13 July 2013

தூத்துக்குடிக்கு சுற்றுலா வந்தபோது சோகம் கடலில் மூழ்கி 4 மாணவர் பலி

தூத்துக்குடிக்கு சுற்றுலா வந்தபோது சோகம் 
கடலில் மூழ்கி 4 மாணவர் பலி


தூத்துக்குடி :  
                       மதுரையிலிருந்து தூத்துக்குடிக்கு சுற்றுலா வந்த பிளஸ் 2 மாணவர்கள் 4 பேர் கடலில் மூழ்கி பலியாகினர். இதில் 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.

மதுரை, திருநகரில் உள்ள சிஎஸ்ஆர் மெட்ரிகுலேசன் பள்ளியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் தூத்துக்குடி, திருச்செந்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு கல்வி சுற்றுலா வந்தனர். இதில் 10, 12ஆம் வகுப்பு படிக்கும் 42 மாணவர்கள், 71 மாணவிகள் என மொத்தம் 113 பேர் 2 பஸ்களில் வந்தனர். இவர்களை ஆசிரியர் கார்த்திகேயன் தலைமையில் 4 ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் ஒரு பணியாளர் அழைத்து வந்தனர்.

நேற்று காலை மாணவ, மாணவிகள் தூத்துக்குடி துறைமுகத்தை பார்வையிட்டனர். பின்னர் அங்கிருந்து தெர்மல் நகர் கடற்கரைக்கு வந்தனர். அங்கு மாணவ, மாணவிகள் கடற்கரையில் விளையாடி கொண்டிருந்தனர். இதில் பிளஸ் 2 மாணவர்கள் 15 பேர் கடற்கரையோரம் குளித்து கொண்டிருந்தனர். அப்போது ராட்சத அலை அவர்களை வாரி சுருட்டி உள்ளே இழுத்தது.

அவர்கள் சுதாரித்து கரையேறுவதற்குள் சிலரை அலை இழுத்து சென்றது. இதில் போராடி கரை வந்த மாணவர்கள் சத்தம் போட்டனர். அவர்களது சத்தத்தை கேட்டு, ஆசிரியர்கள் மற்றும் சக மாணவ, மாணவிகள் அங்கு வந்தனர். மாணவர்கள் சிலர் கடலில் சிக்கியதை அறிந்து அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

தகவல் அறிந்து தெர்மல் நகர் மற்றும் துறைமுக தீயணைப்பு துறை வீரர்கள் வந்து கடல் அலை இழுத்து சென்ற மாணவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

சுமார் அரை மணி நேர போராட்டத்திற்கு பின்னர் பிளஸ் 2 படிக்கும் மதுரை ஹார்விபட்டியை சேர்ந்த சங்கரநாராயணன் மகன் பாலமுருகன், அழகப்பாநகரை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் மகன் பாலாஜி ஆகியோரை உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்டனர். உடனடியாக அவர்களை ஆம்புலன்சில் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து நடந்த தேடுதலில் நீரில் மூழ்கிய எஸ்ஆர்பி நகர் பாரிஜாதம் தெருவை சேர்ந்த முருகன் மகன் சதீஷ்குமார் (17), தனக்கன்குளத்தை சேர்ந்த பாண்டியன் மகன் தேவானந்த் (17), திருநகர் ஜோசப் நகரைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகன் விஷ்ணுதரன் (17) ஆகிய 3 மாணவர்கள் சடலமாக மீட்கப்பட்டனர். இவர்களும் பிளஸ் 2 ஒரே பிரிவில் படித்து வந்தனர். பரமேஸ்வரன் என்ற மாணவரின் உடல் நேற்று மாலை மீட்கப்பட்டது. விசாரணைக்கு பின்னர் மற்ற மாணவ, மாணவிகள் மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இது தொடர்பாக பள்ளிக்குக்கும் பள்ளி மூலம் பெற்றோருக்கும் தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள் நேற்று தூத்துக்குடி வந்தனர்.  இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆபத்து நிறைந்த பகுதி: தூத்துக்குடி புதிய துறைமுக கடற்கரை என்றழைக்கப்படும் இந்த தெர்மல் நகர் கடற்கரை எந்தளவுக்கு பொழுது போக்காக கருதப்படுகிறதோ அந்தளவுக்கு ஆபத்து நிறைந்தவை. இந்த பகுதி ஆபத்து நிறைந்த பகுதி எனவும், அங்கு கடலில் விளையாட வேண்டாம் என எச்சரிக்கை அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. இதே இடத்தில் கடந்த 14.5.2008ல் விளையாடி கொண்டிருந்த தெர்மல் நகர் தீயணைப்பு துறை ஏட்டு சுப்பிரமணியனின் மகன்கள் பார்த்திபன், வசந்தராஜ் மற்றும் தூத்துக்குடி ஹவுசிங் போர்டை சேர்ந்த கிருஷ்ணசாமி மகன் விக்னேஷ் ஆகிய 3 பேரும் ராட்சத அலையில் சிக்கி ஒரே நேரத்தில் பலியாகினர்.

