26 November 2013

தென் ஆப்ரிக்க சுற்றுப்பயணம் இந்திய அணியில் மீண்டும் ஜாகீர்

தென் ஆப்ரிக்க சுற்றுப்பயணம் இந்திய அணியில் மீண்டும் ஜாகீர்





வதோதரா: 

            தென் ஆப்ரிக்க அணியுடன் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ள இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அனுபவ வேகம் ஜாகீர் கான் (35), அணியில் மீண்டும் இடம் பிடித்துள்ளார். தொடக்க வீரர் கவுதம் கம்பீர் தேர்வு செய்யப்படவில்லை. அடுத்த மாதம் தென் ஆப்ரிக்கா செல்லும் இந்திய அணி 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த தொடர்களுக்கான இந்திய அணி வீரர்கள் தேர்வு, குஜராத் மாநிலம் வதோதராவில் நேற்று நடந்தது. சந்தீப் பட்டீல் தலைமையிலான தேர்வுக் குழுவினர், வீரர்களை தேர்வு செய்தனர்.

கூட்டத்துக்குப் பின்னர், கிரிக்கெட் வாரிய செயலர் சஞ்சய் பட்டேல் அணி விவரத்தை வெளியிட்டார். காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த அனுபவ வேகப் பந்துவீச்சாளர் ஜாகீர் கான், நீண்ட இடைவெளிக்குப் பிறகு அணியில் மீண்டும் இடம் பிடித்துள்ளார். பிசிசிஐ ஒப்பந்த வீரர்கள் பட்டியலில் இருந்து இவர் சமீபத்தில் நீக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. நடப்பு ரஞ்சி சீசனில் 3 போட்டியில் விளையாடிய அவர் 13 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

மற்ற அனுபவ வீரர்களான கவுதம் கம்பீர், வீரேந்திர சேவக், ஹர்பஜன் சிங் ஆகியோர் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டுள்ளனர். ரஞ்சி சீசனில் கணிசமாக ரன் குவித்தும், கம்பீருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. பரோடா பேட்ஸ்மேன் அம்பாதி ராயுடு டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிக்கான அணிகளில் இடம் பிடித்துள்ளார். விருத்திமான் சாஹா கூடுதல் விக்கெட் கீப்பராக சேர்க்கப்பட்டுள்ளார்.

மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் ஓய்வு பெற்றுள்ள நிலையில், இளம் வீரர்கள் அடங்கிய இந்திய அணிக்கு தென் ஆப்ரிக்க தொடர் மிகப் பெரிய சவாலாக இருக்கும். ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதல் 2 இடங்களில் உள்ள அணிகள் மோதும் இந்த தொடர் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

டெஸ்ட் அணி: எம்.எஸ்.டோனி (கேப்டன்/கீப்பர்), முரளி விஜய், ஷிகார் தவான், செதேஷ்வர் புஜாரா, விராத் கோஹ்லி, ரோகித் ஷர்மா, அஜிங்க்யா ரகானே, ஆர்.அஷ்வின், புவனேஷ்வர் குமார், உமேஷ் யாதவ், முகமது ஷமி, ரவீந்திர ஜடேஜா, ஜாகீர் கான், அம்பாதி ராயுடு, விருத்திமான் சாஹா (விக்கெட் கீப்பர்), இஷாந்த் ஷர்மா, பிரக்யான் ஓஜா.

ஒருநாள் அணி: எம்.எஸ்.டோனி (கேப்டன்/கீப்பர்), ஷிகார் தவான், விராத் கோஹ்லி, ரோகித் ஷர்மா, சுரேஷ் ரெய்னா, யுவராஜ் சிங், அஜிங்க்யா ரகானே, ஆர்.அஷ்வின், புவனேஷ்வர் குமார், ரவீந்திர ஜடேஜா, ஜாகீர் கான், அம்பாதி ராயுடு, இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ், முகமது ஷமி, மோகித் ஷர்மா, அமித் மிஷ்ரா.

அட்டவணை

இந்தியா - தென் ஆப்ரிக்க அணிகளிடையே நடக்க உள்ள ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டித் தொடருக்கான அட்டவணை விவரம்:


தேதி           போட்டி                   களம்
டிச. 5          முதல் ஒருநாள்    ஜோகன்னஸ்பர்க்
டிச. 8          2வது ஒருநாள்       டர்பன்
டிச. 11        3வது ஒருநாள்       செஞ்சுரியன்
டிச.14-15    பயிற்சி ஆட்டம்    பினோனி
டிச. 18-22   முதல் டெஸ்ட்     ஜோகன்னஸ்பர்க்
டிச. 26-30   2வது டெஸ்ட்       டர்பன்

0 Responses to “தென் ஆப்ரிக்க சுற்றுப்பயணம் இந்திய அணியில் மீண்டும் ஜாகீர்”

Post a Comment

Viewers

Flag Counter
All Rights Reserved Ramnad2Day | 7Tech Template by S.S.KarT