27 June 2013

ராஜ்யசபா தேர்தலில் அதிமுக அணி அமோக வெற்றி! கனிமொழிக்கு "செல்லாத" ஓட்டு போட்ட எம்.எல்.ஏ? தேமுதிகவுக்கு ஆப்பு வைத்த தே.மு.தி.க 7 எம்.எல்.ஏகள்

ராஜ்யசபா தேர்தலில்  அதிமுக அணி அமோக வெற்றி ! 

கனிமொழிக்கு "செல்லாத" ஓட்டு போட்ட  எம்.எல்.ஏ? 

தேமுதிகவுக்கு ஆப்பு  வைத்த தே.மு.தி.கவின்  7 எம்.எல்.ஏகள் 


சென்னை: 

                   தமிழகத்தில் 6 ராஜ்யசபா எம்.பி. இடங்களுக்கு இன்று நடைபெற்ற தேர்தலில் அதிமுக அணியில் போட்டியிட்ட 5 வேட்பாளர்களும் திமுக வேட்பாளர் கனிமொழியும் வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

6 ராஜ்யசபா எம்.பி. இடங்களுக்கு 7 பேர் போட்டியிட்டனர். அதிமுக சார்பில் 4 வேட்பாளர்களும் இந்திய கம்யூனிஸ்ட், திமுக, தேமுதிக சார்பில் தலா ஒரு வேட்பாளரும் களத்தில் இருந்தனர். 7 பேர் போட்டியிட்டதால் இன்று வாக்குப் பதிவு நடைபெற்றது். காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப் பதிவு நடைபெற்றாலும் முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 1.45க்குள்ளாகவே 231 வாக்குகள் பதிவாகிவிட்டன. எஞ்சிய 3 வாக்குகள் 3 பாமக எம்.எல்.ஏக்களுடையது. அவர்கள் இத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்திருந்தனர். 

மாலை 4 மணிக்கு வாக்குப் பதிவு முடிவடைந்த நிலையில் அனைத்து வாக்குப் பெட்டிகளும் பூட்டி சீல் வைக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து மாலை 5 மணிக்கு வாக்குப் பெட்டிகள் திறக்கப்பட்டு வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்றது. பதிவான 231 வாக்குகளில் 230 வாக்குகள்தான் செல்லக் கூடியவையாக அறிவிக்கப்பட்டது. ஒரு வாக்கு செல்லாதது என்றும் அறிவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

 பின்னர் அதிமுக அணியின் 5 வேட்பாளர்களும் 6வது எம்.பி. இடத்துக்குப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கனிமொழியும் வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டன. 

அதிமுகவின் 5 வேட்பாளர்கள்- கனிமொழி வெற்றி 

அர்ஜூன் (அதிமுக) - 36 

ரத்னவேல் (அதிமுக)- 36

 மைத்ரேயன் (அதிமுக)- 36 

லட்சுமணன் (அதிமுக)- 35 

டி. ராஜா (இந்திய கம்யூனிஸ்ட்)- 34 

கனிமொழி (திமுக) 31 

வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டனர். 

கனிமொழிக்கு "செல்லாத" ஓட்டு போட்டது யாரு? 

                     6வது எம்.பி. இடத்துக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள திமுக வேட்பாளர் கனிமொழிக்கு மொத்தம் 31 வாக்குகள் கிடைத்திருக்கின்றன. திமுகவுக்கு 23 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். திமுகவை ஆதரிக்கும் காங்கிரஸ் கட்சிக்கு 5 எம்.எல்.ஏக்களும் புதிய தமிழகம், மனிதநேய மக்கள் கட்சிக்கு தலா 2எம்.எல்.ஏக்களும் என 32 எம்.எல்.ஏக்களின் வாக்குகள் கிடைத்திருக்க வேண்டும். 

ஆனால் கனிமொழிக்குக் கிடைத்திருப்பதோ 31 வாக்குகள்தான். அப்படியானால் கனிமொழிக்குக் கிடைக்க வேண்டிய ஒரு வாக்குதான் செல்லாததாக இருந்திருக்கிறது. 

இந்த செல்லாத வாக்கை செலுத்தியது யார் என்பதுதான் இப்போதைய பரபரப்பாகும்!

தேமுதிகவுக்கு வாக்களிக்காத தேமுதிக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 


இன்றைய தேர்தலில் தேமுதிகவின் 7 அதிருப்தி எம்.எல்.ஏக்களும் தேமுதிகவின் அதிகாரப்பூர்வமாக வேட்பாளரை ஆதரிக்க வேண்டும் என்று அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் கடிதம் மூலம் கேட்டுக் கொண்டிருந்தார். நேற்று இரவு கூட அதிருப்தி எம்.எல்.ஏக்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாக்களிக்க வேண்டும் என்றும் தேமுதிக தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அத்துடன் கட்சியின் தேர்தல் ஏஜெண்டிடம் யாருக்கு வாக்களிக்கிறோம் என்பதை காட்ட வேண்டும்.. அப்படி கட்சியின் முடிவுக்கு மாறாக ஒரு எம்.எல்.ஏ. வாக்களித்தால் அந்த வாக்கு செல்லாததாகிவிடும் என்றெல்லாம் கூறப்பட்டது. 

ஆனால் தேமுதிக வேட்பாளர் இளங்கோவனுக்கு அக்கட்சியின் 22 எம்.எல்.ஏக்கள் மட்டுமே வாக்களித்திருக்கின்றனர். 

இதனால் தேமுதிகவின் அத்தனை முயற்சிகளையும் புறந்தள்ளிவிட்டு தேமுதிக அதிருப்தி எம்.எல்.ஏக்கள், அதிமுக அணியின் வேட்பாளர்களுக்கே வாக்களித்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to “ராஜ்யசபா தேர்தலில் அதிமுக அணி அமோக வெற்றி! கனிமொழிக்கு "செல்லாத" ஓட்டு போட்ட எம்.எல்.ஏ? தேமுதிகவுக்கு ஆப்பு வைத்த தே.மு.தி.க 7 எம்.எல்.ஏகள் ”

Post a Comment

Viewers

Flag Counter
All Rights Reserved Ramnad2Day | 7Tech Template by S.S.KarT