22 November 2013

ஆந்திராவில் இன்று கரையை கடக்கும் ஹெலன் புயல்! கரையை கடக்கும் போது மணிக்கு 120 கி.மீ வேகத்தில் காற்று வீசும்...

ஆந்திராவில் இன்று கரையை கடக்கும் ஹெலன் புயல்!
கரையை கடக்கும் போது மணிக்கு 120 கி.மீ வேகத்தில் காற்று வீசும்...


ஹெலன் புயல் இன்று பிற்பகல் ஆந்திராவின் மசூலிப்பட்டினம் அருகே கரையை கடக்க உள்ளது. இதனையடுத்து அம்மாவட்டத்தின் கடலோர மாவட்ட மக்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். மசூலிப்பட்டினத்திற்கு கிழக்கு-தென் கிழக்கே மையம் கொண்டிருந்த ஹெலன் புயல், தற்போது மேற்கு-வடமேற்கு மற்றும் மேற்கு-தென்மேற்கு திசைகளில் மாறி மாறி நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

பிற்பகல் அல்லது மாலைக்குள் நெல்லூர்-மசூலிப்பட்டினம் இடையே ஹெலன் புயல் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக ஆந்திர கடலோர பகுதிகளில் 55 கிமீ முதல் 65 கி.மீ வேகத்தில் காற்று வீசி வருகிறது. காற்றின் வேகம் மெல்ல மெல்ல அதிகரித்து புயல் கரையை கடக்கும் போது காற்று 120 கி.மீ வேகத்தில் வீசும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடல் சீற்றம் கடுமையாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆந்திராவில் கடலோர மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்திற்கு பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனையடுத்து விசாகப்பட்டினம், நெல்லூர், கிருஷ்ணா, குண்டூர், கிழக்கு மற்றும் மேற்கு கோதாவரி, உள்ளிட்ட மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதோடு, தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

பேரிடர் மேலாண்மைக் குழுவினரும் அப்பகுதிகளுக்கு விரைந்துள்ளனர். இதனிடையே தென் தமிழகத்தின் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே போல வடதமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஆங்காங்கே மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

0 Responses to “ஆந்திராவில் இன்று கரையை கடக்கும் ஹெலன் புயல்! கரையை கடக்கும் போது மணிக்கு 120 கி.மீ வேகத்தில் காற்று வீசும்...”

Post a Comment

Viewers

Flag Counter
All Rights Reserved Ramnad2Day | 7Tech Template by S.S.KarT