27 May 2013

4 திருமணம் செய்த கோவை ராணுவ வீரர்: மனைவிகள் கலெக்டரிடம் கண்ணீர் புகார்

4 திருமணம் செய்த கோவை ராணுவ வீரர்: 
மனைவிகள் கலெக்டரிடம் கண்ணீர் புகார்



கோவை:

கோவை பெரியநாயக்கன் பாளையம் புதூர் பகுதியை சேர்ந்தவர் பிலிப் ஜோசப் (வயது 33). ராணுவத்தில் சமையல்காரராக வேலைப் பார்த்து வருகிறார். தற்போது டெல்லியில் பணியாற்றி வருகிறார்.

சமையல்காரராக உள்ள பிலிப் ஜோசப் ராணுவத்தில் அவில்தாராக உள்ளேன் என்று கூறி முதலில் ஒரு பெண்ணை திருமணம் செய்தார். கணவனுக்கும், மனைவிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு மற்றும் மாமியார்- நாத்தனார் கொடுமையைத் தொடர்ந்து முதல் மனைவி பிரிந்து சென்றுவிட்டார்.

இந்த நிலையில் கடந்த 2006-ம் ஆண்டு மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த புஷ்பலதா என்ற பெண்ணை பிலிப் ஜோசப் திருமணம் செய்தார். அவரது குடும்பத்தினரிடமும் நான் ராணுவத்தில் அவில்தாராக உள்ளேன் என்று கூறியிருக்கிறார். திருமண விடுமுறை முடிந்ததும் பிலிப் ஜோசப் வேலைக்கு சென்றுவிட்டார். அடுத்த கட்டமாக பிலிப் ஜோசப்பின் தாயார் மேரியும், சகோதரி உஷாவும் சேர்ந்து கொடுமைப்படுத்த தொடங்கினார்கள். மேலும் நகையை பறித்துக் கொண்டு கர்ப்பிணியாக இருந்த புஷ்பலதாவை அடித்து விரட்டி விட்டனர். தற்போது 7 வயதில் புஷ்பலதாவுக்கு ஒரு குழந்தை உள்ளது.

தவறான தகவல்களை கூறி ஏமாற்றி திருமணம் செய்வதில் வல்லவரான பிலிப்ஜோசப் 3-வது திருமணத்துக்கு வலை வீசினார். அவர் வீசிய வலையில் சிக்கியது கேரளாவைச் சேர்ந்த நர்சு ரம்யா. பிலிப் ஜோசப்புக்கும்- ரம்யாவுக்கும் கடந்த 2010-ல் திருமணம் நடந்தது. 1 1/2 வருடமாக பிலிப் ஜோசப் எந்தவித பிரச்சினையும் இல்லாமல் ரம்யாவுடன் குடும்பம் நடத்தினார். அவர்களது மகிழ்ச்சியான வாழ்வுக்கு சாட்சியாக 2 குழந்தைகள் உள்ளனர். அதன் பின்னர் ரம்யாவுடனான தொடர்பை துண்டிக்க நினைத்தார். அதற்காக தனது தாயாரையும், சகோதரியையும் ஏவி விட்டார்.

அவர்களும் தங்கள் பாணியில் ரம்யாவை கொடுமைப் படுத்தினார்கள். நகையை பறித்துக்கொண்டு ரம்யாவை விரட்டி விட்டனர். தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து போலீசில் புகார் செய்தார். புகார் மனு மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனத்தெரிகிறது. ரம்யா பிரிந்து சென்றதைத்தொடர்ந்து பிலிப்ஜோசப் அடுத்தகட்டமாக காதல் கணையை வீசத்தொடங்கினார். அதில் சிக்கியது கோவை ராமநாதபுரத்தை சேர்ந்த பட்டதாரிப் பெண் பிரேமா. கடந்த பிப்ரவரி மாதம் இவர்களது திருமணம் நடந்தது.

இந்த நிலையில் விடுமுறை முடிந்ததும் பிலிப் ஜோசப் மீண்டும் வேலைக்கு சென்றுவிட்டார். வழக்கம்போல் பிலிப் ஜோசப்பின் தாயாரும், சகோதரியும் தங்களது வேலையை காட்டத் தொடங்கினார்கள். பிரேமாவை கொடுமைப்படுத்தி நகைகள் மற்றும் அவரது சான்றிதழ்களை பறித்துக்கொண்டு விரட்டிவிட்டனர். இந்த நிலையில்தான் பிலிப்ஜோசப் திருமண மோசடி மன்னன் என்ற விவரம் இவர்களுக்கு தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து 3 பேரும் ஒன்று சேர்ந்து இன்று கலெக்டர் அலுவலகத்துக்கு புகார் மனு கொடுக்க வந்தனர். அந்த மனுவில்தான் இந்த விவரங்களை எல்லாம் கூறியுள்ளனர். திருமண மோசடியில் ஏமாந்த 3 பெண்களும் ஒரே நேரத்தில் கலெக்டர் அலுவலகத்தக்கு புகார் மனு கொடுக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

0 Responses to “4 திருமணம் செய்த கோவை ராணுவ வீரர்: மனைவிகள் கலெக்டரிடம் கண்ணீர் புகார்”

Post a Comment

Viewers

Flag Counter
All Rights Reserved Ramnad2Day | 7Tech Template by S.S.KarT