12 December 2013

மகனை கதாநாயகனாக அறிமுகம் செய்தார், விஜயகாந்த் சத்யராஜ்–பிரபு நேரில் வாழ்த்து

மகனை கதாநாயகனாக அறிமுகம் செய்தார், விஜயகாந்த் 
சத்யராஜ்–பிரபு நேரில் வாழ்த்து 




சென்னை:
‘‘தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தனது இளைய மகன் சண்முக பாண்டியனை, ‘சகாப்தம்’ என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகம் செய்தார். சத்யராஜ், பிரபு உள்பட பல நடிகர்கள், டைரக்டர்கள் நேரில் வந்து சண்முக பாண்டியனை வாழ்த்தினார்கள்.

கதாநாயகனாக அறிமுகம்

நடிகரும், தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்தின் இளைய மகன், சண்முக பாண்டியன். இவர், ‘விஸ்காம்’ படித்தவர். ‘சகாப்தம்’ என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். இந்த படத்தை கேப்டன் சினி கிரியேஷன்ஸ் சார்பில் எல்.கே.சுதீஷ் தயாரிக்கிறார். சந்தோஷ் குமார் ராஜன் டைரக்டு செய்கிறார்.

சண்முக பாண்டியனை கதாநாயகனாக அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி, சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டில் நடந்தது. இதற்காக விஜயகாந்த் வீடு அமைந்திருக்கும் கண்ணம்மாள் தெருவில் ஒரு மேடை அமைக்கப்பட்டு இருந்தது. அந்த மேடைக்கு விஜயகாந்த் தனது மகன் சண்முக பாண்டியனை அழைத்து வந்தார். அப்போது கூடியிருந்த தே.மு.தி.க. தொண்டர்கள் வாழ்த்து கோஷங்களை எழுப்பி ஆரவாரம் செய்தார்கள்.

சத்யராஜ்–பிரபு

இந்த நிகழ்ச்சியில், நடிகர் சத்யராஜ் கலந்துகொண்டு சண்முக பாண்டியனை வாழ்த்தினார். நடிகர் பிரபு மனைவி புனிதா, மகன் விக்ரம் பிரபு ஆகியோருடன் வந்து வாழ்த்தினார்.

நடிகர்கள் கார்த்தி, நந்தா, கருணாஸ், மயில்சாமி, இளவரசு, டைரக்டர்கள் சங்க தலைவர் விக்ரமன், செயலாளர் ஆர்.கே.செல்வமணி, டைரக்டர்கள் கே.எஸ்.ரவிகுமார், பூபதி பாண்டியன், அரவிந்தராஜ், ஈ.ராமதாஸ்,  சண்முகசுந்தரம், பட அதிபர்கள் ஜி.கே.ரெட்டி, சாமிநாதன், வேணுகோபால், கவிஞர் விவேகா ஆகியோரும் நேரில் வந்து வாழ்த்தினார்கள்.

ரஜினிகாந்த், சூர்யா இருவரும் வாழ்த்து செய்தி அனுப்பி இருந்தார்கள்.

நிகழ்ச்சியின் முடிவில் விஜயகாந்த் பேசினார். அவர் பேசியதாவது:–


அண்ணன்–தம்பி

‘‘என் மகன்கள் இருவரும் என் பெயரை எந்த இடத்திலும் பயன்படுத்துவதில்லை. நீங்கள், நீங்களாக இருங்கள் என்று அவர்களிடம் சொல்லியிருக்கிறேன். மூத்த மகன் விஜய பிரபாகரனைத்தான் நடிகராக அறிமுகம் செய்ய இருந்தோம். அவன், ‘ஆர்க்கிடெக்’ படிக்க விரும்புவதாக கூறிவிட்டான்.

எங்கள் வீட்டில் அண்ணன்–தம்பி சண்டை இல்லை. அண்ணன் என்ன சொல்கிறானோ, அதை தம்பி கேட்பான். சண்முக பாண்டியனை நடிக்கும்படி சொன்னதே விஜய பிரபாகரன்தான். இந்த படத்தின் வெற்றி–தோல்வி பற்றி கவலைப்படவில்லை. படம், ஐந்து வாரங்கள் ஓடினால் போதும்.

பயம் இல்லை

எனக்கு பயம் இல்லை. எதற்கு பயப்பட வேண்டுமோ அதற்கு பயப்பட வேண்டும். எதற்கு பயப்படக் கூடாதோ அதற்கு பயப்படக் கூடாது. என்னைப் பொருத்தவரை எல்லாமே மக்கள்தான். மக்கள் என் பக்கம் இருக்கும் வரை யாரும் என்னை அசைக்க முடியாது.’’

இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.


படத்தின் டைரக்டர் சந்தோஷ் குமார் ராஜன், கதாசிரியர் நவீன், வசனகர்த்தா வேலுமணி ஆகியோரையும் விஜயகாந்த் அறிமுகம் செய்து வைத்தார். பட அதிபரும், தே.மு.தி.க. இளைஞர் அணி செயலாளருமான எல்.கே.சுதீஷ், நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதுடன் நன்றியும் கூறினார்.

0 Responses to “மகனை கதாநாயகனாக அறிமுகம் செய்தார், விஜயகாந்த் சத்யராஜ்–பிரபு நேரில் வாழ்த்து ”

Post a Comment

Viewers

Flag Counter
All Rights Reserved Ramnad2Day | 7Tech Template by S.S.KarT