18 May 2013

நாகராஜசோழன் எம்ஏ, எம்எல்ஏ (அமைதிப்படை- 2)- விமர்சனம்

நாகராஜசோழன் எம்ஏ, எம்எல்ஏ (அமைதிப்படை- 2)- விமர்சனம் 



நடிகர்கள்: சத்யராஜ், மணிவண்ணன், சீமான், கோமல் சர்மா, வர்ஷா, மிருதுளா, அன்ஷிபா, ரகுவண்ணன்

ஒளிப்பதிவு: டி சங்கர்

இசை: ஜேம்ஸ் வசந்தன்

பிஆர்ஓ: ஜான்

தயாரிப்பு: வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ்

எழுத்து- இயக்கம்: மணிவண்ணன்

இந்த நாடும் அரசியலும் நாட்டு மக்களும் நாளாக நாளாக எத்தனை மோசமான கட்டத்தை நோக்கி விரைந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை எள்ளலாகச் சொல்ல மணிவண்ணனைத் தவிர வேறு இயக்குநர்கள் இருக்கிறார்களா... சந்தேகம்தான்!

19 ஆண்டுகளுக்கு முன் அன்றைய அரசியலை அடித்துத் துவைத்து தொங்கவிட்டார் அமைதிப்படை மூலம். இத்தனை ஆண்டுகள் மீண்டும் இன்றைய அரசியலைக் கையிலெடுத்துள்ளார்.

வாரிசு அரசியல், கூட்டணி பேரங்கள், எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவது, சட்டசபையில் நாக்கை மடக்கி மிரட்டுவது, அரசியலை முழு வியாபாரமாக மாற்றும் ஆட்சியாளர்கள், ஒடுக்கப்பட்ட மக்கள் தொடர்ந்து நசுக்கப்படுவது, இயற்கை வளங்களை ஏகபோகமாக கொள்ளையடிப்பது என இன்றை நடப்புகளைச் சுற்றி ஒரு கதையை உருவாக்கியிருக்கிறார் மணிவண்ணன்.

தேங்காய்ப் பொறுக்கி அமாவாசையாக இருந்து, எம்எல்ஏவாக உயர்ந்து, துணை முதல்வராக அதிகாரத்தைப் பிடிக்கும் நாகராஜசோழன் எம்ஏ,எம்எல்ஏ (சத்யராஜ்), வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ஆதிவாசிகள் குடியிருக்கும் ஒரு பெரிய காட்டையே விற்க முயற்சிக்கிறார். அதற்கு தடையாக வரும் அத்தனை அதிகாரிகளையும் தீர்த்துக் கட்டுகிறார். சொந்த மருமகளே எதிராகக் கிளம்ப அவரையும் தீர்த்துக் கட்டத் துணிகிறார்.

ஒரு கட்டத்தில் எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் மொத்தப் பேரையும் விலைக்கு வாங்கி, முதல்வரை மிரட்டி, அந்த நாற்காலியையும் பிடித்துவிடுகிறார். முதல்வர் நாகராஜசோழனுக்கு எதிராகவும் ஆதிவாசிகளுக்கு ஆதரவாகவும் சீமான் தலைமையில் போராட்டம் வெடிக்கிறது. ஆனால் அதனை நசுக்குகிறது நாகராஜசோழன் அரசு. வேறு வழியின்றி போராட்டத்தை மவுனிக்கச் செய்துவிட்டு தலைமறைவாகிறது சீமான் குழு.

நாகராஜ சோழனை கைது செய்ய தீவிர முயற்சி எடுக்கிறது சிபிஐ. உடனே மாநிலம் முழுக்க கலவரமும் வன்முறையும் வெடிக்கிறது. நாகராஜ சோழன் கைதாகிறாரா? அவரது கேடு கெட்ட அரசியல் முடிவுக்கு வருகிறதா என்பது க்ளைமாக்ஸ்.

