19 June 2013

புதுக்கோட்டை அருகே பள்ளிக்கு மினி வேனில் லிப்ட் கேட்டு சென்ற 8 மாணவர்கள் நசுங்கி பலி

புதுக்கோட்டை அருகே பள்ளிக்கு 

மினி வேனில் லிப்ட் கேட்டு  சென்ற  

8 மாணவர்கள் நசுங்கி பலி
புதுக்கோட்டை: 
                                       புதுக்கோட்டை அருகே இன்று காலை வேன் மீது தனியார் பஸ் மோதியதில் 8 மாணவர்களும், டிரைவரும் அந்த இடத்திலேயே பலியாயினர். 3 பேர் படுகாயம் அடைந்தனர். பால் வேனில் லிப்ட் கேட்டு பள்ளிக்கு சென்றபோது இந்த சோக சம்பவம் நடந்துள்ளது. 

புதுக்கோட்டை மாவட்டம் வல்லத்திராகோட்டையில் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி உள்ளது. அந்த பகுதியை சுற்றியுள்ள பல கிராமங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் பள்ளியில் படித்து வருகின்றனர். காலை, மாலை நேரத்தில் போதிய பஸ் வசதி இல்லாததால் மாணவ, மாணவிகள் அந்த வழியாக செல்லும் வேன் உள்ளிட்ட வாகனங்களில் லிப்ட் கேட்டு செல்வது வழக்கம். விஜயரகுநாதபுரத்தில் இருந்து இன்று காலை 9 மாணவர்கள் பள்ளிக்கு புறப்பட்டனர். அப்போது அந்த ஊரில் இருந்து காலி பால் கேன்களை ஏற்றிக்கொண்டு வல்லத்திராக்கோட்டைக்கு மினி வேன் சென்றது. அதில் மாணவர்கள் லிப்ட் கேட்டு ஏறிக் கொண்டனர். 

காலை 9 மணியளவில் பூவரசக்குடியை கடந்து அழகம்மாள்புரம் என்ற இடத்தில் புதுக்கோட்டை செல்லும் மெயின் ரோட்டில் வேன் ஏறியது. அப்போது அறந்தாங்கியில் இருந்து புதுக்கோட்டைக்கு வேகமாக தனியார் பஸ் வந்தது. சர்வீஸ் ரோட்டில் இருந்து மெயின் ரோட்டுக்கு பால் வேன் ஏறுவதை பஸ் டிரைவர் கவனிக்கவில்லை. கண்ணிமைக்கும் நேரத்தில் பால் வேன் மீது பஸ் பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் சாலையோர பள்ளத்தில் வேன் பாய்ந்தது. வேனின் முன்பகுதி முழுவதும் நொறுங்கியது. டிரைவர் மதவள்ளிக்காடு ஆறுமுகம் அந்த இடத்திலேயே இறந்தார். 
வேனில் இருந்த மாணவர்கள் மதியழகன், விஷ்ணு, சத்யா, அருண்குமார், மணிகண்டன், சிவக்குமார், நாராயணசாமி ஆகியோர் தூக்கி வீசப்பட்டு அந்த இடத்திலேயே இறந்தனர். 

இவர்களில் 
மதியழகன், விஷ்ணு, சத்யா ஆகியோர் பிளஸ் 2வும், 
அருண்குமார், மணிகண்டன், நாராயணசாமி ஆகியோர் 9-ம் வகுப்பும்
சிவக்குமார் 6-ம் வகுப்பும் 
படித்து வந்தனர்.

விக்னேஷ் என்ற மணிகண்டன், ராஜேஷ்குமார் ஆகிய 2 மாணவர்களும், டிரைவர் அருகில் அமர்ந்திருந்த தியாகராஜன் (50) என்பவரும் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். 

அந்த வழியாக சென்றவர்கள் விபத்தை பார்த்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து பொதுமக்கள் உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்களை மீட்டு உடனடியாக ஆம்புலன்சில் புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

 2 மாணவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் மேல்சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பலியானவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. விபத்து நடந்த இடத்தில் மாணவர்களின் புத்தகங்கள், டிபன் பாக்ஸ்கள் சிதறிக் கிடந்தன.

விபத்து குறித்து தகவல் அறிந்ததும் மாணவர்களின் பெற்றோரும் கிராம மக்களும் பதறியடித்து ஓடிவந்தனர். அந்த வழியாக வந்த வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தினர். பின்னர் மறியலிலும் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் சமாதானப்படுத்தினர். 

போலீஸ் மற்றும் உயரதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். வல்லத்திராக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். விபத்தில் பள்ளி மாணவர்கள் 8 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. உறவினர்களும் பொதுமக்களும் திரண்டுள்ளதால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு நிலவுகிறது.

0 Responses to “புதுக்கோட்டை அருகே பள்ளிக்கு மினி வேனில் லிப்ட் கேட்டு சென்ற 8 மாணவர்கள் நசுங்கி பலி”

Post a Comment

Viewers

Flag Counter
All Rights Reserved Ramnad2Day | 7Tech Template by S.S.KarT