17 May 2013

பூலான்தேவி வாழ்க்கை வரலாறு - 3 (பூலான்தேவி விடுதலை)

11 ஆண்டு சிறை வாசத்துக்குப்பின் பூலான்தேவி விடுதலை



                 பல கொலை, கொள்ளைகளில் ஈடுபட்ட பூலான்தேவி 11 ஆண்டுகளுக்கு மேலாக ஜெயில் தண்டனை அனுபவித்ததும் வழக்கு விசாரணையில் தாமதம் ஏற்பட்டு வந்ததால் தன்னை விடுதலை செய்யவேண்டும் என்று பூலான்தேவி சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்து இருந்தாள்.

இதற்கிடையில் உத்தரபிரதேசத்தில் பதவி ஏற்ற முலாயம்சிங் யாதவ் தலைமையிலான கூட்டணி அரசு, பூலான்தேவிக்கு எதிரான வழக்குகளை வாபஸ் பெற்றது. மத்தியபிரதேச மாநிலத்திலும் அவள் சம்பந்தப்பட்ட வழக்குகள் எதுவும் நிலுவையில் இல்லை.

இந்த சூழ்நிலையில் பூலான் தேவியை பரோலில் விடுதலை செய்து சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் 18_2_1994 அன்று உத்தரவிட்டனர். விடுதலையாகும் பூலான் தேவிக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கவேண்டும் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டு இருந்தனர்.

சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுப்படி 19_2_1994 காலை 10_50 மணிக்கு பூலான்தேவி டெல்லி தலைமை மெட்ரோ பாலிட்டன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டாள். மாஜிஸ்திரேட்டு ஓ.பி.காக்னே ரூ.50 ஆயிரத்துக்கு சொந்த ஜாமீனில் பூலான்தேவியை விடுதலை செய்தார். 20 நிமிடத்தில் கோர்ட்டு நடவடிக்கைகள் முடிந்து 11_10 மணிக்கு பூலான்தேவி மலர்ந்த முகத்துடன் கோர்ட்டை விட்டு வெளியே வந்தாள்.

11 ஆண்டு கால சிறை வாசத்துக்குப்பின் “சுதந்திர பறவை”யாக வெளியே வந்த பூலான்தேவியை பார்த்ததும் கோர்ட்டுக்கு வெளியே திரண்டு இருந்த நூற்றுக்கணக்கான பேர் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். சிலர் அவளை வாழ்த்தி கோஷங்களை எழுப்பினார்கள்.

வழக்கமாக கொள்ளைக்காரிகள் அணியும் உடைகளுக்கு மாறாக, சேலை அணிந்து புதிய தோற்றத்துடன் காணப்பட்ட பூலான்தேவி கூட்டத்தினரை நோக்கி திரும்பி, விடுதலை அடைந்ததில் மகிழ்ச்சி அடைவதாக உரத்த குரலில் கூறினாள்.

பின்னர் அங்கிருந்து வடக்கு டெல்லியில் பழைய குப்தா காலனியில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பூலான்தேவி அழைத்து செல்லப்பட்டாள்.

பூலான்தேவி சரண் அடைந்தபோது, 8 ஆண்டுகளில் விடுதலை செய்து விடுவதாக அரசு உறுதி அளித்து இருந்தது. ஆனால், 3 ஆண்டுகள் தாமதம் ஏற்பட்டு, 11 ஆண்டு சிறை வாசத்திற்குப்பின் விடுதலை செய்யப்பட்டாள். அப்போது அவளுகக்கு வயது 37.

கான்பூர் அருகே தாகூர் இனத்தைச் சேர்ந்த 22 பேர் படுகொலை செய்யப்பட்டதற்கும், தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று பூலான்தேவி மறுத்தாள். இந்த பயங்கர படுகொலை நடந்தபோது தான் பெட்வா நதிக்கரையில் இருந்ததாகவும் அவள் கூறினாள்.

