14 May 2013

ஆட்டோ சங்கர் - வரலாறு 4 ( சிறையில் இருந்து தப்பி ஓட்டம் )

சென்னை சிறையில் இருந்து "ஆட்டோ" சங்கர் தப்பி ஓட்டம் 




6 பேர்களை கொலை செய்த ஆட்டோ சங்கர், சிறையில் இருந்து தப்பி ஓடினான். ஆட்டோ சங்கர் மற்றும் அவனது கூட்டாளிகள் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு 21_8_1990 அன்று விசாரணைக்கு வருவதாக இருந்தது. அதற்கு முந்தின நாள் போலீசுக்கு பெரிய அதிர்ச்சி தரும் சம்பவம் நடந்தது.

அதாவது 20_8_1990 அன்று நள்ளிரவு சென்னை மத்திய சிறையில் இருந்து ஆட்டோ சங்கர், அவனது தம்பி மோகன், கூட்டாளி செல்வராஜ் ஆகியோர் தப்பிவிட்டனர். இவர்களுடன் அதே ஜெயில் அறைக்குள் (செல்) இருந்த மற்றொரு கொலை கொள்ளை வழக்கில் சம்பந்தப்பட்ட வக்கீல் ராஜா, சுண்டல் குமார் ஆகியோரும் ஓடிவிட்டனர்.

இந்த 5 பேரும் தப்புவதற்கு ஜெயில் ஊழியர்கள் சிலரும், வக்கீல் ராஜாவின் நண்பனான உதயா (ஜெயிலில் இருந்து பரோலில் வெளியே வந்து தலைமறைவாக திரிந்தவன்) என்பவனும் உதவியாக இருந்தார்கள். 

உதயா, சம்பவத்தன்று நள்ளிரவில் காரில் மத்திய சிறைச்சாலை அருகே சென்று மரத்தில் ஏறி நின்று ஜெயில் காம்பவுண்டுக்குள் கயிற்றைப் போட்டான். அந்த கயிறு வழியாக 5 பேரும் ஏறி வெளியே குதித்து தப்பினார்கள்.

தப்பிய 5 கைதிகளையும் போலீசார் சல்லடை போட்டு தேடினார்கள். ஒரு வாரத்தில் வக்கீல் ராஜா, சுண்டல் குமார் இரு வரும் பெங்களூரில் சிக்கினார்கள். இவர்களிடம் விசாரணை நடத்தியதில் ஆட்டோ சங்கர் தன்னுடைய புதிய காதலி தேவியுடன் ஒரிசா சென்று இருப்பதாக தெரியவந்தது.

அதோடு ஆட்டோ சங்கருக்கு தேவியுடன் ஏற்பட்ட தொடர்பு மற்றும் அவனைப்பற்றிய காதல் விவகாரங்களும் வெளிவந்தன. ஜெயில் பறவையாக இருக்கும் போது ஆட்டோ சங்கரே இவற்றை ஜெயில் நண்பர்களிடம் கூறி இருக்கிறான்.

சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது, ஆட்டோ சங்கரின் காதல் வலையில் தேவி சிக்கினாள். தேவி, சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்தவள். அவளுடைய கணவன் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அடைந்து மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். 

அவரை பார்க்க தேவி வந்தபோது, ஆட்டோ சங்கரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அடிக்கடி சந்தித்து பேசியதில் இருவருக்கும் காதல் ஏற்பட்டது. தேவிக்கு ஆட்டோ சங்கர் அவனுடைய பெயர் பதித்த மோதிரத்தை பரிசாக வழங்கினான். அதேபோல், தேவியும் அவளுடைய பெயர் பதித்த மோதிரம் ஒன்றை பரிசாக கொடுத்தாள். 

இப்படி 6 மாத காலமாக ஆட்டோ சங்கர் தேவிக்கு ஜெயில் காதலனாக இருந்தான். காதலியுடன் உல்லாச வாழ்க்கை வாழவேண்டும் என்ற எண்ணத்தில்தான் ஆட்டோ சங்கர் தப்பினான் என்றும் தெரியவந்தது.

இதன் பேரில் போலீசார் வக்கீல் ராஜா, சுண்டல் குமார் ஆகியோருடன் ஒரிசாவில் உள்ள ரூர்கேலாவுக்கு சென்றனர்.
ரூர்கேலா நகரம் அருகே ஒரு குடிசை வீட்டில் ஆட்டோ சங்கர் அவனுடைய காதலியுடன் தங்கியிருப்பதாக போலீ சுக்கு தகவல் கிடைத்தது. அங்கு தேவி கழுத்தில் தாலி கட்டி குடும்பம் நடத்தி வந்தான்.

அந்த கிராமத்தின் முக்கிய புள்ளிகள் உதவியுடன் போலீசார் மாறுவேடத்தில் சென்று ஆட்டோ சங்கரையும், காதலி தேவியையும் மடக்கி பிடித்தார்கள். ஆட்டோ சங்கர் கைவிலங்கு மாட்டி போலீஸ் வேனில் ஏற்றப்பட்டான்.

போலீசில் சிக்கிக்கொண்டதும் ஆட்டோ சங்கர் அதிர்ச்சியில் உறைந்துபோனான். எதுவும் பேசவில்லை. தேவி தேம்பி தேம்பி அழுதாள். தப்பி ஓடிய 12 நாட்களில் போலீசார் அவனை கண்டுபிடித்து கைது செய்து விட்டனர்.ஆட்டோ சங்கரின் தம்பி மோகன், கூட்டாளி செல்வராஜ் ஆகிய 2 பேரும் பீகார் மாநிலம் பாட்னாவுக்கு தப்பி சென்றதாக தகவல் கிடைத்தது. உடனே போலீசார் பாட்னா விரைந்தனர்.

அங்கு மோகனும், செல்வராஜ×வும் சி.ஐ.டி. போலீசிடம் வசமாக சிக்கினார்கள்.

ஒரிசாவில் இருந்து சென்னைக்கு ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு இருந்தது. அதனால் சங்கரும், தேவியும் விமானத்தில் சென்னைக்கு கொண்டு வரப்பட்டனர். ஆட்டோ சங்கர் பாண்ட், முழுக்கை சட்டை அணிந்திருந்தான். சட்டையின் இரு கைகளையும் மடக்கி விட்டு ஸ்டைலாக வந்தான்.

போலீஸ் டைரக்டர் ஜெனரல் (டி.ஜி.பி) துரை முன்பு ஆட்டோ சங்கரை ஆஜர்படுத்தினர். அப்போது ஆட்டோ சங்கரை நிருபர்கள் பார்த்தார்கள். சங்கரை போட்டோ படம் எடுத்தனர். மறுநாள் சங்கரும்_தேவியும் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டனர். விசாரணைக்காக 2 பேரையும் 7 நாட்கள் காவலில் வைக்க போலீசார் அனுமதி பெற்றார்கள். கோர்ட்டு விசாரணை முடிந்ததும் ஆட்டோ சங்கரும், தேவியும் ஐ.ஜி. அலுவலகத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர்

0 Responses to “ஆட்டோ சங்கர் - வரலாறு 4 ( சிறையில் இருந்து தப்பி ஓட்டம் )”

Post a Comment

Viewers

Flag Counter
All Rights Reserved Ramnad2Day | 7Tech Template by S.S.KarT