10 December 2013

விபத்தில் தமிழர் மரணம் எதிரொலி சிங்கப்பூரில் பயங்கர கலவரம் 24 தமிழர்கள் கைது

விபத்தில் தமிழர் மரணம் எதிரொலி 
சிங்கப்பூரில் பயங்கர கலவரம் 24 தமிழர்கள் கைது




சிங்கப்பூர்:

சிங்கப்பூரின் லிட்டில் இந்தியா பகுதியில் நடந்த விபத்தில் தமிழர் ஒருவர் இறந்ததை அடுத்து அங்கு கலவரம் மூண்டது. இதனால் சாலைகளில் வாகனங்கள் தீவைத்து கொளுத்தப்பட்டன. 24 தமிழர்கள் உள்பட 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிங்கப்பூரில் மக்கள் சட்டப்படி நடந்துகொள்வார்கள். அங்கு மக்கள் சட்டத்தை மீறிய செயல்கள், போராட்டம் நடத்துவது அரிதானது. அதிலும் சாலைகளில் வாகனங்கள் தீவைத்து எரிக்கப்படுவது சிங்கப்பூரில் அதிர்ச்சியான சம்பவம் ஆகும்.இங்கு, தெற்காசிய மக்கள் அதிக அளவில் வசிக்கும் லிட்டில் இந்தியா பகுதியில், பல உணவு விடுதிகளும், பப் மற்றும் கடைகள் உள்ளன. இங்கு ஞாயிறு அன்று பலதரப்பட்ட மக்கள் கூடுவது வழக்கம். ஞாயிறுக்கிழமை என்பதால் பலர் குடிபோதையில் இருந்துள்ளனர்.

நேற்று முன் தினம் இரவு (சிங்கப்பூர் நேரத்தில்) 9.20 க்கு நடந்த சாலை விபத்தில் 33 வயதான சக்திவேல் குமாரவேலு மீது தனியார் பஸ் மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து அங்கு பெரும் கலவரம் வெடித்தது. கலவரத்தை அடக்குவதற்காக வந்த போலீசாரின் 3 கார்கள் உட்பட 5 வாகனங்கள் தீவைத்து கொளுத்தப்பட்டன. 400க்கும் மேற்பட்ட கலவரக்காரர்களுடன் ஏற்பட்ட மோதலில் 10 போலீசார் உட்பட 18 பேர் படுகாயமடைந்தனர். 


கலவரத்தில் அந்த பகுதி முழுவதும் புயலால் பாதிக்கப்பட்டதுபோல இருந்தது.இதைத் தொடர்ந்து, 24 தமிழர்கள், 2 வங்க தேசத்தவர், சிங்கப்பூரில் நிரந்தர குடியுரிமை பெற்ற ஒருவர் உட்பட 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அனைவரும் 23 முதல் 45 வயதானவர்கள். இவர்கள் மீது கொடூர ஆயுதங்களுடன் சட்டவிரோதமாக கலகம் செய்தல் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், இவர்களுக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையோடு, கசையடி தண்டனையும் கிடைக்கும். அனைத்து பிரிவினரும் அமைதி காக்கவேண்டும் என்று சிங்கப்பூரில் உள்ள இந்திய தூதர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த கலவரம் குறித்து சிங்கப்பூரில் வசிக்கும் சமூக ஆர்வலர் கூறுகையில், ‘கடந்த 40 ஆண்டுகளில் இதுபோன்ற கலவரம் நடந்ததில்லை. 1969 ல் நடைபெற்ற இனக் கலவரத்தை அடுத்து இப்போதுதான் பெரும் கலவரம் நடந்துள்ளது. பொதுவாக சிங்கப்பூர் வேலைகளுக்கு வெளிநாட்டு ஆட்களையே நம்பியுள்ளது. இது வெறும் கலவரம் அல்ல, வேலை செய்பவர்களின் மனதில் நீண்ட நாள் அடக்கிவைத்திருந்த கோபத்தின் வெளிப்பாடுதான் இது என்றார்.


இந்த கலவரம் குறித்து பிரதமர் லீ ஹிசியான் லூங் கூறுகையில், கலவரங்கள் ஏற்பட என்ன காரணங்கள் இருந்தா லும், இதுபோன்ற மூர்க்கத்தனமான வன்முறைகள், குற்றச் செயல்களை மன்னிக்க முடியாது. இந்த கலவரத்தில் ஈடுபட்டவர்களை கண்டுபிடித்து சட்டப்படி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

இந்த சம்பவம் குறித்து காவல் துறை உயரதிகாரி கூறுகையில், ‘ இந்த சம்பவம் சகித்துக்கொள்ள முடியாதது. கலவரத்தில் ஈடுபடுவது, பொது சொத்துக்களை சேதப்படுத்துவது போன்ற பழக்கங்கள் சிங்கப்பூர் மக்களின் பழக்கமில்லை. 400க்கு மேற்பட்டவர்கள் கலவரத்தில் ஈடுபட்டு உள்ளனர். 

இதுவரை 27 தெற்காசிய தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த சம்பவத்துக்கு காரணமானவர்கள் சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள்’ என்று கூறினார்.

0 Responses to “விபத்தில் தமிழர் மரணம் எதிரொலி சிங்கப்பூரில் பயங்கர கலவரம் 24 தமிழர்கள் கைது”

Post a Comment

Viewers

Flag Counter
All Rights Reserved Ramnad2Day | 7Tech Template by S.S.KarT