பூலான்தேவி கோர்ட்டுக்கு வந்தபோது விதிமுறைகளுக்கு மாறாக வெளிநாட்டு நிருபர்களும் வந்திருந்து கோர்ட்டு நடவடிக்கைள் பற்றி குறிப்பெடுத்துக்கொண்டு இருந்தனர். கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக, கோர்ட்டு கதவுகளை போலீசார் மூடி வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

கோர்ட்டில் இருந்து வெளியே வந்த பூலான்தேவி “எனக்கு தற்போது உடல் நிலை சரியில்லை. சதை வளர்ச்சியால் ஏற்பட்ட கட்டிக்கு சிகிச்சை பெறப்போகிறேன்” என்று கூறினாள்.

ஆனால் அவளது உறவினர் ஹர்பூர்சிங் என்பவர் கூறும்போது, “பூலான்தேவி விடுதலைக்கு காரணமான முலாயம்சிங் யாதவின் சமாஜ்வாடி ஜனதா கட்சியில் அவரை சேர்ப்பதற்கு முயற்சி எடுப்பேன்” என்று தெரிவித்தார். பூலான்தேவி அரசியலில் குதிக்கப் போவதாக பரவலாக பேசப்பட்டு வந்தது.

இதுகுறித்து பூலான்தேவியை நிருபர்கள் பேட்டி கண்டனர். “அரசியலில் ஈடுபடமாட்டேன்” என்று அவள் மறுத்தாள். “நான் பெண்களின் முன்னேற்றத்துக்காக பணியாற்றப் போகிறேன். இதற்காக அரசியலில் ஈடுபட வேண்டிய அவசியம் இல்லை” என்று பூலான்தேவி கூறினாள்.

37 வயதான பூலான்தேவியை திருமணம் செய்து கொள்ள அவளது இனத்தைச் சேர்ந்த பலர் முன்வந்தனர். இதுபற்றி பூலான்தேவியிடம் கேட்டபோது, திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை என்றாள்.

“13 ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் எல்லாம் எங்கு போனார்கள்” என்று அவள் திருப்பிக் கேட்டாள். “சினிமாவில் நடிப்பீர்களா?” என்று கேட்டதற்கு “அப்படி எதுவும் திட்டம் இல்லை” என்று கூறிய பூலான்தேவி “நான் அமிதாப்பச்சனின் ரசிகை” என்று மட்டும் கூறினாள்.

“என்னை பரோலில் விடுதலை செய்ய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்ட அன்று இரவு எனக்கு மகிழ்ச்சியால் தூக்கமே வரவில்லை” என்றும் பூலான்தேவி குறிப்பிட்டாள். டெல்லி ஜெயில் போலீஸ் “ஐ.ஜி”யாக இருந்த கிரன்பெடியை பூலான்தேவி மிகவும் பாராட்டினாள். “ஜெயில் கைதிகளை கிரன்பெடி மிகவும் நன்றாக கவனித்தார்.

அவர் ஜெயில் “ஐ.ஜி.” ஆன பிறகு கைதிகளின் வாழ்க்கை நிலை உயர்ந்தது. திகார் ஜெயிலில் கைதிகளுக்கு நல்ல உணவு வழங்கப்பட்டது என்றும் கூறினாள்.

தேவி, 1983_ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12_ந்தேதி மத்தியபிரதேசத்தில் அப்போதைய முதல்_மந்திரி அர்ஜூன்சிங் முன்னிலையில் சரண் அடைந்தாள். முதலில் குவாலியர் ஜெயிலில் பூலான்தேவி அடைக்கப்பட்டாள். பின்னர் புற்று நோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக டெல்லி திகார் ஜெயிலுக்கு மாற்றப்பட்டாள்.

0 Responses to “ பூலான்தேவி வாழ்க்கை வரலாறு - 3 (பூலான்தேவி விடுதலை)”

Post a Comment

Viewers

Flag Counter
All Rights Reserved Ramnad2Day | 7Tech Template by S.S.KarT