31 July 2013

இந்தியாவின் 29வது மாநிலமாக உதயமாகிறது தெலங்கானா : இனி ஆந்திரா என்ற பெயரே இருக்காது

இந்தியாவின் 29வது மாநிலமாக உதயமாகிறது தெலங்கானா
இனி  ஆந்திரா என்ற பெயரே இருக்காது



புதுடெல்லி :  

               ஆந்திராவை பிரித்து புதிய தெலங்கானா மாநிலம் அமைக்க ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகள் ஒருமித்த ஆதரவு தெரிவித்துள்ளன. புதிய மாநிலத்துக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்குகிறது. நாட்டின் 29வது மாநிலமாக தெலங்கானா உருவாகிறது. ஆந்திராவில் ஐதராபாத், நிஜாமாபாத், ரங்காரெட்டி, உட்பட 10 மாவட்டங்களை பிரித்து தெலங்கானா மாநிலம் அமைக்ககோரி அப்பகுதியில் பல ஆண்டுகளாக போராட்டங்கள் நடந்து வந்தன. போராட்டங்கள் தீவிரமடைந்த நிலையில், புதிய மாநிலம் குறித்து ஆந்திர முதல்வர் கிரண் குமார் ரெட்டியுடன் காங்கிரஸ் மேலிடம் ஆலோசனை நடத்தியது.

தெலங்கானா அமைப்பதற்கு கிரண் குமார் எதிர்ப்பு தெரிவித்தார். எனினும், தெலங்கானாவை சேர்ந்த காங்கிரஸ் அமைச்சர்கள் ஆதரவு தெரிவித்தனர். கடந்த வெள்ளிக்கிழமை நடந்த காங்கிரஸ் உயர்நிலை குழு கூட்டத்தில் தெலங்கானா மாநிலம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. 

பிரதமர் மன்மோகன் சிங்கை நேற்று காலை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சந்தித்து தெலங்கானா மாநிலம் குறித்து ஆலோசனை நடத்தினார். ஐதராபாத்தில் இருந்து நேற்று காலை டெல்லி சென்ற முதல்வர் கிரண் குமார் ரெட்டியும் பிரதமரையும் சோனியாவையும் சந்தித்து பேசினார். இந்த விவகாரத்தில் கூட்டணி கட்சிகளின் ஆதரவை பெற காங்கிரஸ் விரும்பியது. அதன்படி, ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் டெல்லியில் நேற்று மாலை நடந்தது.

 இதில் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, ராஷ்ட்ரீய லோக்தள தலைவர் அஜித் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தெலங்கானா மாநிலம் அமைக்க ஒருமித்த ஆதரவு தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சோனியா தலைமையில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நடந்தது.

 இதில் அமைச்சர்கள் சுசில் குமார் ஷிண்டே, ப.சிதம்பரம், ஏ.கே.அந்தோணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தெலங்கானா மாநிலம் அமைப்பதற்கு காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்திலும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. பின்னர் பேட்டியளித்த காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் கூறியதாவது: ஆந்திராவை பிரித்து தெலங்கானா மாநிலம் அமைக்க ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஒருங்கிணைப்பு கூட்டத்திலும் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்திலும் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.

தெலங்கானா பகுதியை சேர்ந்த 10 மாவட்டங்கள் புதிய மாநிலத்தில் இடம் பெறும். அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஐதராபாத் இரு மாநிலங்களுக்கும் பொதுவான தலைநகராக இருக்கும். புதிய மாநிலம் அமைப்பது தொடர்பாக ஆந்திர சட்டப்பேரவையின் கருத்தை மத்திய அரசு கோரும். அதேநேரம், சட்டப் பேரவையின் ஆலோசனை மத்திய அரசை கட்டுப்படுத்தாது. புதிய மாநிலம் அமைப்பது தொடர்பாக நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட வேண்டும். தெலங்கானா மாநிலம் அமைக்க எடுக்கப்பட்ட முடிவு அவசரப்பட்டு எடுக்கப்பட்ட முடிவல்ல. எல்லா தரப்பினருடன் ஆலோசித்து எடுக்கப்பட்டது. தேர்தலை மனதில் கொண்டு இந்த முடிவை எடுக்கவில்லை. இவ்வாறு திக்விஜய் சிங் கூறினார்.

அமைச்சரவை இன்று ஒப்புதல்: மத்திய அமைச்சரவையின் சிறப்பு கூட்டம் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் இன்று கூடுகிறது. இதில் புதிய தெலங்கானா மாநிலம் அமைப்பது குறித்து விவாதிக்கப்பட்டு ஒப்புதல் வழங்கப்படுகிறது. 

29வது மாநிலம்: நாட்டில் ஏற்கனவே 28 மாநிலங்கள், 7 யூனியன் பிரதேசங்கள் உள்ளன. புதிய மாநிலம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து 29 மாநிலமாக தெலங்கானா உதயமாகிறது. ஆந்திராவில் இருந்து தெலங்கானா மாநிலம் பிரிந்தபின், ஆந்திரா என்ற பெயரே இருக்காது. பிரிக்கப்பட்ட 10 மாவட்டங்கள் போக மீதி உள்ள பகுதிகள் சீமாந்திரா என்று வழங்கப்படும்.

6 மாதங்கள்: புதிய மாநிலத்துக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கினாலும், தெலங்கானா மாநிலம் அமைப்பு ரீதியாக உருவாக 6 மாதங்கள் ஆகும். வரும் 5ம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் தெலங்கானா மாநிலத்துக்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும்.

பின்னர், மாநில வருவாய், நதிநீர் பங்கீடு, சொத்து மற்றும் கடன்கள் பிரிவினை குறித்து விவாதித்து முடிவு செய்ய தெலங்கானா,ராயலசீமா, கடலோர ஆந்திரா பகுதிகளை சேர்ந்த தலைவர்கள் கொண்ட கமிட்டியை பிரதமர் நியமிப்பார். இந்த நடைமுறைகள் முடிந்து அடுத்த ஆண்டு ஆரம்பத்தில்தான் தெலங்கானா மாநிலம் உருவாகும்.

ஆந்திராவின் 3 மண்டலங்களில் தெலங்கானாதான் பெரிய பகுதி. மாநிலத்தின் மொத்த வருவாயில் 60 சதவீதத்துக்கு மேல் தெலங்கானா பகுதியில் இருந்து அரசுக்கு கிடைக்கிறது. ஆந்திர மக்கள் தொகையில் 40% பேர் தெலங்கானாவில் உள்ளனர்.

தெலங்கானா மாநிலத்தில் இடம் பெறும் மாவட்டங்கள்

1. ஐதராபாத்
2. நிஜாமாபாத்
3. அடிலாபாத்
4. கரீம்நகர்
5. வாரங்கல்
6. கம்மம்
7. நலகொண்டா
8. மகபூப்நகர்
9. ரங்காரெட்டி
10. மேடக்

0 Responses to “இந்தியாவின் 29வது மாநிலமாக உதயமாகிறது தெலங்கானா : இனி ஆந்திரா என்ற பெயரே இருக்காது ”

Post a Comment

Viewers

Flag Counter
All Rights Reserved Ramnad2Day | 7Tech Template by S.S.KarT