21 December 2013

முதல் டெஸ்ட் நான்காம் நாள் ஆட்ட முடிவில் தென் ஆப்ரிக்காவுக்கு 458 ரன் இலக்கு

முதல் டெஸ்ட் நான்காம் நாள் ஆட்ட முடிவில் 
தென் ஆப்ரிக்காவுக்கு 458 ரன் இலக்கு


ஜோகன்னஸ்பர்க்: 

            இந்திய அணியுடனான முதல் டெஸ்டில், தென் ஆப்ரிக்க அணிக்கு வெற்றி இலக்காக 458 ரன் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இந்திய அணி 2வது இன்னிங்சில் 421 ரன் குவித்து ஆல் அவுட் ஆனது. இந்தியா  தென் ஆப்ரிக்க அணிகளிடையே 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடக்கிறது. 

முதல் டெஸ்ட் போட்டி, ஜோகன்னஸ்பர்க் நியூ வாண்டரர்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. இப்போட்டியில், டாசில் வென்று  முதலில் பேட் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 280 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. விராத் கோஹ்லி 119 ரன் விளாசினார். ஜாகீர், இஷாந்த், ஷமி வேகத்தில் திணறிய தென் ஆப்ரிக்க அணி, முதல் இன்னிங்சில் 244 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. 

இதையடுத்து 36 ரன் முன்னிலையுடன் இந்தியா 2வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர்கள் தவான் 15, விஜய் 39 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். இதைத் தொடர்ந்து புஜாரா  விராத் கோஹ்லி ஜோடி 3வது விக்கெட்டுக்கு பொறுப்புடன் விளையாடி ரன் சேர்த்தது. கோஹ்லி அரை சதம் அடிக்க, புஜாரா சதம் விளாசி அசத்தினார். மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 2 விக்கெட் இழப்புக்கு 284 ரன் எடுத்திருந்தது.

புஜாரா 135, கோஹ்லி 77 ரன்னுடன் நேற்று ஆட்டத்தை தொடர்ந்தனர். சிறப்பாக விளையாடிய புஜாரா டெஸ்ட் போட்டிகளில் 4வது முறையாக 150 ரன் கடந்தார். மறுமுனையில் கோஹ்லியுடன் சாதனை சதத்தை நோக்கி முன்னேறினார். புஜாரா 153 ரன் எடுத்து (270 பந்து, 21 பவுண்டரி) காலிஸ் வேகத்தில் விக்கெட் கீப்பர் டிவில்லியர்சிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 

புஜாரா  கோஹ்லி ஜோடி 3வது விக்கெட்டுக்கு 222 ரன் சேர்த்தது குறிப்பிடத்தக்கது. ரோகித் 6 ரன் மட்டுமே எடுத்து காலிஸ் வேகத்தில் ஸ்டம்புகள் சிதற பெவிலியன் திரும்பினார். சாதனை சதம் அடிக்க 4 ரன் மட்டுமே தேவைப்பட்ட நிலையில், டுமினி சுழலில் பவுண்டரி அடிக்க ஆசைப்பட்ட கோஹ்லி 96 ரன்னில் (193 பந்து, 9 பவுண்டரி) பரிதாபமாக வெளியேறினார். அடுத்து வந்த ரகானே 15, அஷ்வின் 7 ரன்னில் ஆட்டமிழந்தனர். ரன் வேகத்தை அதிகரிக்கும் முயற்சியில் டோனி 29 ரன் எடுத்து பிலேண்டர் வேகத்தில் மாற்று வீரர் எல்கார் வசம் பிடிபட்டார்.

ஜாகீர் ஒரு முனையில் அதிரடி காட்ட இஷாந்த், முகமது ஷமி தலா 4 ரன் எடுத்து இம்ரான் தாஹிர் சுழலில் மூழ்கினர். இந்தியா 2வது இன்னிங்சில் 421 ரன் குவித்து ஆல் அவுட் ஆனது.

