14 May 2013

ஆட்டோ சங்கர் - வரலாறு 3 (சங்கரின் தம்பி வாக்குமூலம்)

தம்பி - மைத்துனர்



ஆட்டோ சங்கரின் அடாவடிதனத்துக்கு அவனுடைய தம்பி மோகனும், மைத்துனர் எல்டினும்தான் தளபதிகளாக இருந்து செயல்பட்டுள்ளனர்.

போலீஸ் விசாரணையின்போது மோகன் கூறியதாவது:_

சுடலையின் ஆலோசனையின் பேரில்தான் சங்கர் திருவான்மிïரில் விபசார விடுதி தொடங்கினான். சுடலை ஏராளமான அழகிகளை விபசார விடுதிக்கு அழைத்துக்கொண்டு வருவான். சில அழகிகளை பணத்துக்கு சங்கரிடம் விற்று விடுவான்.

சுடலை ஒரு பெண் ராசிக்காரன். அவனிடம் சிக்காத விபசார அழகிகளே கிடையாது என்று சங்கர் அடிக்கடி சொல்வான். எப்படியாவது ஒரு நாளைக்கு ஒரு அழகியை சங்கரிடம் சுடலை அறிமுகப்படுத்துவான்.

விபசார விடுதிக்கு வரும் நல்ல அழகிகளை சங்கர் அவன் கைவசப்படுத்திவிடுவான். அழகிகளிடம் சங்கரைத் தவிர வேறு யாரும் பேசக்கூடாது. அழகிகள் அவனுக்கு மட்டும்தான். அதன் பிறகு அவளுக்கு தனி வீடு. சில நாட்கள் கழித்து அவள் கழுத்தில் சங்கர் தாலி கட்டி மனைவியாக்கி விடுவான்.

ஜெகதீசுவரியை சங்கர் காதலித்தான். பெற்றோருக்கு தெரியாமல் அவளை வேலூரில் இருந்து சென்னைக்கு காரில் தூக்கிக்கொண்டு வந்து கல்யாணம் செய்து கொண்டான். வேறு வழி இல்லாமல் சங்கரிடம் ஜெகதீசுவரி மனைவியாக வாழ்க்கையை தொடங்கினாள். ஜெகதீசுவரியை சங்கர் குடும்பப் பெண் போல நடத்தினான்.

அதன்பிறகுதான் சங்கரின் விபசார விடுதிக்கு 1981_ம் வருடம் அக்டோபர் மாதம் கீதசுந்தரி வந்தாள். அவளை சுடலை அறிமுகம் செய்து வைத்தான். அவள் மிகவும் அழகாக இருந்தாள். கீதசுந்தரியை பார்த்தவுடன் அவளிடம் மனதை பறி கொடுத்து விட்டதாக எங்களிடம் சங்கர் கூறினான். 

கீதசுந்தரியுடன் சங்கர் குடிபோதையில் தாறுமாறாக நடந்து கொண்டான். இதனால் சங்கர் மீது கீத சுந்தரிக்கு வெறுப்பு ஏற்பட்டது. திருமணம் ஆன ஒரு வருடத்தில் சங்கருக்கும், கீதசுந்தரிக்கும் தகராறு முற்றியது. 1982_ம் வருடம் அக்டோபர் மாதம் 31_ந்தேதி ஞாயிற் றுக்கிழமை கீதசுந்தரி தீக்குளித்தாள். மாலை 4 மணி அளவில் அவள் பிணமானாள்.

கீதசுந்தரியின் மரணம் சங்கருக்கு பெரிய இழப்பாக இருந்தது. அவள் மீது சங்கர் வைத்திருந்த அன்பின் காரணமாக சங்கர், பெரியார் நகரில் கட்டிய பங்களாவுக்கு "கீதசுந்தரி" என்று பெயர் சூட்டினான். அதை கீதசுந்தரியின் நினைவு இல்லம் போல் வைத்து இருந்தான்.

அடுத்து சுமதி 3_வது மனைவியும், பெங்களூர் லலிதா 4_வது மனைவியும் ஆனார்கள். இவர்களையும் சுடலைதான் கடத்தி வந்தான்.

