17 July 2013

பெண் எஸ்ஐ கொலை வழக்கில் திடீர் திருப்பங்கள் கள்ளக்காதலன் உள்பட பல லட்சம் பெற்ற இன்ஸ்பெக்டரும் சிக்குகிறார்

பெண் எஸ்ஐ கொலை வழக்கில் பரபரப்பு திருப்பங்கள்
கொலையை மறைக்க பல லட்சம் பெற்ற இன்ஸ்பெக்டரும் சிக்குகிறார்



சென்னை :
மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் மாயமான பெண் எஸ்ஐ கொலை செய்யப்பட்ட வழக்கில் கள்ளக்காதலன் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலையை மறைக்க உடந்தையாக இருந்த இன்ஸ்பெக்டர் உள்பட மேலும் 2 பேர் சிக்குகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம், மேல்மருவத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய எஸ்ஐ கலைவாணி (25). கடந்த 2010 ஆகஸ்ட் 26ம் தேதி முதல் மாயமானார். இதுகுறித்து மேல்மருவத்தூர் காவல் நிலையத்தில் கணவர் சுரேஷ்குமார் புகார் அளித்தார். தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தியும் கலைவாணி பற்றி துப்பு கிடைக்கவில்லை.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையத்தை சுற்றி உள்ள பகுதிகளில் பழைய வாகனங்களை போலீசார் அப்புறப்படுத்தினர்.
அங்கு அனாதையாக நின்ற ஸ்கூட்டி ஒன்றில், 3 ஆண்டுகளுக்கு முன்னர் மாயமான எஸ்ஐ கலைவாணி பெயரில் ஆர்சி புத்தகம் இருந்தது. அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் உடனடியாக மேல்மருவத்தூர் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

காஞ்சிபுரம் எஸ்பி விஜயகுமார் தலைமையில் மீண்டும் விசாரணை முடுக்கி விடப்பட்டது. கலைவாணியின் செல்போனை மீண்டும் ஆய்வு செய்தபோது, திருவள்ளூர் மாவட்டம் கனகம்மா சத்திரத்தை சேர்ந்த வக்கீல் ஒருவரிடம் குமாஸ்தாவாக வேலை செய்த வெங்கடேசன் என்பவர் சிக்கினார். அவரை பிடித்து போலீசார் விசாரித்தபோது பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.

அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், எஸ்ஐயுடன் எனக்கு கள்ளத் தொடர்பு இருந்தது. பல்வேறு இடங்களுக்கு சென்று உல்லாசமாக இருந்தோம். திருமணத்திற்கு தொடர்ந்து வலியுறுத்தியபோது விரக்தி அடைந்த நான் சுற்றுலாவுக்காக வேலூரில் இருந்து வாலாஜா அழைத்து செல்வதாக கலைவாணியை அழைத்து சென்றேன்.

பின்னர் ஓடும் காரில் இருந்து கீழே தள்ளி கொலை செய்தேன்.

கலைவாணி இறந்த உடன் அவரது சடலத்தை அப்புறப்படுத்த முடிவு செய்தேன். உதவிக்கு நண்பரான சுப்பனை அழைத்தேன். அவரும் நானும் இரவு 10 மணி அளவில் வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த களத்தூர் பாலாற்றில் குழி தோண்டி பிணத்தை புதைத்தோம். முன்னதாக எஸ்ஐயின் போலீஸ் சீருடையை கழற்றி நிர்வாணமாக புதைத்தோம் என்று கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

கொலை பற்றி அங்கு எஸ்ஐயாக இருந்த ஒருவருக்கும் தெரிந்துள்ளது. ஆனால், கொலை பற்றி தகவல் வெளியிடாமல் இருக்கவும், தொடர்ந்து தேடுதல் வேட்டையை நிறுத்தி வைக்கவும் பல லட்சம் ரூபாயை அவருக்கு வெங்கடேசன் கொடுத்துள்ளதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. சம்பந்தப்பட்ட அந்த எஸ்ஐ தற்போது பதவி உயர்வு பெற்று ஆவடி எல்லைக்கு உட்பட்ட காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக உள்ளார். அவரிடமும் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
எஸ்ஐ கொலையில் பல தொடர் திருப்பங்கள் ஏற்பட்டு இருப்பது போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கள்ளக்காதலனுக்கு ரூ.5 லட்சம் செலவு செய்த பெண் எஸ்ஐ