அதேபால் 30,5,2008ல் தெர்மல் நகர் கடலில் நீந்தி விளையாடிய மானாமதுரையை சேர்ந்த மோகன் மகன் சாம்ஜான்சன் மற்றும் சென்னை பொன்னியம்மன் நகரை சேர்ந்த சாலமோன் ராஜா மகன் சைமன் ராஜதுரை இருவரும் பலியாகினர். தொடர்ந்து அந்த பகுதியில் மீனவர்கள், பொதுமக்கள் என இதுவரை சுமார் 11 பேருக்கு மேல் பலியாகி உள்ளனர்.

உறவினர்கள் கதறல்: 4 மாணவர்களின் பெற்றோர், உறவினர் பள்ளி முன் குவிந்தனர். பள்ளி வளாகத்தில் குவிந்த அவர்கள் கதறி அழுதது பார்ப்பவர்களின் நெஞ்சை உலுக்குவதாக இருந்தது. பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பெரும்பாலும் திருநகர் மற்றும் சுற்றுப் பகுதியை சேர்ந்தவர்கள். இதனால் மாணவர்களின் இறப்பு சம்பவத்தால் இப்பகுதி முழுவதும் சோகத்தில் மூழ்கியது.

அரசு தடையை மீறி கல்விச்சுற்றுலா

கல்வி சுற்றுலா செல்ல, அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் மாவட்ட கல்வி அலுவலரிடமும், மெட்ரிக் பள்ளிகள் மெட்ரிக் பள்ளி ஆய்வாளரிடமும் முன் அனுமதி பெற வேண்டும். 

 சில நேரம் விபத்து அல்லதுஅசம்பாவிதத்தால் உயிர் இழப்பு ஏற்படுகிறது. இதனால் மதுரை மாவட்டத்தில் கல்வி சுற்றுலாவிற்கு அனுமதி இல்லை என முதன்மைக் கல்வி அலுவலகம் கடந்த ஆண்டு உத்தரவு போடப்பட்டது. இதை மீறி இப்பள்ளி நிர்வாகம் சுற்றுலா செல்ல அனுமதி வழங்கியுள்ளது. 

இதுதொடர்பாக பள்ளி நிர்வாகிகளிடம் முதன்மைக் கல்வி அலுவலர் அமுதவல்லி, மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் விஜயராணி ஆகியோர் விசாரணை நடத்தினர். தடையை மீறி மாணவர்களை சுற்றுலா அழைத்துச் சென்றது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் விளக்க கடிதம் எழுதி பெறப்பட்டது. 

விசாரணை அறிக்கையை பள்ளி கல்வித்துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தனர்





0 Responses to “தூத்துக்குடிக்கு சுற்றுலா வந்தபோது சோகம் கடலில் மூழ்கி 4 மாணவர் பலி”

Post a Comment

Viewers

Flag Counter
All Rights Reserved Ramnad2Day | 7Tech Template by S.S.KarT