24 August 2013

பாழடைந்த மில்லில் போட்டோ எடுக்க சென்ற பத்திரிகை நிருபர் பலாத்காரம்

பாழடைந்த மில்லில் போட்டோ எடுக்க சென்ற  
பத்திரிகை நிருபர் பலாத்காரம்



மும்பை:
மும்பையில் பாழடைந்த மில்லில் போட்டோ எடுக்க சென்ற பெண் நிருபரை 5 பேர் கும்பல் கொடூரமாக பலாத்காரம் செய்தது. அவருடன் சென்ற ஆண் நண்பர் தாக்கப்பட்டார்.

மும்பையில் வெளியாகும் மாத பத்திரிகை ஒன்றில் 22 வயது இளம்பெண் போட்டோகிராபராக பணியாற்றி வருகிறார். மும்பையில் உள்ள மூடப்பட்ட மில்கள் பற்றிய கட்டுரைக்கு போட்டோ எடுக்கும் பணி இவருக்கு ஒதுக்கப்பட்டது. நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் இந்த பெண்ணும், அவருடைய ஆண் நண்பரும் மகாலஷ்மி ரயில் நிலையம் அருகில் உள்ள பாழடைந்த சக்தி மில் வளாகத்துக்குள் போட்டோ எடுக்க சென்றனர். அங்கிருந்த 5 பேர், ‘இங்கு யாரும் வரக்கூடாது. முறைப்படி அனுமதி பெற்றுதான் படம் எடுக்க வேண்டும்’ என்று கூறினர். மேலும், இளம்பெண்ணை தகாத வார்த்தைகளால் வர்ணித்தனர். இதை தட்டிக்கேட்ட ஆண் நண்பரை சரமாரியாக அடித்து உதைத்து, பெல்ட்டால் ஒரு தூணில் கட்டி போட்டனர்.

பின்னர், இளம்பெண்ணை புதர்கள் அடர்ந்த பகுதிக்கு தூக்கிச் சென்ற 5 பேரும் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்து விட்டு தப்பினர். ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி என்பதால் இளம்பெண்ணும். நண்பரும் உதவி கோரி கூச்சலிட்டும் பலன் இல்லாமல் போனது. பிறகு இளம்பெண்ணும், நண்பரும் மில் வளாகத்தில் இருந்து தப்பி, டாக்சியை பிடித்து மருத்துவமனைக்கு இரவு 9 மணிக்கு வந்து சேர்ந்தனர். அங்கு தனக்கு நேர்ந்த கொடுமையை இளம்பெண் கூறியதும், போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்தனர். இளம்பெண் கூறிய அடையாளங்களை வைத்து குற்றவாளிகளின் படத்தை வரைந்து நேற்று காலை வெளியிட்டனர். படுகாயம் அடைந்துள்ள இளம்பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவருடைய நிலைமை மோசமாக உள்ளதாக டாக்டர்கள் கூறினர்.

குற்றவாளிகளை பிடிக்க 20 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி குற்றவாளிகளில் ஒருவனை நேற்று காலை கைது செய்தனர். விசாரணையில் அவன் உண்மையை ஒப்புக் கொண்டுள்ளான். மற்ற 4 குற்றவாளிகள் யார் என்பது தெரிந்து விட்டது, அவர்களுக்கு போலீசார் வலைவீசி உள்ளனர். 

இவர்கள் அனைவரும் 20 முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்கள்.இதற்கிடையே, மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.பாட்டீல் மருத்துவமனைக்கு நேற்று காலை சென்று பாதிக்கப்பட்ட பெண்ணை பார்த்தார். பின்னர் அவர் கூறுகையில், ‘‘இந்த சம்பவம் மிக பயங்கரமானது. இந்த சம்பவத்தை அரசு கடுமையாக எடுத்து கொண்டுள்ளது. குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்’’ என்றார்.டெல்லியில் சில மாதங்களுக்கு முன் பஸ்சில் சென்ற மருத்துவ மாணவியை 6 பேர் கொண்ட கும்பல்  கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்தது. பின்னர், சிகிச்சை பலனின்றி அந்த பெண் இறந்தார்.  இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

முதல்வர் கண்டனம்

முதல்வர் பிருத்விராஜ் சவான் கூறுகையில், ‘‘இந்த கொடூர சம்பவம் மாநிலத்துக்கு ஏற்பட்டுள்ள பெரிய களங்கம். குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது. பாதிக்கப்பட்ட இருவரின் மருத்துவ செலவை அரசு ஏற்கும்’’ என்றார்.இந்த சம்பவத்துக்கு சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


போதை ஆசாமிகள் கூடாரம்

மகாலஷ்மி ரயில் நிலையம் அருகில் உள்ள சக்தி மில், மும்பையில் இயங்கி வந்த பிரபலமான மில்களில் ஒன்று. 25 ஆண்டுகளுக்கு முன்பே மூடப்பட்டு விட்ட இந்த மில் வளாகத்தில் கஞ்சா, அபின் போன்றவற்றை உபயோகிக்கும் போதை ஆசாமிகள் எப்போதும் இருப்பது வழக்கம். பொதுமக்கள் யாரும் அங்கு செல்வதில்லை. எப்போதாவது சினிமா சண்டை காட்சிகள் இங்கு எடுக்கப்படுவது உண்டு.

குற்றவாளிகள் யார்?

இளம்பெண்ணை பலாத்காரம் செய்த 5 பேரும், சக்தி மில் அருகில் உள்ள குடிசைப் பகுதியை சேர்ந்தவர்கள் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அவர்களில் முகமது அப்துல் என்ற சாந்த் கைது செய்யப்பட்டுள்ளான். விஜய் ஜாதவ், காசிம் பெங்காலி, சலீம், அஸ்பாக் ஆகியோர் தேடப்பட்டு வருகின்றனர்


0 Responses to “பாழடைந்த மில்லில் போட்டோ எடுக்க சென்ற பத்திரிகை நிருபர் பலாத்காரம்”

Post a Comment

Viewers

Flag Counter
All Rights Reserved Ramnad2Day | 7Tech Template by S.S.KarT