28 June 2013

திமுக மற்றும் பாமகவின் முக்கிய தலைகள் அதிமுகவில் இணைந்தனர்

அதிமுகவில் இணைந்தனர் 

திமுகவின்  முன்னாள் துணைப் பொதுச் செயலாளர்  பரிதி இளம் வழுதி;

 பாமகவின் முன்னாள் பெட்ரோலிய துறை மத்திய இணை  அமைச்சர் பொன்னுச்சாமி!


சென்னை: 

                   திமுகவின் முன்னாள் துணைப் பொதுச் செயலாளர் பரிதி இளம் வழுதி இன்று அதிமுகவில் இணைந்தார். போயஸ்கார்டனுக்கு சென்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்த அவர் அதிமுக உறுப்பினராக இணைத்துக் கொண்டார். 

பரிதி, பொன்னுசாமி இருவருமே தலித் சமூகத்தைச் சேர்ந்த மூத்த தலைவர்களாவர்.

'திமுகவில் அபிமன்யு' என்று வர்ணிக்கப்பட்டவர் பரிதி இளம்வழுதி. கடந்த 2011ம் ஆண்டு அக்டோபர் மாதம் திமுக பொருளாளர் ஸ்டாலினுடன் ஏற்பட்ட மோதலாலும் மனக்கசப்பினாலும் திமுக துணைப் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து விலகினார்.

 பரிதி இளம்வழுதியின் ராஜினாமாவை அக்கட்சி ஏற்றது. அவருக்கு பதிலாக திமுக துணைப் பொதுச்செயலாளராக வி.பி.துரைசாமி நியமிக்கப்பட்டார். துணைச் பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்தாலும் திமுகவில் தாம் தொடர்ந்து நீடிப்பதாகவும், தலைமைச் செயற்குழு உறுப்பினராக தொடர்வதாகவும் கூறியிருந்தார் பரிதி.

 எனினும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கட்சியில் வேறு எந்த பொறுப்பும் வழங்கப்படவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த பரிதி, இன்று தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார். பரிதி இளம்வழுதி அதிமுகவில் இணைந்ததில் நாஞ்சில் சம்பத்தின் பங்கு முக்கிய பங்கு வகித்துள்ளதாக கூறப்படுகிறது. 

ராஜிவ் காந்தி மறைவுக்குப் பின் நடந்த தேர்தலில் திமுக தலைவர் கருணாநிதியும், பரிதி இளம்வழுதியும் மட்டுமே வென்றனர். கருணாநிதி தனது பதவியை ராஜினாமா செய்துவிட தனி ஆளாக சட்டசபையில் திமுகவின் மரியாதையைக் காப்பாற்றிக் காட்டியவர் பரிதி. மிகச் சிறந்த பேச்சாளரான இவர் சட்டசபை துணை சபாநாயகராகவும் செய்தித் துறை அமைச்சராகவும் இருந்தவர். 

ஆனால், சென்னை மாவட்ட திமுகவில் இவரை ஸ்டாலின் ஒதுக்க ஆரம்பித்தார். இதனால் மிகவும் மனம் நொந்து போய் இருந்தார் பரிதி. சமீபத்தில் சில திரைப்படங்களையும் தயாரித்துள்ளார். 


பாமக பொன்னுசாமி:

            இதேபோல் பாமகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன்னுச்சாமியும் இன்று போயஸ்கார்டன் சென்று ஜெயலலிதாவை சந்தித்து அதிமுகவில் இணைந்துள்ளார். 

பாமகவின் தலித் விரோத போக்கை எதிர்த்து சமீபத்தில் கட்சியில் இருந்து இவர் விலகியது குறிப்பிடத்தக்கது. இந் நிலையில் அதிமுகவில் இணைந்துள்ளார். பாமகவின் நிர்வாகக் குழு உறுப்பினரும் முன்னாள் மத்திய அமைச்சருமான பொன்னுசாமி ராமதாஸின் நிலைப்பாட்டை கடுமையாக விமர்சித்து கட்சியைவிட்டு மின்றி அரசியலைவிட்டே வெளியேறுவதாக கடந்த ஜனவரி மாதம் அறிவித்தார்.

 1999-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை 2 முறை சிதம்பரம் லோக்சபா தொகுதி எம்.பி.யாக பொன்னுசாமி இருந்தார். அவர் 1999 முதல் 2001 வரை பெட்ரோலிய துறை இணை அமைச்சராக பதவி வகித்தார். 

இந்த நிலையில் கட்சியில் சாதிய அரசியல் ஓங்குவதாக கூறிய பொன்னுச்சாமி அரசியலை விட்டே விலகுவதாக அறிவித்தார். 

இந்த நிலையில் இன்று அதிமுகவில் இணைந்துள்ளார். 

இது குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேசிய பொன்னுச்சாமி, எனக்கு அதிமுகவில் நீண்ட நாட்களாகவே அழைப்பு இருந்தது. காவிரி விஷயத்தில் தைரியமாக செயல்பட்டார் முதல்வர் ஜெயலலிதா. 

54 ஆண்டுகால டாக்டர் ராமதாஸ் உடனான நட்பிற்கு மதிப்பளிக்கிறேன். பதவி கொடுத்ததற்கு என்றைக்கும் நன்றியுடன் இருப்பேன் என்று கூறியுள்ளார். கட்சிக்கு இழப்பில்லை ஆனால் பொன்னுச்சாமி அதிமுகவில் இணைந்த காரணத்தினால் கட்சிக்கு எந்தவித இழப்பும் இல்லை என்று பாமக தலைவர் ஜி.கே.மணி கூறியுள்ளார்.

0 Responses to “திமுக மற்றும் பாமகவின் முக்கிய தலைகள் அதிமுகவில் இணைந்தனர் ”

Post a Comment

Viewers

Flag Counter
All Rights Reserved Ramnad2Day | 7Tech Template by S.S.KarT