17 July 2013

சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகளுக்கு பின் மின்சார வசதி பெற்ற மகாராஷ்டிரா கிராமம்

சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகளுக்கு பின் 

மின்சார வசதி பெற்ற மகாராஷ்டிரா கிராமம்



கட்சிரோலி (மகாராஷ்டிரா) :மகாராஷ்டிராவில் பழங்குடியின கிராமத்துக்கு, நாடு சுதந்திரம் அடைந்த, 65 ஆண்டுகளுக்கு பின், முதல் முறையாக, மின்சார வசதி கிடைத்துள்ளது. இந்த மகிழ்ச்சியை, பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும், கிராம மக்கள் கொண்டாடினர்.

மகாராஷ்டிராவில், காங்., - தேசியவாத காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது. காங்கிரசின் பிருத்விராஜ் சவான், முதல்வராக உள்ளார். இம்மாநிலத்தின், கட்சிரோலி மாவட்டத்தில் உள்ள, அடர்ந்த வன மற்றும் மலைப் பிரதேசங்களுக்கு நடுவில், கரான்சி என்ற குக்கிராமம் உள்ளது.

சிம்னி விளக்குகள்:

பழங்குடியின மக்கள் வசிக்கும் இந்த கிராமத்தில், மின்சார வசதியே இல்லை. மின்சாரம் இல்லாததால், தெரு விளக்குகள் இருப்பது இல்லை. வீடுகளில், மண்ணெண்ணெய் மூலம் எரியும், சிம்னி விளக்குகள் தான், கண் சிமிட்டும். தங்கள் கிராமத்துக்கு, மின்வசதி செய்து தரக் கோரி, இந்த கிராம மக்கள், ஒவ்வொரு அலுவலகமாக படியேறியும் பயன் கிடைக்கவில்லை."அடர்ந்த மலை மற்றும் வனப் பகுதிகளுக்கு நடுவில், மின் கம்பங்களை அமைத்தால் மட்டுமே, மின்சார வசதியை ஏற்படுத்த முடியும். 

அது, இப்போது சாத்தியமில்லை' எனக் கூறி, அதிகாரிகள், தட்டி கழித்து வந்தனர்.இந்நிலையில், கடும் முயற்சி, போராட்டங்கள் காரணமாக, நாடு சுதந்திரம் அடைந்து, 65 ஆண்டுகளுக்கு பின், முதல் முறையாக, இந்த கிராமத்துக்கு தற்போது, மின்சார வசதி கிடைத்துள்ளது. இதற்கான துவக்க விழா, சமீபத்தில் நடந்தது. முதல் முறையாக, தங்கள் கிராமத்துக்கு மின்சார வசதி கிடைத்துள்ளதை, அந்த கிராம மக்கள், பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும், மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.

மகிழ்ச்சி:

மகாராஷ்டிரா மின்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: 

                    கரான்சி கிராமம், இதுவரை இருளில் மூழ்கியிருந்தது. கிராம மக்களின் தொடர் முயற்சி காரணமாக, தற்போது, மின்சார வசதி ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. இதற்காக, மின்துறை அதிகாரிகள், மிகவும் சிரமப்பட்டனர். இந்த கிராமத்துக்கு மின்வசதி கிடைத்ததில், அங்குள்ள மக்களை விட, நாங்கள் தான் அதிகம் சந்தோஷப்படுகிறோம்.இவ்வாறு, அவர் கூறினார்.

0 Responses to “சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகளுக்கு பின் மின்சார வசதி பெற்ற மகாராஷ்டிரா கிராமம்”

Post a Comment

Viewers

Flag Counter
All Rights Reserved Ramnad2Day | 7Tech Template by S.S.KarT