சங்கர் சாராயம் குடித்து வந்து கும்மாளம் போடுவது லலிதாவுக்கு பிடிக்கவில்லை. சங்கரின் முரட்டுத்தனத்துக்கு லலிதாவினால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. இதனால் அவள் சங்கரிடம் இருந்து தப்பித்துச் செல்ல திட்டம் தீட்டினாள். இதே நேரத்தில் லலிதா மீது சுடலைக்கு மோகம் ஏற்பட்டது. சங்கர் வெளியே போன நேரம் பார்த்து லலிதா சுடலையுடன் ஓடிவிட்டாள்.

இருவரும் பல்லாவரத்தில் தங்கி இருந்தார்கள். பிறகு நாங்கள் பல்லாவரம் சென்று சமாதானம் பேசி அவளை அழைத்து வந்தோம்.

1987_ம் வருடம் அக்டோபர் மாதம் சுடலை சங்கர் வீட்டுக்கு வந்தான். அன்று அமாவாசை தினம். சுடலையை பார்த்ததும் சங்கருக்கு சரியான ஆத்திரம். அவனை தீர்த்துக்கட்டும்படி என்னிடமும், எல்டினிடமும் கூறினான். அவனுக்கு சாராயத்தை ஊற்றிக் கொடுத்து போதை ஏற்றி கழுத்தை நெரித்து கொலை செய்தோம். அவன் பிணத்தை சங்கர் வீட்டிலேயே எரித்தோம்.

இதைத்தொடர்ந்து ஜனவரி (1988_ம் வருடம்) மாதம் லலிதாவை பெரிய வீட்டுக்கு அழைத்து வந்தான். அன்று 11 மணிக்கு இரவு அவளை கழுத்தை நெரித்து சங்கர் கொலை செய்தான். இதை அவள் எதிர்பார்க்கவில்லை. அவள் செத்து சுருண்டு விழுந்தாள்.

"நான் தொட்டவளை இனிமேல் எவனும் தொடக்கூடாது" என்று சங்கர் வெறியுடன் பேசினான்.

சங்கர், பெரியார் நகரில் அம்மன் கோவில் கட்டினான். இலவசமாக சிறுவர்களுக்கு இரவு பள்ளிக்கூடம் கட்டிக்கொடுத்தான். இலவசமாக எல்லோருக்கும் சாராயம் குடிக்கக் கொடுப்பான். செலவுக்கு பணம் கொடுப்பான். சிறுவர்_சிறுமியர்களுக்கு பிஸ்கட், சாக்லெட்களை அள்ளி அள்ளி வீசுவான். எல்லா அரசியல் கட்சிகளுக்கும் கூட்டம் நடத்த நன்கொடை கொடுப்பான்.

திருவான்மிïரில் உள்ள பெரியார் நகர் மக்கள் மத்தியில் சங்கர் ஒரு பெரிய மனிதனாக நடமாடினான். அவனுடைய கொலை ரகசியங்கள் எல்லோருக்கும் தெரியாது. எங்களைச் சேர்ந்த ஒரு சிலருக்குத்தான் தெரியும்."

இவ்வாறு மோகன் கூறினான்.

ஆட்டோ சங்கரின் தந்தை பெயர் தங்கராஜ். தாய் ஜெயலட்சுமி. வேலூரைச் சேர்ந்தவர். இருவரும் கலப்பு திருமணம் செய்தார்கள். ஜெயலட்சுமி கணவரை விட்டு பிரிந்து சென்று வேறு ஒரு நபரை திருமணம் செய்து கொண்டார்.

ஆட்டோ சங்கருக்கு சீதாலட்சுமி என்கிற கவிதா, ஹேமசுந்தரி என்ற 2 மகள்களும், சீனிவாசன், டெல்லி சுந்தர் என்ற 2 மகன்களும் இருந்தனர்.

0 Responses to “ஆட்டோ சங்கர் - வரலாறு 3 (சங்கரின் தம்பி வாக்குமூலம்)”

Post a Comment

Viewers

Flag Counter
All Rights Reserved Ramnad2Day | 7Tech Template by S.S.KarT