20 December 2013

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: வலுவான நிலையில் இந்திய அணி புஜாரா சதம் அடித்தார்

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட்:
 வலுவான நிலையில் இந்திய அணி புஜாரா சதம் அடித்தார் 


ஜோகன்னஸ்பர்க்:

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் புஜாரா, கோலியின் பொறுப்பான ஆட்டத்தால் இந்திய அணி வலுவான நிலையை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது.

தென்ஆப்பிரிக்கா 244 ரன்

இந்தியா–தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பர்க் நகரில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 280 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தென்ஆப்பிரிக்கா 2–வது நாள் முடிவில் 6 விக்கெட்டுக்கு 213 ரன்கள் எடுத்திருந்தது. பிலாண்டர் 48 ரன்களுடனும், பாப் டு பிளிஸ்சிஸ் 17 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் 3–வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. வேகக் கூட்டணி ஜாகீர்கானும், இஷாந்த் ஷர்மாவும் இணைந்து தென்ஆப்பிரிக்காவின் எஞ்சிய 4 விக்கெட்டுகளை வெறும் 45 நிமிடங்களுக்குள் சாய்த்தனர்.

இஷாந்த் ஷர்மா வீசிய முதல் பந்தை பவுண்டரிக்கு திருப்பி, பிலாண்டர் அரைசதத்தை கடந்தார். அதே ஓவரில் மேலும் ஒரு பவுண்டரியும் ஓட விட்டார். அவர் 59 ரன்களில் (86 பந்து, 7 பவுண்டரி), ஜாகீர்கானின் பந்து வீச்சில் முதலாவது ஸ்லிப்பில் நின்ற அஸ்வினிடம் கேட்ச் ஆனார். பிளிஸ்சிஸ்சும் (20 ரன்) ஜாகீர்கானுக்கு இரையானார். இதன் பின்னர் ஸ்டெயினை (10 ரன்) இஷாந்த் ஷர்மா வெளியேற்ற, மோர்கலை (ரன்) ஜாகீர்கான் வீழ்த்தி இன்னிங்சை முடிவுக்கு கொண்டு வந்தார். தென்ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 244 ரன்களுக்கு ஆல்–அவுட் ஆனது. இதனால் இந்திய அணி 36 ரன்கள் முன்னிலை பெற்றது. இந்திய தரப்பில் ஜாகீர்கான், இஷாந்த் ஷர்மா தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர்.

விஜய் 39 ரன்

அடுத்து 36 ரன்கள் முன்னிலையுடன் இந்தியாவின் இன்னிங்சை முரளிவிஜயும், ஷிகர் தவானும் ஆரம்பித்தனர். மீண்டும் சொதப்பிய தவான் 15 ரன்களில் நடையை கட்டினார். அடுத்து விஜயுடன் புஜாரா இணைந்தார். இருவரும் நிதானமாக விளையாடி ஸ்கோரை படிப்படியாக உயர்த்தினர். 94 பந்துகளை சந்தித்து 39 ரன்கள் சேகரித்த விஜய், காலிசின் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் டிவில்லியர்சிடம் கேட்ச் ஆனார்.

இதைத் தொடர்ந்து புஜா£ராவும், விராட் கோலியும் 3–வது விக்கெட்டுக்கு கைகோர்த்தனர். இவர்கள் தென்ஆப்பிரிக்காவின் பந்து வீச்சை சாதுர்யமாக எதிர்கொண்டனர். புஜாரா 9 ரன்களில் இருந்தபோது ரன்–அவுட்டில் இருந்து தப்பினார். இதே போல் 51 ரன்களில் ஆடிக் கொண்டிருந்த போது அவர் கொடுத்த அருமையான கேட்ச் வாய்ப்பை பந்து வீசிய இம்ரான் தாஹிர் வீணடித்தார். இந்த வாய்ப்பை புஜாரா கெட்டியாக பிடித்துக் கொண்டார்.

