்கப்படும் இந்த ரெயில் திங்கள், வியாழன், சனிக்கிழமைகளில் இராமேசுவரத்தில் இருந்து செல்கிறது.

நேற்று இரவும் 8.45 மணிக்கு கன்னியாகுமரி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் இராமேசுவரத்தில் இருந்து புறப்பட்டது. ரெயிலில் வடமாநில சுற்றுலா பயணிகள் உள்பட பலர் இருந்தனர்.

இந்த ரெயில் பாம்பன் பாலத்தில் நுழைந்ததும், குழந்தைகள் முதல் பெரியவர் வரை பலரும் ஜன்னல் ஓரம் சென்று கடலின் அழகை ரசிக்க தொடங்கினர். ரெயிலின் என்ஜின் நடுக்கடலை அடைந்தபோது திடீரென ரெயில் நின்றுவிட்டது. இதனால் ரெயிலில் இருந்தவர்கள் பரபரப்பு அடைந்தனர்.

என்ன காரணம் என்பதை அறிய கீழே இறங்க முடியாத நிலையில் கடலின் மேற்பரப்பில் ரெயில் நின்றதால் பலரும் பதற்றத்திற்கு ஆளானார்கள்.



இதற்கிடையில் அபாய சங்கிலியை இழுத்து ரெயிலை நிறுத்தியுள்ளது தெரியவர எந்தப்பெட்டியில் இருந்து அது இழுக்கப்பட்டது என ரெயில்வே கார்டு மற்றும் போலீஸ்காரர்கள் மாரிமுத்து, ஆரோக்கியசாமி ஆகியோர் ஆய்வு நடத்தினர்.

இதற்கிடையில் பாம்பன் பாலம் அருகே உள்ள ரெயில்வே கேட் கீப்பர் முகமது ரகுமானும் கடைசி பெட்டியின் வழியாக ரெயிலின் மீது ஏறி வந்தார். அப்போது என்ஜினுக்கு அடுத்த இரண்டாவதாக உள்ள முன்பதிவு இல்லாத பெட்டியில் இருந்து அபாய சங்கிலி இழுக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. அந்த பெட்டியில் ‘லாக்’ ஆகி இருந்த லிவரை அவர் சரி செய்ததும் ரெயில் சுமார் 40 நிமிட தாமதத்திற்கு பிறகு புறப்பட்டு சென்றது.

மானாமதுரை ரெயில் நிலையத்தை அடைந்ததும் ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் பாலு, சப்–இன்ஸ்பெக்டர் சுடலைமுத்து மற்றும் போலீசார் குறிப்பிட்ட பெட்டிக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது அங்கிருந்த உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத் பகுதியை சேர்ந்த சந்தோஷ்குமார் தலைமையில் வந்த 4 ஆண்கள், 4 பெண்கள் மற்றும் 5 குழந்தை ஆகியோர் மீது சந்தேகம் ஏற்பட்டது.

இதன் அடிப்படையில் 9 பேரும் ரெயிலை விட்டு இறக்கப்பட்டனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த இரு நாட்களுக்கு முன்பு இராமேசுவரமத்தில் இருந்து சென்னை சென்ற சேது எக்ஸ்பிரஸ் ரெயிலிலும் இதேபோல் மாணவர் ஒருவர் அபாய சங்கிலியை இழுத்ததால் பாம்பன் பாலத்தில் ரெயில் நின்றது. அப்போது போலீஸ்காரர் ஒருவர் மிகவும் ரிஸ்க் எடுத்து, கடலில் இறங்கி குறிப்பிட்ட பெட்டியில் ஏறி ‘லாக்’கை எடுத்துவிட்டார். இந்த சம்பவத்தில் அபாய சங்கிலியை இழுத்த மாணவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்றும் இதுபோன்ற சம்பவம் நடந்ததிருப்பது பலரையும் சங்கடத்திற்குள்ளாக்கியுள்ளது. இதனை தவிர்க்க ரெயிலில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்த வேண்டும், இல்லாவிட்டால் பயணிகளிடம் உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

0 Responses to “பாம்பன் பாலத்தில் நின்றது ரெயில்: அபாய சங்கிலியை இழுத்ததாக 9 பேரிடம் போலீசார் விசாரணை”

Post a Comment

Viewers

Flag Counter
All Rights Reserved Ramnad2Day | 7Tech Template by S.S.KarT