மேல்மருவத்தூர் பெண் எஸ்ஐ கலைவாணி கொலை செய்து புதைக்கப்பட்ட காவேரிப்பாக்கம் களத்தூர் பகுதிக்கு அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் வந்திருந்தனர். அப்போது, செய்யாறு பகுதியை சேர்ந்த உறவினர் தனசேகர் என்பவர் கூறியதாவது:  கலைவாணி குடும்பத்தினர் காஞ்சிபுரம் அடுத்த திருக்காலிமேடு பகுதியில் வசித்தனர். அவரது தந்தை கந்தசாமி பொதுப் பணித்துறையில் அலுவலக உதவியாளராக வேலை செய்து ஓய்வு பெற்றவர். கலைவாணியை செய்யாறு அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நான்தான் எம்.காம் படிக்க சேர்த்து விட்டேன். படிப்பு முடிந்த ஒரு வருடத்தில் அவருக்கு எஸ்ஐ பணி கிடைத்தது.

அரக்கோணம் அருகில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் பணியில் சேர்ந்தார். பின்னர் காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு இடமாற்றம் பெற்று சென்றார். வேலையில் சேர்ந்த 6 மாதத்தில் வந்தவாசி அருகே உள்ள  கிராமத்தை சேர்ந்த கட்டிட கான்ட்ராக்டர் சுரேஷ்குமார் என்பவருடன் திருமணம் நடந்தது.  கான்ட்ராக்ட் தொழிலில் சுரேஷ்குமாருக்கு நல்ல வருமானம் கிடைத்தது. அதனால், எஸ்ஐ வேலையை விட்டுவிடும்படி மனைவியிடம் அவர் கூறினார். ஆனால், கலைவாணி எஸ்ஐ வேலையை விட பிடிவாதமாக மறுத்து விட்டார். காஞ்சிபுரம் எம்ஜிஆர் நகரில் ரூ.1 கோடி மதிப்பில் வீடு கட்டி தம்பதியினர் குடியேறினர்.

இதற்கிடையில்தான் வக்கீல் குமாஸ்தா வெங்கடேசனுடன் கலைவாணிக்கு பழக்கம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த மேல் அதிகாரிகள் அவரை உத்திரமேரூர் காவல் நிலையத்துக்கு இடமாற்றம் செய்தனர். பின்னர், மேல்மருவத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

கலைவாணி வீட்டில் உள்ளவர்கள் யாருக்கும் சொல்லாமல் அடிக்கடி விடுப்பு எடுத்துள்ளார். இதுகுறித்து சுரேஷ்குமார் கேட்டபோது, ''நான் அப்படித்தான் நடந்துகொள்வேன். எஸ்ஐ ஆக இருப்பதால் எனக்கு யாரும் புத்திமதி  கூற வேண்டாம்'' என தெரிவித்துள்ளார். கணவரின் பணம் ரூ.5 லட்சத்தை தனது கள்ளக்காதலன் வெங்கடேசனுக்கு தண்ணீராக செலவழித்துள்ளார். சம்பள பணத்தையும் வீட்டுக்கு கொடுக்கமாட்டார்.  கலைவாணி காணாமல் போன அன்று இரவு 7 மணிக்கு வீட்டுக்கு போன் செய்து ''சிறிது நேரத்தில் வீட்டுக்கு வந்து விடுவேன்'' என கூறியுள்ளார்.