இந்தப் படத்தைப் பொறுத்தவரை எல்லோருமே இதன் முதல் பாகத்தை ஒப்பிட்டுப் பார்ப்பார்கள். அது தேவையற்றது. காரணம் இரண்டுமே கிட்டத்தட்ட வேறு வேறு படங்கள் மாதிரிதான்.

இன்றைக்கு உள்ள அரசியல் சூழல் மற்றும் சமூக அவலங்களை வைத்து இந்தப் படத்தைப் பார்த்தால், இந்த அளவு துணிவாக அத்தனை அரசியல் தலைவர்களையும் விமர்சிக்கும் துணிவு எந்த இயக்குநருக்கும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இதைப் பார்த்து மக்கள் திருந்திவிடுவார்கள் என்றும் மணிவண்ணன் எதிர்ப்பார்க்கவில்லை. ஆனால், 'நாட்டு நடப்பு இதானப்பா... இன்றைய அரசியல் திருட்டுத்தனங்களைத் தெரிஞ்சிக்கங்க.. நீங்க சிரிச்சிட்டுப் போனாலும் சரி, சிந்திக்காம போனாலும் சரி...,' என்ற தொனிதான் படம் முழுக்க தெரிகிறது!

படத்தின் ஹீரோ என்று பார்த்தாலும், அது மணிவண்ணன்தான். சத்யராஜை ஜஸ்ட் லைக் தட் ஓவர்டேக் செய்கிறார். வசனங்களை அவர் பிரயோகிக்கும் விதம், சூழல், காட்சி எல்லாமே... மணிவண்ணன் என்ற நல்ல எழுத்தாளரை முன்நிறுத்துகிறது.

ஒவ்வொரு வசனத்துக்கும் தியேட்டரில் கைத்தட்டல் பறக்கிறது.

சாம்பிளுக்கு சில:

சத்யராஜ்: என்ன மணியா... எழவெடுத்த தேர்தல் வருது... ஜெயிச்சி தொலைக்கணும்... என்ன பண்ணலாம்?

மணிவண்ணன்: மிக்சி கொடுத்தாச்சுங்ண்ணா... கிரண்டர் கொடுத்தாச்சுங்ண்ணா... டி.வி கொடுத்தாச்சுங்ண்ணா... ஆனா, ஜனங்க பாவம் கரண்டு இல்லாமதாங்ண்ணா கஷ்ட்டப்படுறாங்க. அதனால் வீட்டுக்கு ஒரு இலவச ஜெனரேட்டர் திட்டம்..!

**
எதிர்கட்சித்தலைவர்: என் கிட்ட 17 எம்.எல்.ஏ இருக்குறாங்க தலைவரே. அதுவும் போன தேர்தல்ல உங்ககூட கூட்டணிவச்சு ஜெய்யிச்சதுதான்..

சத்யராஜ்: அத வச்சுக்கிட்டு தானே சட்டசபையில நாக்கை மடிச்சி 'ஏய்' ன்னு சவுண்டு குடுக்கற!

**

சீமான்: மரமெல்லாம் வெட்டியாச்சுன்னா, மலை எங்க இருக்கும்.... மழை வந்து மண்ணெல்லாம் போய் வெறும் பாறதான் இருக்கும்
ஜெகன்: அப்போ பாறதான் மிஞ்சுமா
சீமான்: அதத்தான் வெட்டி வித்துடறாங்களே, கல்குவாரி கேள்விப்பட்டதில்ல
ஜெகன்: அப்போ, வெறும் தரதான் மிஞ்சுமா
சீமான்: அதையும் தான் ஃப்ளாட் போட்டு விட்துடறானுங்களே
**
சத்யராஜ்: அப்பனும் மகனும் சேர்ந்து கட்சி ஆரம்பிச்சது அந்தக் காலம்... புருசனும் பொண்டாட்டியும் கட்சி ஆரம்பிப்பது இந்தக் காலம்...
**
சத்யராஜ்: என்ன மணியா... யாரு இவ...

