30 June 2013

சாதிக்கலவரத்தை தூண்டும் வகையில் எடுக்கப்பட 'அன்னக்கொடி' திரைப்படத்திற்கு தடை செய்யக்கோரி டைரக்டர் பாரதிராஜா வீடு முன் முற்றுகை

சாதிக்கலவரத்தை தூண்டும் வகையில் எடுக்கப்பட  
'அன்னக்கொடி' திரைப்படத்திற்கு 
 தடை செய்யக்கோரி டைரக்டர் பாரதிராஜா வீடு முன் முற்றுகை

தேனி, ஜூன் 30:-


'அன்னக்கொடி' திரைப்படத்தை தடை செய்யக்கோரி தேனியில் சினிமா டைரக்டர் பாரதிராஜாவின் வீட்டை அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

பிரபல சினிமா டைரக்டர் பாரதிராஜா இயக்கத்தில் தேனியை சேர்ந்த புதுமுக நடிகர் லஷ்மண், நடிகை கார்த்திகா ஆகியோர் நடித்த 'அன்னக்கொடி' என்ற திரைப்படம் நேற்று முன்தினம் தமிழகம் முழுவதும் வெளியானது.

அன்னக்கொடி திரைப்படத்தை கண்டித்தும், அந்த படத்துக்கு தடை விதிக்கக்கோரியும் தேனி மாவட்ட அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் நேற்று காலை தேனி என்.ஆர்.டி. ரோட்டில் உள்ள டைரக்டர் பாரதிராஜாவின் வீட்டை முற்றுகையிட வந்தனர்.

இதுபற்றி முன்கூட்டியே தகவல் அறிந்ததும் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாரதிராஜா வீட்டின் முன்பு பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டனர். பாரதிராஜாவின் வீட்டில் இருந்து 50 அடி தூரத்திற்கு முன்பே சாலையில் தடுப்புகள் வைத்து போலீசார் தடை ஏற்படுத்தினர்.

அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் சுமார் 200 பேர் பாரதிராஜாவின் வீட்டை நோக்கி ஊர்வலமாக வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். உடனே 'அன்னக்கொடி' திரைப்படத்தை தடை செய்ய வலியுறுத்தி அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தனர்.

பின்னர் அவர்கள் தேனி மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

'அன்னக்கொடி' திரைப்படம் சமூக நல்லிணக்கத்தை கெடுக்கும் விதமாகவும், சாதிக்கலவரத்தை தூண்டும் வகையிலும் எடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த படத்தில் இருவேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் காதலிப்பது போன்றும், கலப்பு திருமணம் செய்வது போன்றும், அடுத்தவர் மனைவியை கூட்டி வருவது போன்றும் காட்சி வருகிறது.

மேலும் 'ஆங்கிலேயர் நாட்டை விட்டு போய்விட்டார்கள், விஜயநகர பேரரசை சேர்ந்த தெலுங்கர்கள் இன்னும் இந்த நாட்டை விட்டு போகவில்லை' என்ற தேசிய ஒருமைப்பாட்டிற்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் காட்சி வருகிறது. எனவே இந்தபடத்தை தமிழக அரசு தடை செய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து பாரதிராஜா வீடு மற்றும் 'அன்னக்கொடி' திரைப்படம் திரையிடப்பட்டு உள்ள திரையரங்குகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

0 Responses to “சாதிக்கலவரத்தை தூண்டும் வகையில் எடுக்கப்பட 'அன்னக்கொடி' திரைப்படத்திற்கு தடை செய்யக்கோரி டைரக்டர் பாரதிராஜா வீடு முன் முற்றுகை”

Post a Comment

Viewers

Flag Counter
All Rights Reserved Ramnad2Day | 7Tech Template by S.S.KarT