14 May 2013

ஆட்டோ சங்கர் - வரலாறு 8 (கடைசி சில நிமிடங்கள்)

ஆட்டோ சங்கர்  கடைசி சில நிமிடங்கள்



ஆட்டோ சங்கர் தூக்கில் போடப்படுவதற்கு இரு தினங்களுக்கு முன்பு, அவனுடைய மனைவி ஜெகதீசுவரி, குழந்தைகளுடன் சென்று சந்தித்தாள். "ஆட்டோ" சங்கர் துயரமிகுதியால் கண்ணீர் வடித்தான். குடும்பத்தினர் கதறி அழுதனர்.

பிறகு இரவு 7 மணி வரை தனது கடைசி ஆசை, உயில் ஆகியவை பற்றி குடும்பத்தினருடன் பேசினான்.

இலவச சட்ட ஆலோசனை உதவிக்குழுவை சந்திக்க ஆட்டோ சங்கர் விரும்பினான். இதன்படி இந்த குழுவினர் ஜெயிலுக்கு சென்று பார்த்தனர். அப்போது "நான் இறந்த பிறகு எனது கண்களை தானம் செய்ய விரும்புகிறேன்" என்று கூறினான். அதில் சில சட்ட பிரச்சினை இருந்ததால் அவனது கோரிக்கை ஏற்கப்படவில்லை.

சேலம் ஜெயிலில் ஆட்டோ சங்கர் தனி அறையில் அடைக்கப்பட்டிருந்தான். கோர்ட்டு மூலம் தடை உத்தரவு வந்து விடும் என்று 26_ந்தேதி மாலை 6 மணி வரை எதிர்பார்த்து இருந்தான். ஆனால் தகவல் எதுவும் வராததால், மறு நாள் தூக்கில் போடப்படுவது உறுதி என்பதை தெரிந்து கொண்டான். யாருடனும் பேசவில்லை. இரவில் தூங்கவும் இல்லை.

அதிகாலை 4_30 மணி அளவில் ஜெயில் அதிகாரியும், போலீஸ் அதிகாரியும் அவன் இருந்த அறை பக்கம் சென் றனர். "நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்?" என்று கேட்டனர். அதற்கு, "மகளுக்கு கடிதம் எழுதிக்கொண்டி ருக்கிறேன்" என்று ஆட்டோ சங்கர் பதில் அளித்தான்.

பின்னர் சிறிது நேரத்தில் அவனுக்கு குடிக்க "காபி" வழங்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து ஆட்டோ சங்கரை தூக்கு மேடைக்கு அழைத்துச்சென்றனர். அப்போது அவன், கைதிகள் அணியும் உடையை அணிந்திருந்தான்.

முகம் சவரம் செய்யப்படாமல் இருந்தது. அவன் நடந்து சென்றபோது, அவனது நடையில் தளர்வோ, தள்ளாட்டமோ இல்லை. வழக்கம் போல மிடுக்காக நடந்து சென்றான்.

தூக்கு மேடையில் போய் நின்றதும், முகம் நீல நிற துணியால் மூடப்பட்டது. கை, கால்கள் கட்டப்பட்டன. கழுத்தில் தூக்கு கயிறு மாட்டப்பட்டது.

தூக்கு மேடையைச் சுற்றிலும் ஜெயில் அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள், தாசில்தார், டாக்டர்கள் ஆகியோர் நின்று கொண்டிருந்தனர். சரியாக அதி காலை 5.14 மணிக்கு தூக்கு மேடை அருகேயிருந்த ஒரு கருவி இயக்கப்பட்டது. ஆட்டோ சங்கர் நின்று கொண்டிருந்த பலகை விலகியது. ஆட்டோ சங்கர் தூக்கில் தொங்கினான்.

உயிர் பிரிந்த அந்த நேரத்திலும் கூட அவன் உடலில் துள்ளலோ, உதறலோ, அசைவுகளோ இல்லை. மரண ஓலமும் இல்லை. முக்கல், முனகலும் இல்லை. சில நிமிடங்கள் கழித்து அவன் இறந்து விட்டதை டாக்டர்கள் உறுதி செய்தனர்.

