27 May 2013

ஐபிஎல் பைனல் சென்னையை வீழ்த்தியது மும்பை

ஐபிஎல் பைனல்
சென்னையை வீழ்த்தியது மும்பை


கொல்கத்தா: சூப்பர் கிங்ஸ் அணியுடனான ஐபிஎல் டி20 இறுதிப் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணி 23 ரன் வித்தியாசத்தில் வென்றது. கொல்கத்தாவில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற மும்பை முதலில் பேட் செய்தது. தொடக்க வீரர்களாக ஸ்மித், தாரே களமிறங்கினர். மோகித் வீசிய முதல் ஓவரில் அதிரடி வீரர் ஸ்மித் வெறும் 4 ரன் மட்டுமே எடுத்து வெளியேற மும்பை அணிக்கு அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது. அடுத்து மார்க்கெல் வீசிய 2வது ஓவரின் முதல் பந்தில் தாரே டக் அவுட் ஆனார். கேப்டன் ரோகித் 2 ரன் எடுத்த நிலையில், மார்க்கெல் வேகத்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். மும்பை 3.2 ஓவரில் 16 ரன்னுக்கு 3 விக்கெட் பறிகொடுத்து பரிதவித்தது. கார்த்திக் 21 ரன் எடுத்து கிறிஸ் மோரிஸ் பந்துவீச்சில் கிளீன் போல்டாகி ஆட்டமிழந்தார். அடுத்து ராயுடுவுடன் அதிரடி வீரர் போலார்டு ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 5வது விக்கெட்டுக்கு கடுமையாகப் போராடி 48 ரன் சேர்த்தது. ராயுடு 37 ரன் எடுத்து (36 பந்து, 4 பவுண்டரி) பிராவோ வேகத்தில் வெளியேறினார். அடுத்து வந்த ஹர்பஜன் 14 ரன் எடுத்து பிராவோ பந்துவீச்சில் ஹஸி வசம் பிடிபட்டார். ரிஷி தவான் 3 ரன் எடுத்து ரன் அவுட் ஆனார். ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும், உறுதியுடன் விளையாடிய போலார்டு ரன் வேகத்தை அதிகரிக்கப் போராடினார். பிராவோ வீசிய கடைசி ஓவரில் ஜான்சன் (1), மலிங்கா (0) இருவரும் விக்கெட் கீப்பர் டோனியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தனர். போலார்டு அமர்க்களமாக ஒரு சிக்சர் விளாசி அரை சதத்தை பூர்த்தி செய்தார். கடைசி பந்தையும் அவர் சிக்சருக்கு தூக்கி அசத்தினார். மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 148 ரன் எடுத்தது. போலார்டு 60 ரன் (32 பந்து, 7 பவுண்டரி, 3 சிக்சர்), ஓஜா ஒரு ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். அடுத்து 149 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது.

ஹஸி, விஜய் இருவரும் துரத்தலை தொடங்கினர். மலிங்கா வீசிய முதல் ஓவரிலேயே ஹஸி (1 ரன்) கிளீன் போல்டானார். அடுத்து வந்த ரெய்னா, பத்ரிநாத் இருவரும் டக் அவுட் ஆகி வெளியேறினர். சென்னை 3 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து திணறியது. விஜய் , பிராவோ ஜோடி 4வது விக்கெட்டுக்கு 33 ரன் சேர்த்தது. பிராவோ 15 ரன் எடுக்க, ஜடேஜா டக் அவுட் ஆகி ஏமாற்றினார். விஜய் 18 ரன் எடுத்து ஜான்சன் வேகத்தில் ரோகித் வசம் பிடிபட, சென்னைக்கு பின்னடைவாக அமைந்தது. அந்த அணி 39 ரன்னுக்கு 6 விக்கெட் பறிகொடுத்தது. மார்க்கெல் 10 ரன், மோரிஸ் டக் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினர். கேப்டன் டோனி மட்டும் ஒரு முனையில் போராடினார். டோனி , அஷ்வின் ஜோடி 9வது விக்கெட்டுக்கு 41 ரன் சேர்த்தது. அஷ்வின் 9 ரன் எடுத்து வெளியேறினார். கடைசி 2 ஓவரில் சென்னை வெற்றிக்கு 50 ரன் தேவைப்பட்டது. மலிங்கா வீசிய 49வது ஓவரில் 8 ரன் மட்டுமே கிடைத்தது. போலார்டு வீசிய கடைசி ஓவரில் டோனி சிக்சர் விளாசி அரை சதம் கடந்தார். சென்னை 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 125 ரன் எடுத்து 23 ரன் வித்தியாசத்தில் தோற்றது. டோனி 63 ரன் (45 பந்து, 3 பவுண்டரி, 5 சிக்சர்), மோகித் (0) ஆட்டமிழக்காமல் இருந்தனர். மும்பை பந்துவீச்சில் மலிங்கா, ஜான்சன், ஹர்பஜன் தலா 2, போலார்டு, ஓஜா, தவான் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். சென்னை அணி கேப்டன் டோனி மற்றும் தனி வீரராக போராட மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டம் இழந்து, மூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்றும் வாய்ப்பை வீணடித்தனர். ஐபிஎல் தொடரில் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென¢ற மும்பை அணி வீரர்கள், ஈடன் கார்டன் மைதானத்தை உற்சாகமாக வலம் வந்து ரசிகர்களின் வாழ்த்துக்களை ஏற்றனர். இந்த தொடருடன் ஐபிஎல் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக மும்பை வீரர் சச்சின் அறிவித்தார்.

0 Responses to “ஐபிஎல் பைனல் சென்னையை வீழ்த்தியது மும்பை”

Post a Comment

Viewers

Flag Counter
All Rights Reserved Ramnad2Day | 7Tech Template by S.S.KarT