2 December 2013

தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் 2 நாளுக்கு மழை நீடிக்கும்

தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் 2 நாளுக்கு மழை நீடிக்கும்


சென்னை:

        வங்கக் கடலில் மீண்டும் புயல் உருவாக வசதியாக குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதனால் தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வடகிழக்கு பருவமழை காலம் முடிவடைய இன்னும் ஒரு மாதம் உள்ளது. 

இதற்கிடையே பாய்லின், ஹெலன், லெகர் என வரிசையாக மூன்று புயல்கள் வங்கக் கடலில் உருவாகி தமிழகத்திற்கு மழை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவை வட மேற்கு திசையில் நகர்ந்து ஆந்திரா மற்றும் ஒடிசா கடலோரப் பகுதியில் கரை கடந்தன. இதனால் இந்த பருவமழை காலத்தில் பெய்ய வேண்டிய இயல்பு அளவுக்கு கூட மழை பெய்யவில்லை.

இந்நிலையில் வங்கக் கடலில் மீண்டும் புயல் உருவாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்னோட்டமாக வங்கக்கடலில் இரண்டு நாட்களுக்கு முன்பு இலங்கைக்கு கிழக்கே ஒரு காற்று சுழற்சி உருவானது. அது வலுப்பெற்று வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழக கடலோர பகுதியில் நிலை கொண்டுள்ளது.

இதனால் தென் தமிழகத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் மழை பெய்கிறது. அதிகபட்சமாக நேற்று திருச்செந்தூரில் 110 மிமீ மழை பெய்துள்ளது. ராமநாதபுரம் 60 மிமீ, சாத்தான்குளம் 50 மிமீ, மாமல்லபுரம் 40 மிமீ, சீர்காழி, திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, ஏற்காடு, கேளம்பாக்கம், மதுக்கூர் 30 மிமீ, புதுக்கோட்டை, பாம்பன், கல்பாக்கம், ஆர்.எஸ்.மங்கலம், கந்தர்வகோட்டை, கமுதி, நாங்குனேரி, காரைக்கால், உத்திரமேரூர், கொள்ளிடம் 20 மிமீ, ராமேஸ்வரம், பண்ருட்டி, பாபநாசம், ராதாபுரம், பாளையங்கோட்டை, தூத்துக்குடி, ஆடுதுறை, நாகப்பட்டினம், சிதம்பரம், எண்ணூர் 10 மிமீ மழை பெய்துள்ளது.

இந்நிலையில், வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மேலும் வலுவடைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இது வடமேற்கு திசையில் நகர்வதால் தமிழகம் புதுச்சேரி கடலோரப் பகுதியில் இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யும். கடலில் காற்றின் வேகம் மணிக்கு 55 முதல் 65 கிமீ வேகத்தில் இருக்கும் அதனால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர். 

இந்த காற்றழுத்தம் காரணமாக தமிழகம் புதுச்சேரி கடலோரப் பகுதியில் இன்று கனமழை பெய்யும்.  குறிப்பாக திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் அதிக அளவில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது

0 Responses to “தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் 2 நாளுக்கு மழை நீடிக்கும்”

Post a Comment

Viewers

Flag Counter
All Rights Reserved Ramnad2Day | 7Tech Template by S.S.KarT