புஜாரா சதம்

இதன் பின்னர் புஜாரா–கோலி ரன் குவிப்பில் வேகம் காட்டினர். மோர்னே மோர்கலின் காயமும், சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிரின் சாதாரண பந்து வீச்சும் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக அமைந்தது. இந்த ஜோடியை பிரிக்க தென்ஆப்பிரிக்க கேப்டன் சுமித் பல்வேறு யுக்திகளை கையாண்டும் பலன் கிடைக்கவில்லை.

அபாரமாக ஆடிய புஜாரா பவுண்டரி விளாசி தனது 6–வது சதத்தை பூர்த்தி செய்தார். வெளிநாட்டு மண்ணில் இது அவரது முதல் சதமாகும். தென்ஆப்பிரிக்க மண்ணில் சதம் அடித்த 9–வது இந்தியர் புஜாரா ஆவார். இதற்கிடையே கோலி அரைசதத்தை கடந்தார்.


66 ஓவர்கள் முடிந்திருந்த போது இந்திய அணி 2 விக்கெட்டுக்கு 246 ரன்கள் எடுத்திருந்தது. புஜாரா 120 ரன்களுடனும் (191 பந்து, 17 பவுண்டரி), கோலி 54 ரன்களுடனும் (91 பந்து, 6 பவுண்டரி) களத்தில் நின்றனர். அப்போது இந்திய அணி 282 ரன்கள் முன்னிலை கண்டு வலுவான நிலையை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தது.

ஸ்கோர் போர்டு

முதல் இன்னிங்ஸ்

இந்தியா 280

தென்ஆப்பிரிக்கா


சுமித் எல்.பி.டபிள்யூ (பி) ஜாகீர்கான் 68

பீட்டர்சன் எல்.பி.டபிள்யூ (பி) இஷாந்த் 21

அம்லா (பி) இஷாந்த் 36

காலிஸ் எல்.பி.டபிள்யூ (பி) இஷாந்த் 0

டிவில்லியர்ஸ் எல்.பி.டபிள்யூ (பி) முகமது ஷமி 13

டுமினி(சி) விஜய் (பி) முகமது ஷமி 2

பிளிஸ்சிஸ் (சி) டோனி(பி) ஜாகீர்கான் 20

பிலாண்டர் (சி) அஸ்வின் (பி) ஜாகீர்கான் 59

ஸ்டெயின் (சி) ரோகித் (பி) இஷாந்த் 10

மோர்னே மோர்கல் (பி) ஜாகீர்கான் 7

இம்ரான் தாஹிர் (நாட்–அவுட்) 0

எக்ஸ்டிரா 8

மொத்தம் (75.3 ஓவர்களில் ஆல்–அவுட்) 244

விக்கெட் வீழ்ச்சி: 1–37, 2–130, 3–130, 4–130, 5–145, 6–146, 7–226, 8–237, 9–239

பந்து வீச்சு விவரம்

ஜாகீர்கான் 26.3–6–88–4

முகமது ஷமி அகமது 18–3–48–2

இஷாந்த் ஷர்மா 25–5–79–4

அஸ்வின் 6–0–25–0

2–வது இன்னிங்ஸ்

இந்தியா (66 ஓவர் வரை)

தவான் (சி) காலிஸ் (பி) பிலாண்டர் 15

விஜய் (சி) டிவில்லியர்ஸ் (பி) காலிஸ் 39

புஜாரா (நாட்–அவுட்) 120

கோலி (நாட்–அவுட்) 54

எக்ஸ்டிரா 18

மொத்தம் (66 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு) 246

விக்கெட் வீழ்ச்சி: 1–23, 2–93

பந்து வீச்சு விவரம்


ஸ்டெயின் 19–3–62–0

பிலாண்டர் 15–5–41–1

மோர்னே மோர்கல் 2–1–4–0

காலிஸ் 14–4–51–1

இம்ரான் தாஹிர் 10–0–47–0

டிவில்லியர்ஸ் 1–0–5–0

டுமினி 5–0–26–0


0 Responses to “தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: வலுவான நிலையில் இந்திய அணி புஜாரா சதம் அடித்தார் ”

Post a Comment

Viewers

Flag Counter
All Rights Reserved Ramnad2Day | 7Tech Template by S.S.KarT