6 August 2013

இந்தியாவில் முழுவதும் சுற்றுச்சூழல் அனுமதி இல்லாமல் ஆறுகளில் மணல் அள்ள தடை; தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு

இந்தியாவில் முழுவதும் 
சுற்றுச்சூழல் அனுமதி இல்லாமல் ஆறுகளில் மணல் அள்ள தடை
 தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு

 
புதுடெல்லி:

உத்தரபிரதேசத்தில் மணல் கொள்ளை மாபியா கும்பல் மீது கடுமையான நடவடிக்கை எடுத்த பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி துர்கா, சமீபத்தில் பணி இடை நீக்கம் செய்யப்பட்டார்.

அரசு ஆதரவுடன்...
இந்த நடவடிக்கை, நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தின் பின்னணியில், மணல் கொள்ளையை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது.

உத்தரபிரதேசத்தில், மாநில அரசின் ஆதரவுடன் மணல் கொள்ளை நடைபெற்று வருவதாகவும், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கள அதிகாரிகள், குறிப்பாக இடை நீக்கம் செய்யப்பட்ட துணை கலெக்டர் துர்கா போன்றவர்கள் பழிவாங்கப்படுவதாகவும் அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டு இருந்தது.

மணல் அள்ள தடை

தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவர் நீதிபதி ஸ்வதந்தர்குமார் தலைமையிலான பெஞ்ச், இந்த மனு மீது விசாரணை நடத்தி அதிரடி உத்தரவை பிறப்பித்தது. ‘‘சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் இந்தியாவின் எந்த இடத்திலும் ஆற்றுப்படுகைகளில் மணல் அள்ளுவதற்கு தடை விதிக்கப்படுவதாக’’ அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.

ஆறுகளில் முறைகேடாக மணல் அள்ளுவது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினை என்றும், மணல் கொள்ளை மூலம் அரசுக்கு பல லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு வருவதாகவும் நீதிபதிகள் அந்த உத்தரவில் குறிப்பிட்டு உள்ளனர்.

இந்தியா முழுவதும்

தொடக்கத்தில் யமுனா, கங்கை, ஹிண்டன், சாம்ப்ளி, கோமதி போன்ற நதிகளில் மட்டுமே அனுமதி இன்றி மணல் அள்ளுவதற்கு நீதிபதிகள் தடை விதித்து இருந்தனர்.

பின்னர் இந்த பிரச்சினையின் தேசிய முக்கியத்துவம் கருதியும், நாடு முழுவதும் இதனால் ஏற்படும் பாதிப்பை கருத்தில் கொண்டும் இந்தியா முழுவதும் இந்த தடை பொருந்தும் என்று, மாற்று உத்தரவை பிறப்பித்தனர்.

உத்தரவு விவரம்

அந்த உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:–


‘‘எந்த ஒரு தனி நபரோ, நிறுவனங்களோ அல்லது அதிகார அமைப்புகளோ, சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் நாட்டின் எந்த இடத்தில் உள்ள ஆற்றுப்படுகைகளில் இருந்தும் மணல் அள்ளுவதற்கு நாங்கள் தடை விதிக்கிறோம்.

மத்திய சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைச்சகம் அல்லது மாநில சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆணையத்திடம் இருந்து மணல் அள்ளுவதற்கான முன் அனுமதியை பெற்று இருக்க வேண்டும்.


போலீஸ் அதிகாரிகள்

அனைத்து மாநிலங்களிலும் உள்ள சுரங்கத்துறை அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் இந்த உத்தரவை அமல்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும்.’’

இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது. இந்த உத்தரவை அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கும் அனுப்பி வைக்கவும் உத்தரவிடப்பட்டது.

தேசிய பசுமை தீர்ப்பாய வக்கீல்கள் சங்கம் சார்பில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. சங்கத்தின் சார்பில் மூத்த வக்கீல் ராஜ்பஞ்ச்வானி தீர்ப்பாயத்தில் ஆஜராகி வாதாடினார்.

அப்போது அவர், ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான டன் மணல் சட்டவிரோதமாக அள்ளப்பட்டு கடத்தப்படுவதால் அரசுக்கு லட்சக்கணக்கான கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு வருவதாக தெரிவித்தார்.

 



0 Responses to “ இந்தியாவில் முழுவதும் சுற்றுச்சூழல் அனுமதி இல்லாமல் ஆறுகளில் மணல் அள்ள தடை; தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு”

Post a Comment

Viewers

Flag Counter
All Rights Reserved Ramnad2Day | 7Tech Template by S.S.KarT