அதன் பின்னர் அவர் வரவில்லை. அவரை கண்டுபிடித்து கொடுக்குமாறு முதல்வரின் தனிப்பிரிவு, அப்போதைய வடக்கு மண்டல ஐஜி சைலேந்திரபாபு ஆகியோரிடம் புகார் அளித்தோம்.  அப்போது கலைவாணியும், வெங்கடேசனும் அந்தமானில் இருப்பதாக கூறினார்கள். அதை நாங்கள் நம்பி விட்டோம். கலைவாணி கொலை செய்யப்பட்டதை பத்திரிகையில் பார்த்துதான் தெரிந்து கொண்டோம். இவ்வாறு அவர் கூறினார்.

சீருடைக்கு பூஜை

கொலை செய்யப்பட்ட எஸ்ஐயின் போலீஸ் சீருடை, பெல்ட், தொப்பி, ஸ்டார் போன்றவற்றை வெங்கடேசன் ஆந்திராவுக்கு எடுத்து சென்று அங்கு தங்கி இருந்த வீட்டில் வைத்துள்ளார். அதை வைத்து தினமும் பூஜை செய்துள்ளார். சீருடைக்கு பூஜை செய்ய வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வி போலீசாருக்கு எழுந்துள்ளது.

சடலம் புதைக்கப்பட்ட இடத்தை கண்டுபிடிப்பதில் புதிய சிக்கல்

கலைவாணியின் சடலத்தை தோண்டி எடுக்க தனிப்படை போலீசார் முடிவு செய்தனர். அதன்படி, காவேரிப்பாக்கம் அருகே உள்ள களத்தூர் கிராமத்துக்கு வெங்கடேசனை போலீசார் பலத்த பாதுகாப்புடன் நேற்று அழைத்து வந்தனர். மதுராந்தகம் டிஎஸ்பி ராஜேந்திரன், அரக்கோணம் தாசில்தார் கார்த்திகேயன், காவேரிப்பாக்கம் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம், தனிப்படை இன்ஸ்பெக்டர் ராஜேந்திர பிரசாத், வாலாஜா அரசு மருத்துவமனை டாக்டர்கள் உஷா நந்தினி, அச்சுதன் ஆகியோர் முன்னிலையில்,  பொக்லைன் மூலம் சடலத்தை தேடும் பணி பகல் 12 மணிக்கு தொடங்கியது.

2.30 மணியளவில் ஒரு வெள்ளி கொலுசு மட்டும் கிடைத்தது. அதை கலைவாணியின் தந்தை கந்தசாமி, தாய் லலிதா ஆகியோரிடம் போலீசார் காண்பித்தனர். ஆனால், அது தங்களது மகளுடையது என்பதை அவர்கள் உறுதி செய்யவில்லை. இதனால், சடலத்தை தேடும் பணி தொடர்ந்தது.

கலைவாணியின் சடலம் புதைக்கப்பட்ட இடத்தை வெங்கடேசனால் சரியாக அடையாளம் காட்ட முடியவில்லை. வேறு வழியில்லாமல் அந்த பகுதி முழுவதையும் தோண்டிப்பார்க்க போலீசார் முடிவு செய்தனர். இதற்காக காஞ்சிபுரத்தில் இருந்து மற்றொரு பொக்லைன் வரவழைக்கப்பட்டது. மாலை வரை சடலத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. அதன்பிறகு தோண்டும் பணி நிறுத்தப்பட்டது. மீண்டும் இன்று சடலத்தை கண்டுபிடிக்கும் பணி தொடர்ந்து நடைபெறும் என்று போலீசார் தெரிவித்தனர். களத்தூர் அருகே புதைக்கப்பட்ட எஸ்ஐ கலைவாணியின் சடலத்தை தோண்டும் பணி நடந்ததால் ஏராளமான பொதுமக்கள் அந்த பகுதியில் நின்று வேடிக்கை பார்த்தனர்.

0 Responses to “பெண் எஸ்ஐ கொலை வழக்கில் திடீர் திருப்பங்கள் கள்ளக்காதலன் உள்பட பல லட்சம் பெற்ற இன்ஸ்பெக்டரும் சிக்குகிறார்”

Post a Comment

Viewers

Flag Counter
All Rights Reserved Ramnad2Day | 7Tech Template by S.S.KarT