27 November 2013

ஆருஷியை கொன்ற பெற்றோருக்கு ஆயுள் தண்டனை

ஆருஷியை கொன்ற பெற்றோருக்கு ஆயுள் தண்டனை



காஜியாபாத்: 

             நொய்டா மாணவி ஆருஷி கொலைவழக்கில், அவரது பெற்றோர்களான ராஜேஷ் தல்வார், நூபுர் தல்வார் ஆகியோருக்கு சிபிஐ நீதிமன்றம் நேற்று ஆயுள் தண்டனை விதித்தது. டெல்லியை அடுத்த நொய்டாவை சேர்ந்த சிறுமி ஆருஷி(14). இவர் கடந்த 2008ம் ஆண்டு மே 15ம் தேதி  இரவு அவரது வீட்டில் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டார். வீட்டு வேலைக்காரர் ஹேம்ராஜ்(45) இந்தக் கொலையை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். மறுநாள் வீட்டு மாடியில் ஹேம்ராஜ் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.


இதற்கு முன் பணியாற்றிய வேலைக்காரர்கள் மீது ஆருஷியின் பெற்றோரும், பிரபல பல் டாக்டர்களுமான ராஜேஷ் தல்வார், நூபுர் தல்வார் ஆகியோர் குற்றம் சுமத்தினர். ஆனால் ஆருஷி பெற்றோர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. ஆருஷி, ஹேம்ராஜ் இடையே இருந்த தவறான உறவு காரணமாக இருவரையும் டாக்டர் தம்பதியினர் கவுரவ கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் அவர்கள் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு டாக்டர் தம்பதிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது. அது எதிர்பார்த்த பலனை அளிக்கவில்லை. கொலை செய்ததாக முன்னாள் வேலைக்காரர்கள் மீது குற்றம் சுமத்திய சிபிஐ, டாக்டர் தம்பதியரை குற்றமற்றவர்கள் என தெரிவித்தது. பின்னர் தகுந்த ஆதாரங்கள் இல்லை என வேலைக்காரர்களும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். ஆருஷியின் மருத்துவ ஆதாரங்கள் சில மாற்றப்பட்டதால், இந்த வழக்கை விசாரித்த சிபிஐ குழுவை, அப்போதைய சிபிஐ டைரக்டர் அஸ்வின் குமார் மாற்றி அமைத்தார்.



புதிய குழுவினர் மீண்டும் விசாரணை நடத்தி தல்வார் தம்பதிக்கு எதிராக சில ஆதாரங்களையும், சாட்சியங்களையும் தாக்கல் செய்தனர். ஆனாலும் திடீர் திருப்பு முனையாக இந்த வழக்கை முடித்துக் கொள்வதாக சிபிஐ கடந்த 2010ம் ஆண்டு அறிவித்தது. இந்த கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி, சிபிஐ தாக்கல் செய்த சந்தர்ப்ப சூழ்நிலை ஆதாரங்களின்படி தல்வார் தம்பதி கொலை குற்றவாளிகள் எனவும், ஆதாரங்களை அழித்ததாக குற்றம் சுமத்தியும் வழக்கை தொடர்ந்து நடத்தும்படி கூறினார். இதை எதிர்த்து அலகாபாத் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தில் தல்வார் தம்பதி தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

5 ஆண்டுகளுக்கு மேலாக காஜியாபாத் சிபிஐ நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கில் இறுதி கட்ட விசாரணை முடிந்து நீதிபதி ஷாம் லால் நேற்று முன்தினம் தீர்ப்பளித்தார். இந்த இரட்டை கொலை வழக்கில் தல்வார் தம்பதி குற்றவாளிகள் என சந்தேகத்துக்க இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு பெற்றோர்கள்தான் சிறந்த பாதுகாவலர்கள். அந்த மனித இயல்பை மீறி தாயும், தந்தையும் தங்கள் சொந்த குழந்தையை கொலை செய்துள்ளனர். அதோடு மட்டும் அல்லாமல் ஆதாரங்களையும் அழித்துள்ளனர். போலீசில் தவறான எப்.ஐ.ஆர் பதிவு செய்த காரணத்துக்காவும் இந்திய தண்டனை சட்டத்தின் 203வது பிரிவின்படி ராஜேஷ் தல்வார் குற்றவாளி’’ என நீதிபதி கூறினார்.


 தண்டனை மீதான விவாதம் நேற்று நடந்தது. ஆருஷி மற்றும் வேலைக்காரர் ஹேம்ராஜ் ஆகியோர் மிக கொடூரமாக கொலை செய்யப்பட்டதால், தல்வார் தம்பதிக்கு மரண தண்டனை அளிக்கப்பட வேண்டும் என சிபிஐ தரப்பில் வாதிடப்பட்டது. ஆத்திரத்தில் நடந்த கொடூர சம்பவம் என்பதாலும், வலுவான ஆதாரம் எதுவும் இல்லை என்பதாலும் குறைந்தபட்ச தண்டனை அளிக்க வேண்டும் என தல்வார் தம்பதி வக்கீல்கள் வாதிட்டனர்.

இதையடுத்து தண்டனையை அறிவித்த சிபிஐ நீதிமன்ற நீதிபதி ஷாம் லால், ‘‘ஆருஷி-ஹேம்ராஜ்  இரட்டை கொலை வழக்கில் ராஜேஷ் தல்வார், நூபுர் தல்வார் ஆகியோருக்கு ஆயுள்தண்டனை அளிக்கப்படுகிறது. அதோடு ராஜேஷ் தல்வாருக்கு ரூ.17 ஆயிரமும், நூபுர் தல்வாருக்கு ரூ.15 ஆயிரமும் அபராதம் விதிக்கப்படுகிறது. மிகவும் அரிதான சம்பவத்தின் கீழ் இந்த குற்றம் வராததால் அவர்களுக்கு குறைந்தபட்ச தண்டனை அளிக்கப்படுகிறது’’ என்றார்.

இந்த தண்டனை குறித்து தல்வார் தம்பதியரின் வழக்கறிஞர் ரெபேக்கா கூறுகையில், ‘‘இந்த தீர்ப்பில் அநீதி இழைக்கப்பட்டுள்ளது. இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். சிபிஐ.யின் சூனிய நடவடிக்கையால் தல்வார் தம்பதி தண்டிக்கப்பட்டுள்ளனர். இது அதிகார துஷ்பிரயோகம்’’ என்றார்.

0 Responses to “ஆருஷியை கொன்ற பெற்றோருக்கு ஆயுள் தண்டனை”

Post a Comment

Viewers

Flag Counter
All Rights Reserved Ramnad2Day | 7Tech Template by S.S.KarT