14 May 2013

மெட்ரோ ரெயில்: 28-ந்தேதி சென்னை வருகிறது

கோயம்பேடு-பரங்கிமலை இடையே ஓடும் மெட்ரோ ரெயில் 28-ந்தேதி சென்னை வருகிறது




சென்னை கோயம்பேடு-பரங்கிமலை இடையே மெட்ரோ ரெயில் இந்த ஆண்டு இறுதியில் ஓட தொடங்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இந்த வழித்தடத்தில் உள்ள பெரும்பாலான பணிகள் நிறைவடைந்துள்ளன. கோயம்பேடு ரெயில் நிலைய கட்டுமான பணிகள் முடிந்து விட்டன. உள்பகுதியில் வேலை நடந்து வருகிறது.

மெட்ரோ ரெயில் பெட்டிகள் தயாரிப்பு பணிகள் பிரேசில் நாட்டில் லாபா நகரில் நடந்து வருகிறது. முதற்கட்டமாக 4 பெட்டிகள் கொண்ட ஒரு மெட்ரோ ரெயில் தயாரிக்கப்பட்டுள்ளன.

இந்த பெட்டிகளை ஆய்வு செய்ய சென்னை மெட்ரோ ரெயில் அதிகாரிகள் குழுவினர் பிரேசில் சென்றனர். இந்த குழுவினர் பெட்டியின் எடை மற்றும் மழைக் காலங்களில் பெட்டியின் நிலை ஆகியவற்றை பரிசோதித்தனர். முழுவதுமாக ஆய்வு செய்த பிறகு பெட்டியின் தரத்துக்கு அதிகாரிகள் உத்தரவாதம் அளித்தனர்.

அதை தொடர்ந்து கடந்த மாதம் 28-ந்தேதி 4 பெட்டிகள் கொண்ட மெட்ரோ ரெயில் கப்பலில் ஏற்றப்பட்டு சென்னைக்கு புறப்பட்டது. அந்த கப்பல் வருகிற 28-ந்தேதி சென்னை துறைமுகத்தை வந்தடைகிறது.

சென்னையில் 4 பெட்டிகள் கொண்ட 44 மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட உள்ளது. வருகிற ஜூன் மாதத்துக்கு பிறகு அடுத்தடுத்து 9 ரெயில்கள் சென்னை வந்து சேரும்.

மெட்ரோ ரெயில் மேம்பாலம் மற்றும் சுரங்கம் வாயிலாக செல்வதால் பெட்டிகள் முழுவதும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டு இருக்கும். கதவுகள் தானாகவே திறந்து மூடும் வகையில் தானியங்கி கதவுகளாக அமைக்கப் பட்டிருக்கும்.

ரெயில் பெட்டிகளை தயாரிக்கும் பிரேசில் நிறுவனத்தின் துணை நிறுவனம் அல்ஸ்தோம் ஆந்திரமாநிலம் தடா அருகே உள்ள ஸ்ரீசிட்டியில் அமைந்துள்ளது. இங்கு 33 ரெயில்களுக்கான 132 பெட்டிகள் தயார் செய்யப்படும். வருகிற செப்டம்பர் மாதம் வெள்ளோட்டம் விட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முற்றிலும் குளிர்சாதன வசதி கொண்ட மெட்ரோ ரெயிலுக்கான கட்டணம் நிர்ணயிப்பதற்காக அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் மாநகர போக்குவரத்து பஸ் கட்டணம், மின்சார ரெயில் கட்டணம் ஆகியவற்றை அடிபடையாக கொண்டு கட்டணத்தை நிர்ணயிப்பது பற்றி ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

டெல்லி மெட்ரோ ரெயிலில் நடைமுறையில் இருப்பது போல் குறைந்த பட்ச கட்டணமாக முதல் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.8-ம், 2 முதல் 4 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.10-ம், 4 முதல் 6 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.11-ம் அதிகபட்சமாக ரூ.23-ம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2 வருடங்களுக்கு ஒரு முறை 5 சதவீத கட்டண உயர்வுக்கும் டெல்லி மெட்ரோ ரெயில் கட்டண பரிந்துரை குழு பரிந்துரைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கோயம்பேடு-பரங்கிமலை மெட்ரோ ரெயில் ஓட தொடங்கியதும் தினசரி 6.6 லட்சம் பயணிகள் பயணம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மெட்ரோ ரெயில் பணிகள் முழுவதும் முடிந்து ரெயில்கள் இயங்கும் போது 2026-27-ம் ஆண்டில் தினசரி ரெயில் பயணிகள் எண்ணிக்கை 12.87 லட்சமாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

0 Responses to “மெட்ரோ ரெயில்: 28-ந்தேதி சென்னை வருகிறது”

Post a Comment

Viewers

Flag Counter
All Rights Reserved Ramnad2Day | 7Tech Template by S.S.KarT