18 May 2013

பூலான்தேவி வாழ்க்கை வரலாறு - 4(பூலான்தேவி "எம்.பி" ஆனார்)

கொள்ளைக்காரியாக இருந்து திருந்திய பூலான்தேவி "எம்.பி" ஆனார்!


கொள்ளைக்காரியாக இருந்து மனம் திருந்தி சரண் அடைந்த பூலான்தேவி, பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு, 2 முறை "எம்.பி" ஆனார். 1991-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. அந்த சமயத்தில் பூலான்தேவி சிறையில் இருந்தார். என்றாலும் சிறையில் இருந்தபடியே டெல்லி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டார்.

நடிகர் ராஜேஷ் கன்னாவை (காங்.) எதிர்த்து நின்றார். ஆனால் பூலான் தேவிக்கு வெற்றிக்கனி கிட்டவில்லை. தோல்வி அடைந்தார். இருப்பினும் அரசியல் மீது அவருக்கு ஒரு கண் இருந்தது. 1994-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சிறையில் இருந்து விடுதலை ஆனார்.

1994-ம் ஆண்டு ஜுலை மாதம் 5-ந்தேதி உமத்சிங் என்பவரை பூலான்தேவி திருமணம் செய்து இல்லற வாழ்வில் நுழைந்தார். சமூக சேவையில் அவருக்கு அதிக ஆர்வம் உண்டாகியது. இதனால் பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனுக்காக ஒரு சேவை அமைப்பை தொடங்கினார்.

பின்னர் முலாயம்சிங் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சியில் சேர்ந்தார். 1996-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேசத்தில் உள்ள மிர்சா பூர் தொகுதியில் சமாஜ்வாடி கட்சி வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். தாழ்த்தப்பட்ட மக்களுக்காக பாராளுமன்றத்தில் குரல் கொடுத்தார்.

பழைய வழக்குகள் பூலான் தேவிக்கு தொல்லை கொடுத்துக் கொண்டே இருந்தன. கோர்ட்டு படிக்கட்டுகளில் ஏறி இறங்க வேண்டியது இருந்தது. இதற்காக பாராளுமன்றம் முன்பு தர்ணா நடத்தினார். பிறகு 1999-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலிலும் அதே மிர்சாபூர் தொகுதியில் 2-வது முறையாக நின்று அபார வெற்றி பெற்றார்.

பூலான்தேவி 2,90,849 ஓட்டுகளும், அவரை எதிர்த்த பா.ஜனதா வேட்பாளருக்கு 84,476 ஓட்டுகளும் கிடைத்தன. அதாவது, பூலான்தேவி சுமார் 2 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் ஜெயித்தார். "நான் பூலான்தேவி" என்ற தலைப்பில் தனது வாழ்க்கை வரலாறு பற்றிய சுய சரிதையை பூலான்தேவி எழுதினார்.

"பாண்டிட் குயின்" சினிமா படம் வெளிவந்தபிறகு சர்வதேச அளவில் பேசப்பட்டார். 2001-ம் ஆண்டு மார்ச் மாதம் 8-ந்தேதி பூலான்தேவி தனது "மலரும் நினைவுகள்" குறித்து சிறப்பு பேட்டி அளித்தார்.

அதில் சில பகுதிகள்:-

கேள்வி:- நீங்கள் "பாண்டிட் குயின்" ("கொள்ளையர் அரசி") என்ற பட்டம் பெற்றது எப்படி?

பதில்:- நான் பூலான்தேவியாகத் தான் இருந்தேன். பத்திரிகைகள் தான் அந்த அடைமொழியை தந்தன.

கேள்வி:- "பாண்டிட் குயின்' சினிமா படம் உங்கள் வாழ்க்கையை கண்ணியமாக சித்தரித்ததா?

பதில்:- கண்ணியமான படம். இருந்தாலும் அதில் என்னை நிர்வாணமாக சித்தரித்ததை விரும்பவில்லை.

கேள்வி:- உங்கள் இளம் வயது திருமணம் பற்றி...?

பதில்:- எனக்கு 11 வயது இருக்கும். அந்த அறியாப் பருவத்தில் 40 வயதுக்காரருக்கு எனது பெற்றோர்கள் திருமணம் செய்து வைத்தார்கள். அவர் ஏற்கனவே 2 திருமணம் செய்தவர்.

எனக்குப் பிறகும் இன்னொரு பெண்ணை மணந்து கொண்டார். அந்த இளம் வயதில் எனது திருமணம் நடைபெறாமல் இருந்தால் எனது வாழ்க்கைப் பாதை வேறு வழியில் பயணித்து இருக்கும்.

கேள்வி:- அரசியல்வாதிகள் பெண்களுக்கு எதிராக குற்றம் செய்பவர்கள் என்று கருதுகிறீர்களா?

பதில்:- அப்படி நினைக்கவில்லை. அரசியல்வாதிகள் பெண்கள் உயர்வுக்காகவே பாடுபடுகிறார்கள். சில பெண்கள் தங்களது சுய நலத்துக்காக அரசியல் வாதிகளை சீரழித்து விடுகிறார்கள்.

கேள்வி:- உங்களை 40 பேர் கும்பல் கற்பழித்ததா?

பதில்:- கிராமப்புற வாழ்க்கையில் இது எல்லாம் ஒரு பெண்ணுக்கு சாதாரணமானது.

கேள்வி:- சாம்பல் பள்ளத்தாக்கில் இன்னும் கொள்ளை நடைபெறுகிறது உண்மையா?

பதில்:- ஆமாம். அது உண்மை. வறுமையால் இந்த சம்பவங்கள் நடைபெறுகின்றன. அவர்களின் முன்னேற்றத்துக்கு அரசு பாடு படவேண்டும். அப்படி நடந்தால் மட்டுமே இந்த குற்றங்கள் குறையும். இவ்வாறு பூலான்தேவி கூறியிருந்தார். "எம்.பி"யாக இருந்ததால் பூலான்தேவி டெல்லியில் தனக்கு ஒதுக்கப்பட்ட வீட்டில் குடியிருந்து வந்தார்.

0 Responses to “ பூலான்தேவி வாழ்க்கை வரலாறு - 4(பூலான்தேவி "எம்.பி" ஆனார்)”

Post a Comment

Viewers

Flag Counter
All Rights Reserved Ramnad2Day | 7Tech Template by S.S.KarT