21 September 2013
சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்
Do you like this story?
சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்
ஜெய்ப்பூர், செப்.21:
சென்னை சூப்பர் கிங்ஸ் உள்பட 10 அணிகள் பங்கேற்கும் சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது. 5-வது சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் ராஞ்சி, ஜெய்ப்பூர், ஆமதாபாத், டெல்லி, மொகாலி ஆகிய நகரங்களில் நடத்தப்படுகிறது. இன்று தொடங்கும் இந்த கிரிக்கெட் திருவிழா அடுத்த மாதம் 6-ந்தேதி வரை நடைபெறுகிறது.
இதில் இந்தியாவில் இருந்து ஐ.பி.எல். போட்டியில் முதல் 4 இடங்களை பிடித்த மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ஐதராபாத் சன் ரைசர்ஸ், ஆஸ்திரேலியாவில் உள்ளூர் 20 ஓவர் போட்டியில் முதல் இரு இடங்களை பிடித்த பிரிஸ்பேன் ஹீட்,
பெர்த் ஸ்கார்சர்ஸ், தென்ஆப்பிரிக்காவில் இருந்து டைட்டன்ஸ், லயன்ஸ், வெஸ்ட் இண்டீசை சேர்ந்த டிரினிடாட் அண்ட் டொபாக்கோ, நியூசிலாந்தை சேர்ந்த ஒட்டாகோ வோல்ட்ஸ் ஆகிய 10 அணிகள் பங்கேற்கின்றன.
இவற்றில் ஐதராபாத் மற்றும் ஒட்டாகோ அணிகள் தகுதி சுற்றின் மூலம் பிரதான சுற்றுக்கு வந்தவை ஆகும். அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் லயன்ஸ், மும்பை, ஒட்டாகோ, பெர்த், ராஜஸ்தான் அணிகளும், ‘பி’ பிரிவில் பிரிஸ்பேன், சென்னை, ஐதராபாத், டைட்டன்ஸ், டிரினிடாட் ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.
ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் இரண்டு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்குள் நுழையும். முதல் நாளான இன்று ராகுல் டிராவிட் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும்,
ரோகித் ஷர்மா தலைமையிலான ஐ.பி.எல். நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் மோதுகின்றன. தனது கடைசி 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் கால்பதிக்கும் சச்சின் தெண்டுல்கருக்கு, கோப்பையை வென்று சமர்ப்பிப்போம் என்று மும்பை வீரர்கள் சூளுரைத்துள்ளனர்.
தெண்டுல்கரும், அடுத்து வரும் டெஸ்ட் தொடருக்கு முன்பாக தனது பார்மை மீட்க இந்த போட்டியை பயன்படுத்திக் கொள்ள முயற்சிப்பார். குடும்ப விஷயம் காரணமாக ‘யார்க்கர் மன்னன்’ மலிங்கா மும்பை அணியில் ஆடவில்லை.
இது அந்த அணிக்கு பின்னடைவு என்பதில் சந்தேகம் இல்லை. இருப்பினும் தினேஷ் கார்த்திக், அம்பத்தி ராயுடு, மிட்செல் ஜான்சன், பொல்லார்ட், ஹர்பஜன்சிங், பிரக்யான் ஓஜா, கிளைன்மேக்ஸ்வெல், வெய்ன் சுமித் என்று முன்னணி வீரர்கள் இருப்பதால், மும்பை வலுவாகவே விளங்குகிறது.
ஸ்ரீசாந்த், அங்கீத் சவான், சண்டிலா, சித்தார்த் திரிவேதி ஆகிய ராஜஸ்தான் வீரர்கள் ஐ.பி.எல். போட்டியின் போது சூதாட்ட வலையில் சிக்கியதால் ராஜஸ்தான் அணியின் புகழ் வெகுவாக பாதிக்கப்பட்டது. இழந்த பெயரை மீட்பதற்கு ராஜஸ்தானுக்கு இந்த போட்டி அருமையான வாய்ப்பாகும். ராஜஸ்தான் அணி, ஆல்-ரவுண்டர் ஷேன் வாட்சனைத் தான் அதிகமாக நம்பியிருக்கிறது.
இங்கிலாந்து மண்ணில் சதம் அடித்த கையோடு அவர் இந்தியாவுக்கு வந்திருக்கிறார். பிராட் ஹாட்ஜ், ஸ்டூவர்ட் பின்னி, ஜேம்ஸ் பவுல்க்னெர், கெவோன் ஹூப்பர், ரஹானே மற்றும் நியூசிலாந்து ‘ஏ’ அணிக்கு எதிரான தொடரில் ஆல்-ரவுண்டராக கலக்கிய அசோக் மெனேரியா ஆகியோரும் அந்த அணியில் குறிப்பிடத்தக்க வீரர்களாக இருக்கிறார்கள்.
கடந்த ஐ.பி.எல். சீசனில் உள்ளூரில் நடந்த அதாவது ஜெய்ப்பூரில் நடந்த 8 ஆட்டங்களிலும் ராஜஸ்தான் வெற்றி கண்டது. ஜெய்ப்பூர் தங்களது கோட்டை என்று மீண்டும் ஒரு முறை நிரூபிக்க ராஜஸ்தான் ஆவலாக இருப்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது.
இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் கிரிக்கெட், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன. ஜெய்ப்பூரில் அடிக்கடி மழை பெய்து வருகிறது. இன்று இங்கு மழை பெய்ய 50 சதவீதம் வாய்ப்பிருப்பதாக அங்குள்ள வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
This post was written by: S.S.KarT
S.S.KarT Manuel is a professional blogger, web designer and front end web developer. Follow him on Twitter
Subscribe to:
Post Comments (Atom)
0 Responses to “சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்”
Post a Comment