8 December 2013

மத்திய பிரதேசத்தில் மீண்டும் பா.ஜனதா ஆட்சி சிவராஜ் சிங் சவுகான் 3–வது முறையாக முதல்–மந்திரி ஆகிறார்

மத்திய பிரதேசத்தில் மீண்டும் பா.ஜனதா ஆட்சி சிவராஜ் சிங் சவுகான் 3–வது முறையாக முதல்–மந்திரி ஆகிறார் 






போபால்:

மத்திய பிரதேசத்தில் பாரதீய ஜனதா மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. சிவராஜ் சிங் சவுகான் 3–வது முறையாக முதல்–மந்திரியாக பதவி ஏற்கிறார்.

ஓட்டு எண்ணிக்கை

மத்திய பிரதேச மாநிலத்தில் முதல்–மந்திரி சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் பாரதீய ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்குள்ள 230 சட்டசபை தொகுதிகளுக்கு கடந்த நவம்பர் 25–ந் தேதி தேர்தல் நடைபெற்றது. 70 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவாயின.

ஓட்டு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் இருந்தே பெரும்பாலான தொகுதிகளில் ஆளும் பாரதீய ஜனதா வேட்பாளர்களே முன்னணியில் இருந்தனர். இந்த முன்னணி கடைசி வரை நீடித்தது. ஏற்கனவே நடைபெற்ற கருத்துக்கணிப்புகள் மத்திய பிரதேசத்தில் பாரதீய ஜனதா ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் என தெரிவித்தன. அதை உறுதிப்படுத்தும் வகையில் தேர்தல் முடிவுகள் அமைந்தன.

பா.ஜனதா அமோக வெற்றி

இந்த மாநிலத்தில் மொத்தம் உள்ள 230 தொகுதிகளில் ஆளும் பாரதீய ஜனதா மூன்றில் இரண்டு பங்கு தொகுதிகளை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. அந்த கட்சி 161 தொகுதிகளில் வெற்றி பெற்று உள்ளது. கடந்த 2008–ம் ஆண்டில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதாவுக்கு 143 இடங்கள் கிடைத்தன. இந்த தேர்தலில் கூடுதலாக 18 இடங்கள் கிடைத்துள்ளன.

எதிர்கட்சியான காங்கிரசுக்கு இந்த தேர்தலில் 61 இடங்களே கிடைத்தன. கடந்த தேர்தலில் 71 இடங்களில் வெற்றி பெற்றது. பிற கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் 9 தொகுதிகளில் வெற்றி பெற்று உள்ளனர்.

3–வது முறையாக முதல்–மந்திரி

மத்திய பிரதேச மாநிலத்தில் பாரதீய ஜனதா தொடர்ச்சியாக 3 சட்டசபை தேர்தல்களில் ‘ஹாட்ரிக்’ வெற்றி பெற்று சாதனை படைத்து உள்ளது. 54 வயதான சிவராஜ் சிங் சவுகான் 3–வது முறையாக முதல்–மந்திரி ஆகிறார். பாரதீய ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூடி அவரை புதிய முதல்–மந்திரியாக தேர்ந்து எடுக்க இருக்கிறார்கள்.குஜராத் மாநிலத்தில் நரேந்திர மோடி தொடர்ந்து 3–வது முறையாக முதல்–மந்திரியாக பதவி வகிப்பது போல், மத்திய பிரதேசத்தில் சிவராஜ் சிங் சவுகானும் 3–வது முறையாக முதல்–மந்திரி ஆகிறார்.

சிவராஜ் சிங் சவுகான்


முதல்–மந்திரி சிவராஜ் சிங் சவுகான் புத்னி, விதிஷா ஆகிய இரு சட்டசபை தொகுதிகளில் போட்டியிட்டார். இரு தொகுதிகளிலுமே அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர்களை விட அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். விதிஷா தொகுதியில் அவர் காங்கிரஸ் வேட்பாளர் சசாங்க பார்கவாவை 16 ஆயிரத்து 966 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.தேர்தலில் போட்டியிட்ட வனத்துறை மந்திரி சர்தாஜ் சிங், பள்ளிக்கல்வி துறை மந்திரி நானாபாய் மகோத் உள்ளிட்ட மந்திரிகள் பலரும் வெற்றி பெற்றனர்.

மகிழ்ச்சி


தேர்தலில் பாரதீய ஜனதா மீண்டும் வெற்றி பெற்றது குறித்து முதல்–மந்திரி சிவராஜ் சிங் சவுகான் மிகுந்த மகிழ்ச்சி தெரிவித்தார். இது பாரதீய ஜனதா கட்சியின் கட்டுக்கோப்பான அமைப்புக்கும், தொண்டர்களின் உழைப்புக்கும், மக்களுக்கும் கிடைத்த வெற்றி என்றும், தனது இடத்தில் (முதல்–மந்திரி பதவி) யார் இருந்தாலும் பாரதீய ஜனதா வெற்றி பெற்று இருக்கும் என்றும் அவர் கூறினார்.கட்சியின் வெற்றிக்காக பாடுபட்ட தலைவர்கள் அத்வானி, ராஜ்நாத் சிங், நரேந்திர மோடி, உமா பாரதி, அனந்த குமார் (மாநில தேர்தல் பொறுப்பாளர்), நரேந்திர சிங் தேமாமா (மாநில தலைவர்) ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக கூறிய சிவராஜ் சிங் சவுகான், அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

காங்கிரஸ் ஏமாற்றம்

தேர்தல் முடிவு பற்றி கருத்து தெரிவித்த மத்திய மந்திரியும் காங்கிரஸ் பிரசார குழு தலைவருமான ஜோதிர் ஆதித்ய சிந்தியா கருத்து தெரிவிக்கையில்; “இதுபோன்று நடக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. தேர்தல் முடிவு எங்களுக்கு மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது’’ என்றார். காங்கிரஸ் கட்சியில் சீரமைப்பும், சுயபரிசோதனையும் செய்து கொள்ள வேண்டிய நேரம் இது என்றும் அவர் கூறினார். 

பாரதீய ஜனதாவுக்கு ஆதரவாக நரேந்திர மோடி செய்த பிரசாரம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.இந்த சட்டசபை தேர்தல் முடிவு பாராளுமன்ற தேர்தலில் எதிரொலிக்காது என்றும் ஜோதிர் ஆதித்ய சிந்தியா நம்பிக்கை தெரிவித்தார்.

0 Responses to “மத்திய பிரதேசத்தில் மீண்டும் பா.ஜனதா ஆட்சி சிவராஜ் சிங் சவுகான் 3–வது முறையாக முதல்–மந்திரி ஆகிறார் ”

Post a Comment

Viewers

Flag Counter
All Rights Reserved Ramnad2Day | 7Tech Template by S.S.KarT