24 December 2013

மதுரையில் அரவிந்த் கெஜ்ரிவால் பெயரில் போலி பிறப்பு சான்று வெளியானது எப்படி?: அதிகாரிகள் விசாரணை

மதுரையில் அரவிந்த் கெஜ்ரிவால் பெயரில் 
போலி பிறப்பு சான்று வெளியானது எப்படி?
அதிகாரிகள் விசாரணை




மதுரை, டிச. 24:


மதுரை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் முகாம் நேற்று நடந்தது. அதில் வக்கீல்கள் சிலர், கலெக்டரை சந்தித்து மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் மாநகராட்சி நிர்வாகத்தில் முறைகேடுகள் நடப்பதாகவும், அதை தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தனர்.

மேலும் டெல்லி முதல் மந்திரியாக பொறுப்பேற்க இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால் மதுரையில் பிறந்ததாக மாநகராட்சி போலி பிறப்பு சான்றிதழ் வழங்கி உள்ளதாகவும் குற்றம் சாட்டினர். அந்த போலி பிறப்பு சான்றிதழையும் கலெக்டரிடம் வழங்கினர்.

இது குறித்து வக்கீல்கள் கூறும் போது, கோர்ட்டில் உள்ள எங்களது அறையில் இந்த போலி பிறப்பு சான்றிதழை யாரோ போட்டு விட்டுச் சென்று விட்டனர். எனவே இதனை நாங்கள் கலெக்டரிடம் வழங்கினோம் என்று கூறினர்.


அந்த போலி பிறப்பு சான்றிதழில் உள்ள தகவல்கள் விவரம் வருமாறு:–

அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 27.12.1970–ல் பிறந்ததாகவும், அவருடைய தந்தை பெயர் ராம்ஜி ராவ் கெய்க்வாட், தாயார் கீதா தேவி என்றும், அவர் பிறப்பின் போது பெற்றோர் இருந்த வீட்டு முகவரி நம்பர் 27, கற்பக நகர், கோ.புதூர் - 625007 என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது. நிரந்தர முகவரி என்று ராம்வர்மா நகர், புதுடெல்லி என்று உள்ளது.

இந்த சான்றிதழ் 07.03.2012 அன்று பதிவு செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் இந்த போலி பிறப்பு சான்றிதழில் எந்த அதிகாரியின் கையெழுத்தும் இல்லை. அதே போல் பிறப்பு சான்றிதழுக்கு மாநகராட்சி பயன்படுத்தும் முத்திரை அல்லாமல், போலியான வேறொரு முத்திரை உள்ளது.

இதற்கிடையில் இந்த விவகாரம் குறித்து அறிந்த மாநகராட்சி கமிஷனர் கிரண்குராலா உடனடி விசாரணைக்கு உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் விசாரணை நடந்தது. விசாரணையின் போது, அந்த சான்றிதழ் மாநகராட்சியில் பதிவு செய்யப்பட்டுள்ளதா என ஆய்வு நடந்தது. ஆனால் இந்த பெயரில் மாநகராட்சியில் எந்த பதிவும் இல்லை என தெரியவந்தது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறும் போது, ‘‘அரவிந்த் கெஜ்ரிவால் மதுரையில் பிறந்ததாக மாநகராட்சியில் எந்த பதிவும் இல்லை. ஆனால் மாநகராட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தவே சிலர் இந்த போலி சான்றிதழை தயாரித்து உள்ளனர்’’ என்றார்.

0 Responses to “மதுரையில் அரவிந்த் கெஜ்ரிவால் பெயரில் போலி பிறப்பு சான்று வெளியானது எப்படி?: அதிகாரிகள் விசாரணை”

Post a Comment

Viewers

Flag Counter
All Rights Reserved Ramnad2Day | 7Tech Template by S.S.KarT