5 August 2013

பிரபல இசையமைப்பாளரும், டிவி தொகுப்பாளருமான ஜேம்ஸ் வசந்தன் கைது

ஆபாசமாக திட்டியதாக பெண் புகார் 
இசை அமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கைது


சென்னை :  

              பிரபல இசையமைப்பாளரும், டிவி தொகுப்பாளருமான ஜேம்ஸ் வசந்தன் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நீலாங்கரையில் பிரபல இசை அமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் (50) குடும்பத்துடன் வசித்து வருகிறார். 

இவர் சுப்பிரமணியபுரம் உள்ளிட்ட பல படங்களுக்கு இசை அமைத்துள்ளார். தெலுங்கு, மலையாள படங்களுக்கும் இசை அமைத்துள்ளார். டிவிக்களில் நிகழ்ச்சி தொகுப்பாளராக உள்ளார். இவருக்கும் அவரது வீட்டு அருகில் வசித்து வரும் ராதா பிரசாத் (60) என்ற பெண் ணுக்கும் நிலம் தொடர்பான பிரச்னை இருந்துள்ளது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் நடந்து வருகிறது.

இதுதொடர்பாக இருவருக்கும் பல முறை வாய்த்தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், ராதா பிரசாத் நீலாங்கரை போலீசில் புகார் அளித்தார். அதில் “ஜேம்ஸ் வசந்தன் என்னை ஆபாசமாக திட்டினார். அவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்’’ என்று கூறி இருந்தார். இதுகுறித்து போலீசார் மிரட்டல் மற்றும் பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். நேற்று மாலை வீட்டில் இருந்த ஜேம்ஸ் வசந்தனை கைது செய்தனர். பின்னர், ஆலந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்த இருந்தனர்.

இதையறிந்த பத்திரிகை நிருபர்கள் ஏராளமானோர் அங்கு வந்திருந்தனர். ஜேம்ஸ் வசந்தனை போலீசார் கோர்ட்டுக்கு அழைத்து வந்தபோது, அங்கிருந்த நிருபர்கள், உங்களை எதற்காக கைது செய்தனர் என கேட்டனர். அதற்கு அவர் பதிலளிக்கும்போது, போலீசார் எதிர்ப்பு தெரிவித்தனர். அதற்கு ஜேம்ஸ் வசந்தன், ‘‘பத்திரிகையாளர்களிடம் பேசுவதற்கு எனக்கு உரிமை உள்ளது. இதை நீங்கள் தடுக்கக்கூடாது. அப்படி தடுத்தால், என்னை பேச விடாமல் தடுக்கும் உங்களை பற்றி அனைவரிடமும் கூறுவேன்’’ என்றார். இதனால், சிறிது சலசலப்பு ஏற்பட்டது.



பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: 

                  நான் பாலவாக்கம் பீச் ரோட்டில் 2 வீடுகளை கட்டினேன். அந்த வீட்டை கட்டும்போது அதன் பின்புறம் உள்ள ராதா பிரசாத் என்ற பெண் என்னிடம் தகராறு செய்து, பல்வேறு தொல்லைகள் கொடுத்தார். நான் சிஎம்டிஏ அனுமதி பெற்று முறையாக வீடு கட்டியுள்ளேன். ஆனால், அவர்கள் முறையில்லாமல் கட்டியுள்ளனர். எனது மீது உள்ள காழ்ப்புணர்ச்சியில் பல்வேறு புகார்களை என்மீது அவர் கொடுத்துவருகிறார். இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது.

கடந்த 2ம் தேதி என் மகனை பள்ளியில் விட்டுவிட்டு காரில் வரும்போது, ராதா பிரசாத் அவரது காரை என் கார் மீது மோதுவதுபோல் வந்து சென்றார். ஆனால், இதுபற்றி நான் போலீசில் புகார் கூறவில்லை. இந்நிலையில் உதவி கமிஷனர் தலைமையில் சுமார் 50க்கு மேற்பட்ட போலீசார் என் வீட்டுக்கு வந்து என்னை கைது செய்வதாக கூறினர். நான் எதற்கு என்னை கைது செய்கிறீர்கள் என கேட்டேன். அதற்கு என்னை வலுக்கட்டாயமாக இழுத்தனர். நான் எந்த தவறும் செய்யவில்லை.

இவ்வாறு அவர் கூறினார். இதையடுத்து போலீசார் ஜேம்ஸ் வசந்தனை கோர்ட்டுக்கு அழைத்து சென்றனர். அங்கு மாஜிஸ்திரேட் இல்லாததால் அவரை  காஞ்சிபுரம் கோர்ட்டுக்கு அழைத்து சென்றனர். பின்னர், அங்கிருந்து மீண்டும் ஆலந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்த அழைத்து  வந்தனர்.

0 Responses to “பிரபல இசையமைப்பாளரும், டிவி தொகுப்பாளருமான ஜேம்ஸ் வசந்தன் கைது”

Post a Comment

Viewers

Flag Counter
All Rights Reserved Ramnad2Day | 7Tech Template by S.S.KarT