மணி: அட நம்ம பொள்ளாச்சி சரசுங்ணா... நாங்க கும்கின்னு கூப்புடுவோம்...

சத்யராஜ்: அதென்னய்யா கும்கி...

மணி: அது.. இந்த பெரிய யானைங்க, பழகாத முரட்டு யானைங்களை பழக்கி அனுப்பி வைக்கும்ல... அதானுங்ணா...
**
சத்யராஜுக்கு இரு வேடங்கள். அதில் அரசியல்வாதி நாகராஜசோழன் பின்னி எடுக்கிறார். நியாயமாக இந்த கேரக்டர் மீது கோபம் வரவேண்டும். ஆனால் சத்யராஜ் - மணிவண்ணன் லொள்ளு அந்தக் கேரக்டரை ரசிக்க வைத்துவிடுகிறது.

சிபிஐ அதிகாரியாகவும் சத்யராஜையே போட்டிருக்கின்றனர். அவ்வளவு நடிகர் பஞ்சமா... அல்லது பட்ஜெட்டா என்ற கேள்வி எழாமலில்லை.

மணிவண்ணனும் சத்யராஜுமே பிரதானமாய் நிற்பதால் மற்ற நடிகர்கள் பெரிதாக எடுபடவில்லை. அவர்கள் பாத்திரங்களைச் செய்திருக்கிறார்கள்.. அவ்வளவுதான்.

மலைவாழ் மக்களின் மண்ணுரிமையைக் காக்கும் தலைவனாக வருகிறார் சீமான். மக்களை போராடத் தயார்ப்படுத்தும் அவரது பேச்சுகளும், குறிப்பாக போரை மவுனிக்க அவர் சொல்லும் காரணங்களும் ஈழத்து சூழலை நினைவூட்டியது.

ரகுவண்ணன் இந்த வாய்ப்பை நன்றாகப் பயன்படுத்த முயன்றிருக்கிறார். அமைதிப்படை மூன்றாம் பாகத்துக்கு ரகுவண்ணனைத் தயார்படுத்துவது காட்சியை அமைத்திருக்கிறார் மணிவண்ணன்.

படத்தின் முக்கிய ப்ளஸ் டி சங்கரின் ஒளிப்பதிவு. அரசியல் பரபரப்பையும் வனாந்திரத்தில் நடக்கும் போரையும் அவர் கேமரா அத்தனை அர்த்தங்களுடன் பதிவு செய்துள்ளது.

படத்தின் முக்கிய குறை ஜேம்ஸ் வசந்தனின் இசை. அதை மன்னிப்பதற்கில்லை. இந்த மாதிரி படத்துக்கு என்ன மாதிரி இசை அமைக்க வேண்டும் என்பதை அவர் அமைதிப்படை முதல் பாகத்தைப் பார்த்து கற்றுக் கொண்டிருக்க வேண்டும். அந்த முதல் பாகத்திலிருந்து ஒரு காட்சியை க்ளைமாக்ஸ் முடிந்ததும் இந்தப் படத்தில் சேர்ந்திருப்பார் மணிவண்ணன். அதில் ஒலிக்கும் இசைக்கு கிடைக்கும் கைத்தட்டல்கள்தான் ஜேம்ஸ் வசந்தன்களுக்கான உண்மையான விமர்சனம்!

நாகராஜசோழன் நிரந்தரமாக சிறைக்குப் போனதை மணிவண்ணன் கொண்டாடும் விதமிருக்கே... அதுதான் 'அக்மார்க் மணிவண்ணன்' குறும்பு!

அரசியல் எள்ளலை அர்த்தத்துடன் ரசிக்க நாகராஜசோழன் எம்ஏ,எம்எல்ஏ பாருங்க!

0 Responses to “நாகராஜசோழன் எம்ஏ, எம்எல்ஏ (அமைதிப்படை- 2)- விமர்சனம் ”

Post a Comment

Viewers

Flag Counter
All Rights Reserved Ramnad2Day | 7Tech Template by S.S.KarT