26 November 2013

இன்று மும்பை தாக்குதல் நினைவு நாள் : மகாராஷ்டிராவில் பலத்த பாதுகாப்பு

இன்று மும்பை தாக்குதல் நினைவு நாள் : 
மகாராஷ்டிராவில் பலத்த பாதுகாப்பு


மும்பை: 


      இன்று மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய 5ம் ஆண்டு நினைவு நாள். இதையொட்டி, மகாராஷ்டிர மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி, பாகிஸ்தான் தீவிரவாதிகள் 10 பேர் மும்பையில் தாக்குதல் நடத்தினர். இதில் 166 பேர் கொல்லப்பட்டனர். 300க்கு மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இதில் தொடர்புடைய 9 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். உயிருடன் பிடிபட்ட கசாப் என்ற தீவிரவாதி, இந்திய சட்டப்படி நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு தூக்கில் போடப்பட்டான்.

இந்த தாக்குதலில் அமெரிக்கர்கள் சிலரும் கொல்லப்பட்டனர். இதில் தொடர்புடைய டேவிட் ஹெட்லி என்பவனை அமெரிக்க அரசு கைது செய்தது. அந்நாட்டு நீதிமன்றம் தண்டனை வழங்கியதை அடுத்து, அமெரிக்க சிறையில் ஹெட்லி அடைக்கப்பட்டுள்ளான். இன்று, மும்பை தாக்குதல் நடந்த 5வது ஆண்டு நினைவு நாள். இதையொட்டி, மாநில உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.பாட்டில் அளித்த பேட்டி:


கடந்த 2008ம் ஆண்டு நடந்த சம்பவம் போன்று இனி நடக்காது. யாராவது அப்படி தாக்குதல் நடத்தினால், கசாப்புக்கு ஏற்பட்ட கதிதான் ஏற்படும். மும்பையும், மகாராஷ்டிராவின் இதர பகுதிகளும் முழு பாதுகாப்புடன் இருக்கிறது. பாகிஸ்தானில் இருந்து அரபிக் கடல் வழியாக படகில் மும்பைக்கு தீவிரவாதிகள் வந்தனர். எனவே, கடல் வழி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அரபிக் கடல் வழியாக தீவிரவாதிகள் மகாராஷ்டிராவுக்குள் நுழைய முடியாது. அதேபோல், உள்நாட்டு தீவிரவாதிகளும் இனிமேல் இதுபோன்று தாக்குதல் நடத்த முடியாது.

மும்பை தாக்குதலை அடுத்து பாதுகாப்பை பலப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தனித்தனியாகவும், கூட்டாகவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றன. பாதுகாப்பு படை வீரர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. நவீன ஆயுதங்கள், தகவல் தொடர்பு கருவிகள், வாகனங்கள் போன்றவை வழங்கப்பட்டுள்ளன.
‘ஃபோர்ஸ் ஒன்’ என்ற அதிரடிப்படை உருவாக்கப்பட்டுள்ளது.

இதற்கான முகாம், கோரேகாவ் கிழக்கில் 96 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. இது, மத்திய அரசின் கமாண்டோ படைக்கு இணையானது. மும்பையில் எங்கு தாக்குதல் நடந்தாலும், இந்த அதிரடிப்படை 15 நிமிடங்களில் அங்கு சென்றுவிடும்.  இவ்வாறு அவர் கூறினார்.

எக்ஸ்ட்ரா தகவல்

மும்பை தாக்குதலுக்குபின் கடலில் ரோந்து பணியை மேற்கொள்ள 1000 வீரர்கள், 80 படகுகள் அடங்கிய ‘சாகர் பிரகாரி பால்’ என்ற படையை கடற்படை உருவாக்கியது.

0 Responses to “இன்று மும்பை தாக்குதல் நினைவு நாள் : மகாராஷ்டிராவில் பலத்த பாதுகாப்பு”

Post a Comment

Viewers

Flag Counter
All Rights Reserved Ramnad2Day | 7Tech Template by S.S.KarT