ஜாகீர் 29 ரன் எடுத்து (31 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தார். தென் ஆப்ரிக்க பந்துவீச்சில் பிலேண்டர், காலிஸ் தலா 3, தாஹிர், டுமினி தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து 458 ரன் எடுத்தால் வெற்றி என்ற மிகக் கடினமான இலக்குடன் தென் ஆப்ரிக்கா 2வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர்களாக கேப்டன் கிரீம் ஸ்மித், அல்விரோ பீட்டர்சன் களமிறங்கினர். பொறுப்புடன் விளையாடிய இந்த ஜோடி சீரான வேகத்தில் ரன் குவித்து மிரட்டியது. இருவரும் 29.4 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 100 ரன் சேர்த்து வலுவான தொடக்கத்தை கொடுத்தனர்.

மிகப் பெரிய ஸ்கோர் அடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கிரீம் ஸ்மித் 44 ரன் எடுத்து ரகானேவின் துல்லியமான த்ரோவில் ரன் அவுட் ஆகி வெளியேறினார். ஸ்மித்  அல்விரோ பீட்டர்சன்ஜோடி முதல் விக்கெட்டுக்கு 108 ரன் சேர்த்தது. அடுத்து பீட்டர்சனுடன் ஹாஷிம் அம்லா ஜோடி சேர்ந்தார். 33 ஓவர் முடிவில் தென் ஆப்ரிக்கா ஒரு விக்கெட் இழப்புக்கு 110 ரன் எடுத்திருந்தது. பீட்டர்சன் 64 ரன், அம்லா ரன் ஏதும் எடுக்காத நிலையில் களத்தில் இருந்தனர். இரு அணிகளுக்குமே வெற்றி வாய்ப்பு என்ற பரபரப்பான கட்டத்தில், இன்று கடைசி நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

* இந்திய வீரர் செதேஷ்வர் புஜாரா, டெஸ்ட் போட்டிகளில் 4வது முறையாக 150 ரன் கடந்தார். ஜோகன்னஸ்பர்க் டெஸ்ட் போட்டியில் நேற்று அவர் 153 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். முன்னதாக, நியூசிலாந்துக்கு எதிராக ஐதராபாத்தில் நடந்த டெஸ்டில் (ஆக. 2012) 159 ரன், அகமதாபாத்தில் இங்கிலாந்துக்கு எதிராக நடந்த டெஸ்டில் (நவ. 2012) 206* ரன், ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஐதராபாத்தில் நடந்த டெஸ்டில் (மார்ச் 2013) 204 ரன் விளாசி இருந்தார்.

* டெஸ்ட் போட்டிகளில் 4வது வீரராகக் களமிறங்கி 2 இன்னிங்சிலும் சதம் விளாசிய முதல் இந்திய வீரர் என்ற சாதனை படைக்கும் வாய்ப்பை விராத் கோஹ்லி நேற்று வீணடித்தார். 2வது இன்னிங்சில் அவர் 96 ரன் எடுத்து டுமினி சுழலில் விக்கெட் கீப்பர் டிவில்லியர்சிடம் பிடிபட்டு ஆட்டமிழந்தார். தொடர்ச்சியாக 2வது சதம் அடிக்க கிடைத்த வாய்ப்பை வெறும் 4 ரன்னில் வீணடித்த அவர், மட்டையால் தனது ஹெல்மெட்டில் அடித்து நொந்தபடி வெளியேறினார்.

* இந்திய வீரர்களில் விஜய் ஹசாரே, சுனில் கவாஸ்கர், ராகுல் டிராவிட் ஆகியோர் மட்டுமே ஒரு டெஸ்ட் போட்டியில் 2 இன்னிங்சிலும் சதம் அடிக்கும் சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.

0 Responses to “முதல் டெஸ்ட் நான்காம் நாள் ஆட்ட முடிவில் தென் ஆப்ரிக்காவுக்கு 458 ரன் இலக்கு”

Post a Comment

Viewers

Flag Counter
All Rights Reserved Ramnad2Day | 7Tech Template by S.S.KarT