18 July 2013

போலீஸ் உடல் தகுதித்தேர்வில் முறைகேடுகளை தடுக்க இனி புதிய டிஜிட்டல் இயந்திரங்கள்

போலீஸ் உடல் தகுதித்தேர்வில்  முறைகேடுகளை  தடுக்க  இனி புதிய டிஜிட்டல் இயந்திரங்கள்


சென்னை : காவலர் தேர்வின்போது நெஞ்சை நிமிர்த்தி அளவு கொடுக்க வேண்டியதும் இல்லை. அதிகாரிகளை கவனிக்கவும் வேண்டியதில்லை. உயரம், மார்பளவு போன்றவற்றை அளக்க புதிதாக டிஜிட்டல் கருவி அறிமுகப்படுத்தப்படுகிறது. இதனுடன் இணைந்த பெரிய திரையில் உடல் அளவுகள் துல்லியமாக தெரியும் என்பதால் முறைகேடுகளுக்கு வாய்ப்பில்லை.

தமிழ்நாடு காவல்துறையில் இரண்டாம் நிலை காவலர்கள் தேர்வு செய்யப்படும்போது சீருடைப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் அறிவிப்புகள் வெளியிடப்படும். அதில், காவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 10 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 170 செமீ உயரம் இருக்க வேண்டும். மார்பளவு 81 செமீ இருத்தல் வேண்டும். மேலும் 5 செமீக்கு விரிவடைதல் வேண்டும் என்று பல நிபந்தனைகள் விதிக்கப்படும். அதன்படி உடல்தகுதி உள்ளவர்கள் விண்ணப்பம் செய்து தேர்வு அன்று குறிப்பிட்ட மைதானத்தில் குவிகின்றனர். அவர்களுக்கு உடல் தகுதி தேர்வு நடத்தப்படும். அதில் உயரம் மற்றும் மார்பளவு சரியாக உள்ளதா என்பதை மூத்த அதிகாரிகள் முன்னிலையில் அளப்பது வழக்கம்.

தேர்வில் கலந்து கொள்ளும் விண்ணப்பதாரர்களில் பலர், மார்பளவை அளக்கும்போது நெஞ்சை நிமிர்த்தி, மூச்சை தம் கட்டி மார்பளவுக்கு நிற்பார்கள். சிலர் உயரம் இல்லை என்ற பட்சத்தில் உயரம் அளக்கும் பலகையில் சற்று எக்கி நின்று 170 செமீயை தொடுவார்கள். இன்னும் சிலரோ, உயரம் அல்லது மார்பளவில் குறைவு ஏற்படும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரியையும் கவனித்து அளவுகள் சரியாக உள்ளன என்று காட்டிவிடுவார்கள். இவ்வாறு உடல் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் அடுத்தடுத்த தேர்வுகளுக்கு செல்வார்கள்.

இந்நிலையில் உடல் தகுதித்தேர்வில் எவ்வித முறைகேடுகளும் நடக்காமல் தவிர்க்க, புதிய டிஜிட்டல் இயந்திரங்களை வரும் தேர்வுகளில் பயன்படுத்த காவல்துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக உயரம், மார்பளவு அளக்கும் புதிய டிஜிட்டல் கருவிகளை காவல்துறை வாங்குகிறது. இந்த கருவிகளோடு டிஜிட்டல் டிஸ்பிளே மானிட்டரும் இணைக்கப்பட்டிருக்கும்.

புதிய டிஜிட்டல் கருவியில் விண்ணப்பதாரரின் உயரம்,எடை, மார்பளவு போன்ற தகவல்கள் துல்லியமாக பதிவு செய்யப்படுவதோடு, அதனுடன் இணைக்கப்பட்டுள்ள திரையில் சம்பந்தப்பட்ட விவரங்கள் பெரிய எழுத்திலும் தெரியும். இதனால் மோசடிகள் தவிர்க்கப்படும். இந்த கருவி ஒன்றின் விலை ரூ.1.46 லட்சம். மொத்தம் 33 கருவிகள் முதல்கட்டமாக வாங்கப்படுகிறது. வரும் காலங்களில் நடத்தப்படும் காவலர் தேர்வுகளில் இந்த டிஜிட்டல் கருவிகள் முழுக்க முழுக்க பயன்படுத்தப்படும்.

0 Responses to “போலீஸ் உடல் தகுதித்தேர்வில் முறைகேடுகளை தடுக்க இனி புதிய டிஜிட்டல் இயந்திரங்கள்”

Post a Comment

Viewers

Flag Counter
All Rights Reserved Ramnad2Day | 7Tech Template by S.S.KarT