பிறகு அவன் அணிந்திருந்த ஜெயில் உடைகள் அகற்றப்பட்டு, உடலில் வெள்ளைத்துணி போர்த்தி கீழே கிடத்தப்பட்டது. 7 மணி அளவில், உடல் அவனது மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஆட்டோ சங்கரின் தாய் ஜெயலட்சுமி, மனைவி ஜெகதீசுவரி மற்றும் மகள் ஆகியோர் ஜெயிலுக்கு வந்திருந்தனர். ஆட்டோ சங்கரின் உடல் ஆம்புலன்ஸ் வேன் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. கோட்டூர்புரத்தில் இருக்கும் ஆட்டோ சங்கரின் தந்தை வீட்டில் உடல் வைக்கப்பட்டது. அவன் நெற்றியில் சிவப்பு, வெள்ளை நிறத்தில் நாமம் இடப்பட்டிருந்தது. மனைவி ஜெகதீசுவரியும் முழுக்க மஞ்சள் பூசிக்கொண்டு அழுது ஓய்ந்தவளாய் சோகத்தோடு அமர்ந்திருந்தாள்.

மறுநாள் கோட்டூர்புரம் மயானத்தில் ஆட்டோ சங்கரின் உடல் தகனம் செய்யப்பட்டது. சேலம் மத்திய சிறையில் 1977_ம் ஆண்டு வாக்கில் ஒரு கொலை வழக்கில் தந்தை _ மகன் ஆகிய 2 பேர் தூக்கில் போடப்பட்டனர். அதன்பிறகு 18 ஆண்டுகள் கழித்து ஆட்டோ சங்கர் தூக்கில் போடப்பட்டான்.

28_ந்தேதி அதிகாலை மதுரை ஜெயிலில் எல்டினுக்கு தூக்கு நிறைவேற்றப்பட வேண்டும். அன்று காலை 4 மணிக்கு அவனுடைய அறைக்கு ஜெயில் அதிகாரிகள் சென்றபோது, அவன் தூங்காமல் கண் விழித்தபடியே இருந்தான். அதிகாரிகளைப் பார்த்ததும் அவன் கண்களில் இருந்து கண்ணீர் கொட்டியது. பிறகு அவனை குளிக்கச் செய்து, கைதிகள் உடை அணிவித்து தூக்கு மேடைக்கு அழைத்து சென்றனர்.

தூக்கு போடுவதற்கு முன்பு, "உனக்கு கடைசி ஆசை ஏதாவது உண்டா?" என்று கேட்டனர். அதற்கு அவன் "என்னுடைய மனைவிக்கு அரசு உதவி செய்யவேண்டும். ஒரே மகனின் படிப்புக்கும் உதவி செய்யவேண்டும் " என்று கேட்டுக்கொண்டான்.

பிறகு 5_22 மணிக்கு தூக்கில் போடப்பட்டான். 2 நிமிடத்தில் உடல் துடிப்பு அடங்கியது. அவனுடைய உயிர் பிரிந்தது.

எல்டின் உடல் அவனுடைய மனைவி சாந்தியிடம் ஒப்படைக்கப்பட்டது. எல்டின் உடல் சென்னை கொண்டு வரப்பட்டு இறுதிச்சடங்கு நடந்தது.

ஆட்டோ சங்கரின் குடும்பம் தற்போது புயலில் சிக்கிய படகு போல தள்ளாடிக்கொண்டிருக்கிறது. வாழ்க்கையை நகர்த்த பெரும் கஷ்டப்பட்டு வருவதாக ஆட்டோ சங்கரின் மனைவி ஜெகதீசுவரி சமீபத்தில் ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறி இருக்கிறார்.

0 Responses to “ஆட்டோ சங்கர் - வரலாறு 8 (கடைசி சில நிமிடங்கள்)”

Post a Comment

Viewers

Flag Counter
All Rights Reserved Ramnad2Day | 7Tech Template by S.S.KarT